Thursday, 3 May 2012

எகிப்திய கல்வெட்டு ஒன்றிலிருந்து...
ஒரு முதிய அலுவலர் தம் மகனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்துள்ள

கல்வெட்டொன்று அக்கால எகிப்திய  தொழில்களையும், தொழிலாளர்களின்

 நிலைமையையும் அறிய  உதவுகிறது: 

"உழவரது நிலையை எண்ணிப் பார்த்ததில்லையா நீ? விளைச்சல் வரியை

வசூலிப்பவர் கருமமே கண்ணாய்ச் செயல்படுவார். அவருக்கு

உதவியாளராய்க் கையில் கம்புடன் சிலர், பனங்கருக்குடன் வேறு

சிலர். "கொடு, கொடு. தானியங் கொடு!" என்று அவர்கள் அதட்டுவார்கள்.

உழவரால் தரமுடியவில்லையெனில் அவரைக் கீழே தள்ளிக் கை

கால்களைக் கட்டி வாய்க்காலுக்கு இழுத்துப் போய்த் தலைகீழாய் நீரில்

அமிழ்த்துவார்கள். 

கைத்தொழிலாளர் பாடும் மேம்பட்டதல்ல. தீயின் அருகில் உழைக்குங்

கொல்லரின் கைகள் முதலைத் தோலால் பண்ணப்பட்ட பொருள்கள்

போலக் கரடு முரடாக இருக்கின்றன. கல் உடைப்பவர் விடியலிலேயே

குந்திவிடுகிறார் வேலை தொடங்க; அவருடைய முழங்கால்களும்

முதுகெலும்புகளுஞ் சீர்கெடுகின்றன. முடி வெட்டுபவர் நாள் முழுதும்

மழிக்கிறார்; சாப்பிடும் நேரம் மட்டுந்தான் ஓய்வு. கொத்தரோ வெட்ட

வெளியில் நின்றும் தூண்களிலும் உத்தரங்களிலும் தொற்றிக்கொண்டும்

வேலை செய்வதால் கைகள் காய்ப்பு ஏறிவிடுகின்றன; உடைகள்

அலங்கோலம் அடைகின்றன; ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமே

குளிக்கிறார். நெசவாளி வீட்டை விட்டு நகர்வதில்லை. அவருடைய

முழங் கால்கள் வயிற்றில் முட்டுகின்றன. செய்தித் தூதர்

வெளிநாடுகளுக்குப் புறப்படுகிறபோது உயில் எழுதிவிட வேண்டியதுதான். 

காட்டு விலங்குகளும் பகைவர்களும் எதிர்ப்படுவார்களே! எகிப்துக்குத்

திரும்பி வந்தால்கூட அடுத்த கணமே மறு பயணங் கிளம்ப வேண்டி

வரும். சாயந்தோய்ப்பவரின் கைகள் அழுகிய மீனின் வாசனை வீசுகின்றன;

அவருடய கண்கள் களைப்பால் குழி விழுந்து விடுகின்றன. ரொட்டி

சுடுபவர் ரொட்டிகளை அடுப்புக்குள் வைக்கும்போது தலையை உள்ளே

நுழைக்கிறார்; அவருடைய கால்களைப் பிடித்திருக்கிற மகன் கொஞ்சம்

பிடியைத் தளர்த்தினால் தந்தை தீயில் விழுந்து விடுவார். 

ஆதலால் கல்வியைக் கற்றுக்கொள். எல்லாத் தொழில்களையும் நான்

சீர்தூக்கிப் பார்த்துவிட்டேன். படிப்பைவிட மேலானது எதுவுமில்லை."

***********************************************************************************************

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வியின் பெருமையை உணர்த்தும் வரிகள். ('மறைந்த நாகரிகங்கள்' நூலிலிருந்து)

சமீபத்தில் வெளிவந்த என்னுடைய ஆறாவது நூலாகிய 'மறைந்த நாகரிகங்கள்' புத்தகத்தைத்  தரவிறக்கம் செய்து படிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.

2 comments:

  1. அனைவரும் அறிந்துகொள்ளவேண்டிய பண்டைய நாகரிகங்கள் பற்றிய அரும்பெரும் தகவல்களை, பெரும் சிரத்தையுடன் தொகுத்தளித்து வழங்கியமைக்கு மிகவும் நன்றி. படிக்கப் படிக்க வியப்பில் விரிகிறது உள்ளம். மேலே கொடுக்கப்பட்டிருக்கும் சிறு பகுதியே பெரும் சான்று. தங்களுக்கு மனம் நிறைந்த நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete
  2. அந்தக்காலத்திலேயே விழுமிய நாகரிகங்கள் தோன்றி வளர்ந்த செய்திகளை மிகவும் அருமையாகத் தொகுத்தளித்துள்ளீர்கள். மிகவும் தரமான நடை. பாராட்டுக்கள்.
    தரவிறக்கம் ட்செய்ய இணைப்புக் கொடுத்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete