Friday 1 March 2013

புதுச்சேரி மாநிலம்


 
என் மாநிலம் பற்றிய சில செய்திகளை இங்கே பதிகிறேன். 

மாநிலம் என்கிறோமே தவிர அதிகார பூர்வப் பெயர் யூனியன் பிரதேசம் (Union Territory )  இந்தியாவின் ஏழு யூனியன் பிரதேசங்களுள் புதுச்சேரியும் ஒன்று. யூனியன் பிரதேசத் தலைவர் துணைநிலை ஆளுநர் எனப்படுகிறார்.  

யூ. பிரதேசங்களில் சட்டப் பேரவை, சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளனர்; ஆனால் சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. பேரவை கூடி விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பவேண்டும்:  

நாடாளுமன்றம் ஏற்றால் சட்டமாகும். என் மாநிலத்தில் 30 சட்ட மன்ற உறுப்பினர்கள், 5 அமைச்சர்கள் இருக்கின்றனர்; தில்லி மக்களவைக்கும் மாநிலங்கள் அவைக்குமாக 2 உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒன்றற்கொன்று தொலைவில் உள்ள நான்கு பகுதிகளாய்ச் சிதறிக் கிடக்கிறது. 

1. புதுச்சேரிப் பகுதி -- கடலூர்க்கு வடக்கில், திண்டிவனத்துக்குத் தெற்கில், விழுப்புரத்திற்கு மேற்கில், கடலை ஒட்டி அமைந்துள்ள இதன் மக்கள் தொகை: 9 ½  லட்சம். இப் பகுதி தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. அரியாங்குப்பத்துக்கு அருகில் அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வுகள் பொ. யு. மு. முதல் நூற்றாண்டில் ரோமானியருடன் வாணிகத் தொடர்பு இருந்ததை வெளிப்படுத்தின; அங்குக் கிடைத்தவை ரோமானிய மாமன்னன் அகஸ்டசின் உருவம் பொறித்த நாணயங்கள், மதுச் சாடிகள் முதலியவை.
 
வரலாறு எழுதாத தமிழினத்தில் தோன்றி, 1736 முதல் 1961 வரைக்குமான 25 ஆண்டுக்கு, தம் நாட்குறிப்பில் பலப்பல வரலாற்று நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்திய ஆனந்த ரங்கப் பிள்ளை ( 1709 - 1761 ) யைப் பெற்ற பெருமை இப் பகுதிக்கு உண்டு; நகரின் மையப் பகுதியில் அவரது இல்லம் இருக்கிற தெரு அவருடைய பெயரைத் தாங்கி நிற்கிறது. அவருடைய நாட்குறிப்பு 12 தொகுதிகளாய் அச்சிடப்பட்டிருக்கிறது; தமிழ், தெலுங்கு, மலையாளம், வடமொழி, பிரஞ்சு, போர்த்துகீசியம் எனப் பலமொழி அறிந்த அவர் பெருஞ் செல்வராயும் வாணிகராயும் விளங்கியதோடு பிரஞ்சுக்காரர்க்கு மொழிபெயர்ப்பாளர் பணியும் ஆற்றினார். 

கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய தம் முப்பெரும் பாடல்களை இயற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலையைப் பெற்றமை ஆங்கிலேயரின் கைக்கு எட்டாமல் இங்கே நிம்மதியாய்த் தங்கியிருந்த பத்தாண்டு காலத்தில் தான் ( 1908 - 1918 ) . இந்திய சுதந்தரப் போராட்ட வீரர் அரவிந்தர், வெள்ளையரின் அடக்குமுறைக்குத் தப்பி, வங்கத்திலிருந்து இங்கு அடைக்கலம் புகுந்து (1910 ) காலப் போக்கில் ஆன்மிகத்தில் ஆர்வமுற்று ஆஸ்ரமம் அமைத்து நிரந்தரமாய் வாழ்ந்து மறைந்தார். 

இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத, ஆறு மொழி கொண்ட அறிவிப்புப் பலகையை நகரின் சில இடங்களில் பார்க்கலாம்: தமிழ், தெலுங்கு (ஏனாம் மொழி), மலையாளம் (மாயே), இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு (இங்கு வாழும் பிரஞ்சுக் குடிகளின் மொழி) 

2 - காரைக்கால் பகுதி - புதுச்சேரி நகரத்திற்குத் தெற்கே, 150 கி. மீ. தொலைவில் இருக்கிற இதன் நான்கு எல்லைகள்: வடக்கில் தரங்கம்பாடி, தெற்கில் நாகூர், மேற்கில் பேரளம், கிழக்கில் கடல். 

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதவதி என்ற காரைக்காலம்மையார், முதல் பக்தி நூல்களான மூத்த திருப்பதிகம், அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை ஆகியவற்றை இயற்றியவர். அவை சைவ சமயத் திருமுறைகளில் இடம் பெற்றுள்ளன. காரைக்கால் நகருக்கு மேற்கே 5 கி. மீ. தொலைவில் எழுப்பப்பட்டிருக்கும் தெர்ப்பாரண்யேஸ்வரர் (தமிழில் நள்ளாறன்) கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவார மூவராலும் பாடப்பெற்ற பெருமை கொண்டது. 

இந்த ஆலயத்தின் சனீஸ்வரன் தொடர்பான சனிப்பெயர்ச்சி விழா 2 ½  ஆண்டுக்கு ஒரு தடவை நிகழும்போது தமிழகம் முழுதிலிருமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். காரை நகரின் வடக்கெல்லையாகிய கோவில்பத்து என்னும் சிற்றூரில் உள்ள பார்வதீஸ்வரன் கோயில் சம்பந்தரால் பாடப்பட்ட சிறப்புப் பெற்றது. 

3 - ஏனாம் பகுதி ( Yanam ) - 55 000 பேர் வாழும் இது ஆந்திரத்தில் காக்கினாடாவுக்குத் தெற்கே, புதுச்சேரிக்கு 900 கி. மீ. அப்பால் இருக்கிறது.

4 - மாயே பகுதி ( Mahe ) - கேரளத்தின் கோழிக்கோட்டுக்கு வடக்கில் 42 000 மக்களைக் கொண்ட இதற்கும் புதுச்சேரிக்கும் இடையே 500 கி. மீ. தொலைவு. 

இவையன்றி வங்கத்தில் கொல்கொத்தாவுக்கு 30 கி . மீ. தூரத்தில் உள்ள சந்தன் நகர் என்னும் பகுதியும் சேர்ந்து பிரஞ்சிந்தியா என்ற பெயரில் பிரெஞ்சுக்காரரிடம் அடிமைப்பட்டுக்கிடந்தன. தமிழில் சந்திர நாகூர் எனச் சுட்டப்பட்ட அப் பகுதி விடுதலைப் போராட்டத்தில் மிகத்தீவிரமாய் ஈடுபட்டமையால் ஆட்சியாளர் வாக்கெடுப்பு நடத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். பெருவாரி மக்கள் சுதந்தரத்துக்கு ஆதரவாய் வாக்களித்ததால் 1955 இல் இந்தியாவுடன் இணைந்தது. 

மற்ற 4 பகுதிகளும் 1962 இல் விடுதலை பெற்றன. 
 
(படம் உதவி; இணையம்)
============================================

2 comments:




  1. விளக்கமான செய்திகள் ஐயா... நன்றி...

    புதிய பகிர்வை இட்டுள்ளேன் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

      Delete