Saturday, 3 August 2013

கருமி (தொடர்ச்சி)

     
அங்கம்  1  காட்சி  4
                                          
பாத்திரங்கள் :
அர்ப்பாகோன் - பெருஞ்செல்வர், கடைந்தெடுத்த கருமி.
கிளையாந்த்து- மகன்
எலீஸ் - மகள்

மகனும்  மரியானும்  காதலர்;   எலீஸ்  வலேரை  விரும்புகிறாள்.  இரு  காதலும்  அர்ப்பாகோனுக்குத்  தெரியாது)

அர்ப்பாகோன்:  (தனிமொழி):

ஒரு பெருந்தொகையை வீட்டில் வைத்துக் காப்பதென்பது மெய்யாகவே கொஞ்ச நஞ்சக் கஷ்டமல்ல. பாக்கியவான், தன் பணத்தை நல்ல முதலீட்டில் செலுத்திவிட்டு அன்றாடச் செலவுக்கு மட்டும் சிறு தொகையை வைத்திருப்பவன். நம்பிக்கையான ஒரு மறைவிடத்தை வீட்டில் உண்டாக்குவது சங்கடமான வேலை. இரும்புப் பெட்டிகள் சந்தேகத்துக்கு உரியவை. அவற்றை நம்ப நான் ஒருபொழுதும் விரும்பமாட்டேன். திருடர்களைக் கவர்பவை அவை என்று சரியாகக் கருதுகிறேன். அவைதான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகும். நேற்றுத் திரும்பப் பெற்ற முப்பதாயிரம் பிரானைத் தோட்டத்தில் புதைத்து வைத்திருப்பது சரிதானா என்பது தெரியவில்லை.

( மகனும் மகளும் நுழைகிறார்கள். தந்தையின் பார்வையில் அவர்கள்  படவில்லை. அர்ப்பாகோன் தொடர்கிறார்).

முப்பதாயிரம் பொற் காசுகள். அது ஒரு பெரிய  ...

மக்களைப்  பார்த்துவிட்டுதனக்குள்) :

ஓ கடவுளே! என்னை நானே காட்டிக்கொடுத்தேனா?   என் கோபம் என்னை உரக்கப் பேச வைத்துவிட்டது.

(அவர்களிடம்):  என்ன?

கிளையாந்த்து- ஒன்றுமில்லை,   அப்பா.

அர்ப்பாகோன்- நீங்கள் வந்து நேரமாயிற்றா?

எலீஸ்-  இப்போதுதான் வருகிறோம்.

அர்ப்பாகோன்-  உங்கள் காதில் விழுந்ததா ...

கிளையாந்த்து-  எதுஅப்பா?

அர்ப்பாகோன்-  அதுதான்.

எலீஸ்-   எது?

அர்ப்பாகோன்-  நான் கடைசியாய்ச் சொன்னது.

கிளையாந்த்து-  இல்லை.

அர்ப்பாகோன்-  கேட்டிருக்கும்கேட்டிருக்கும்.

எலீஸ்-  எங்களை மன்னியுங்கள்.

அர்ப்பாகோன்-  தெரிகிறது,   சில வார்த்தைகள் கேட்டீர்கள் என்று. நான் சொன்னது என்னவென்றால்,  பணம் சம்பாதிப்பது கஷ்டம். யாராவது தன்னிடம் முப்பதாயிரம் பிரான் வைத்திருந்தால் அவர் பாக்கியசாலி என்பதுதான்.

கிளையாந்த்து-  உங்கள் பேச்சைத் தடைப்படுத்தக் கூடாது என்பதற்காக  நாங்கள்  தயங்கினோம்.

அர்ப்பாகோன்- நான் விளக்கிச் சொன்னது நல்லது. ஏனென்றால் நான்தான் முப்பதாயிரம் பிரான் வைத்திருக்கிறேன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிடக் கூடாது.

கிளையாந்த்து- உங்கள் விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை.

அர்ப்பாகோன்-  நான் முப்பதாயிரம் பிரான் வைத்திருந்தால் எவ்வளவு நல்ல காரியம்!

கிளையாந்த்து-  அதெல்லாம்  ....

அர்ப்பாகோன்-  எனக்கு அது உதவும்.

எலீஸ்-  நான் நினைப்பது ...

அர்ப்பாகோன்- அதிக சவுகரியமாக இருக்கும்.

கிளையாந்த்து-  நீங்கள் ...

அர்ப்பாகோன்- நான் அடிக்கடி சொல்வது போல் பணக் கஷ்டம் என்று  சொல்லி நொந்துகொள்ள மாட்டேன்.

கிளையாந்த்து-  அப்பா,    நீங்கள் நொந்துகொள்ள வேண்டியதே இல்லை. உங்களிடம் போதுமான பணம் இருக்கிறது என்பது தெரிந்த விஷயம்.

அர்ப்பாகோன் (கத்துகிறார்): என்னது?  போதுமான பணம் வைத்திருக்கிறேனா?  இப்படி சொல்பவர்கள் பொய்யர்கள்;   இதைவிடத் தப்பு வேறில்லை. இப்படிப்பட்ட வதந்திகளைக் கயவர்கள்தான் பரப்புவார்கள்.

எலீஸ்- கோபப்படாதீர்கள்.

அர்ப்பாகோன்-  எவ்வளவு விசித்திரம்,   என் பிள்ளைகளே என்னைக் காட்டிக் கொடுப்பதும் என் எதிரிகள் ஆவதும்!

கிளையாந்த்து- உங்களிடம் போதிய செல்வம் இருக்கிறது என்று நாங்கள் சொன்னால் உங்கள்  பகைவரா?

அர்ப்பாகோன் -  ஆமாம். இந்த மாதிரி பேச்சும் நீங்கள் செய்கிற செலவுகளும் சேர்ந்து நான் பெரிய பணக்காரன் என்ற கருத்தை உண்டாக்குவதால் ஒரு நாள் என் தொண்டையை அறுக்க வருவார்கள்.

கிளையாந்த்து- நான் என்ன பெரிய செலவு செய்கிறேன்?

அர்ப்பாகோன்-  என்னவா?    இப்படி ஆடம்பர உடை உடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவதைவிட அதிக முறைகேடு என்ன இருக்கிறது?   நேற்று உன் சகோதரியைக் கண்டித்தேன். அவளும் மோசம். உங்கள் இருவருடைய கால்முதல் தலைவரை பார்த்தால் ஒரு கணிசமான தொகை தெரியும். மகனே,   உன்னிடம் நான் இருபது தடவை சொல்லியிருக்கிறேன்: உன்  எல்லா நடவடிக்கைகளும் எனக்கு மிக்க அதிருப்தியை உண்டாக்குகின்றன. ஒரு பிரபு போலக் காட்டிக்கொள்கிறாய்;  இப்படிப்பட்ட ஆடை அணிவதற்கு நீ என்னிடம் திருடினால்தான் முடியும். சரி விடுவோம்வேறு விஷயம் பேசுவோம்.

  (தொடரும்)

                                                                                

2 comments:

  1. பணம் செய்யும் மாயை சுவாரஸ்யம்... தொடர்கிறேன் ஐயா...

    ReplyDelete
  2. உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

    ReplyDelete