Sunday, 18 August 2013

கருமி (தொடர்ச்சி 3)

  
அங்கம் - 1  காட்சி - 4  (தொடர்ச்சி)

பாத்திரங்கள் :
அர்ப்பாகோன் - பெருஞ் செல்வர்கடைந்தெடுத்த கருமி.  
எலீஸ் - மகள் 
(மகனும் மரியானும் காதலர்; எலீஸ் வலேரை விரும்புகிறாள். இருகாதலும் அர்ப்பாகோனுக்குத் தெரியாது)


அர்ப்பாகோன் வலேர், நீ சொல்லு. எனக்கும் மகளுக்கும் ஒரு தகராறு. யார் பக்கம் நியாயம் என்று சொல்வாயா?

வலேர்  நிச்சயமாக உங்கள் பக்கந்தான் நியாயம்.

அர்ப்பாகோன்- எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நீ நன்றாக அறிவாயா?

வலேர்  இல்லை, ஆனால் நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள்.

அர்ப்பாகோன்இன்று மாலை இவளுக்கு ஒரு நல்ல மற்றும் பணக்கார மனிதரைக் கணவராக்க விரும்புகிறேன். இவளோ, மாட்டேன் என்று என் முகத்துக்கு எதிராகச் சொல்லுகிறாள். நீ என்ன சொல்கிறாய்?

வலேர்  நான் சொல்வதா?

அர்ப்பாகோன்ஆமாம்.

வலேர்  -  பொதுவாக உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். நீங்கள் சொல்வது எப்போதும் சரியானது என்றும் சொல்கிறேன். ஆனாலும் அவள் கருத்து  அடியோடு தவறல்ல...

அர்ப்பாகோன்-என்னது? ஆன்சேல்ம் பிரபு பெருந்தன்மை உள்ளவர், உயர்வானவர், பணக்காரர். முதல் கல்யாணத்துப் பிள்ளைகளை இழந்தவர். அவரைவிட மேலானவர் கிடைப்பாரா?

வலேர்  அது மெய்தான். இவள் உங்களிடம் கூறக்கூடும் இது கொஞ்சம் அவசரப்படுவதுசிறிது காலம் வேண்டும் தன்னால் ஒத்துப்போக முடியுமா என்று யோசிக்க ...

அர்ப்பாகோன்உடனே பிடித்துக்கொள்ள வேண்டிய வாய்ப்பு இது . வேறெங்கும் காணமுடியாத ஒரு சாதக அம்சத்தை இதில் காண்கிறேன். வரதட்சணை இல்லாமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்கிறார்.

வலேர்  -  வரதட்சணை இல்லாமல்!

அர்ப்பாகோன்ஆமாம்.

வலேர்  ! இனி நான் சொல்ல ஒன்றுமில்லை. இது மிக வலுவான காரணம்.     இதை ஏற்க வேண்டியதுதான்.

அர்ப்பாகோன்எனக்கு இது கணிசமான சேமிப்பு.

வலேர்  -  கண்டிப்பாக; எதிர்க் கருத்துக்கு இடமில்லை. உஙகள் மகள் உங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடும், கல்யாணம் என்பது மிக முக்கியமான விவகாரம், வாழ்க்கை முழுதும் இன்பம் அல்லது  துயரம் தருவது, வாழ்நாள் முழுவதுக்குமான ஓர் ஏற்பாட்டை ஆழ்ந்த முன்னெச்சரிக்கையுடன் தீர்மானிக்க  வேண்டும் என்று.

அர்ப்பாகோன்வரதட்சணை இல்லை!

வலேர்  -  நீங்கள் சொல்வது சரிஇது எல்லாவற்றையும் முடிவு செய்கிறது.   சிலர் இருக்கிறார்கள், அவர்கள் உங்களிடம் சொல்லலாம், இந்த மாதிரி விஷயத்தில் பெண்ணின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வயது, விருப்பு வெறுப்பு, உணர்ச்சிகள் ஆகியவற்றில் இருவர்க்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாடு இந்த மணத்தில் வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்.

அர்ப்பாகோன்வரதட்சணை இல்லையே!

வலேர்  -  ! இதற்கு மாற்றுக் கருத்து இல்லை. இது  எல்லார்க்கும் நன்றாகத் தெரியும்; இதை ஏற்காதவர் யார் இருப்பார்? என்றாலும் நிறையத் தந்தைமார்கள் பணத்தைக் காட்டிலும் புதல்விகளின் திருப்தியே மேலானது எனக் கருதுகிறார்கள்; தன்னலத்துக்காகப் பெண்களைப் பலி கொடுக்க விரும்பாத அவர்கள், ஒரு கல்யாணத்தில்மற்ற எல்லாவற்றையும்விட, மனப்  பொருத்தத்தைத் தேடுகிறார்கள்இந்தப் பொருத்தந்தான் மகிழ்ச்சி நிம்மதி கெளரவம் முதலானவற்றை நிரந்தரமாகத் தரும் என்பது அவர்களின் முடிவு. மேலும்  ...

அர்ப்பாகோன்-  (தோட்டத்துப் பக்கம் பார்த்து) தமக்குள்: அங்கே ஒரு நாய் குரைப்பது என் காதில் விழுவதாகத் தோன்றுகிறது. என் பணத்தைக் குறி வைக்கிறார்களோ?

   வலேரிடம் : இங்கேயே இரு. இதோ வந்துவிடுகிறேன்.

                        (போகிறார்)
                                                                           (முடிந்தது)
                                     +++++++++++++++++++++++

.1 comment:

  1. வலேரின் பேச்சிலிருக்கும் நையாண்டியையும் புரிந்துகொள்ளும் நிலையில் அர்ப்பாகோன் இல்லை. வாசிப்போருக்கு முறுவல் உண்டாக்கும் வசனங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி தங்களுக்கு.

    ReplyDelete