Friday 28 June 2013

கலித்தொகைக் காட்சி 2


தலைவனுடன் தலைவி ஓடிவிட்டாள். (இதை இலக்கியம் உடன்போக்கு என்று சுட்டும்). மகளைத் தேடி அலைந்த தாய், வழியிற் சந்தித்த அந்தணரிடம், "என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் சேர்ந்துபோகக் கண்டீரா? " என வினவினாள். அவர் விடை இறுத்தார்:

"கண்டேன்; அவளைக் குறித்து வருந்தாதீர்.

மலையில் விளைந்த சந்தனத்தால், அந்த மலைக்கு என்ன பயன்?
பூசுபவர்க்கு அல்லவோ இன்பம்?

நீரில் தோன்றிய முத்தால், நீர்க்கு என்ன நன்மை
அணிபவர்க்குத்தான் அது பயன்படும்;

யாழில் பிறந்த இசை, யாழ்க்கு என்ன இனிமை பயக்கும்
மீட்டுபவரைத்தானே மகிழ்விக்கும்?

அதுபோல் நீர் பெற்ற மகள், தான் தேடிக்கொண்ட துணைவனுக்கே உரியவள்"

கருத்தை விளக்க எவ்வளவு எளிய, தேர்ந்த காட்டுகள்!



ஆர்வம் உள்ளோர் வாசித்துச் சுவைக்க:

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுளே பிறப்பினும் மலைக்கவைதாம் என்செய்யும்?
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே.

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்குஅவைதாம் என்செய்யும்?
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே.

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே.
( பா 9 )

=============================

3 comments:

  1. எதார்த்தத்தை ததுவார்த்ததை மிக எளிமையாக படம் பிடித்து காட்டும் காட்சி இன்றைய பெற்றோருக்கு தேவையானதும் கூட வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை ஐயா... நன்றி...


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete

  3. பெற்றெடுத்த பெண் யாருடனாவது ஓடிப்போனால் கவலை கொள்ளலாகாது. நம் முன்னோர் எல்லாம் முற்போக்கு வாதிகளே.!

    ReplyDelete