Wednesday, 16 October 2013

திருவள்ளுவராண்டு


உலகத்தில் மிகப் பெரும்பாலாரால் பின்பற்றப்படுவது கிரிகோரியன் நாள்காட்டிப்படி அமைந்த ஆண்டு. இப்போது நடப்பது 2013.   கிறித்துவின் பிறப்பை அடிப்படையாகக் கொண்டது அது.

தமிழர்க்கெனத் தனியான ஆண்டு இல்லாமையால்,  ஆரியர்களின் ஆண்டுகளான,   பிரபவ முதல் அட்சய வரை  உள்ள அறுபது ஆண்டுகளே கடைப்பிடிக்கப்படுகின்றன. சோதிடக் குறிப்பு,  திருமண அழைப்பு,  நாளேடுகள்,  ஆங்கில நாள்காட்டியிலும்கூட அவை இடம் பெறுகின்றன. இப்போதைய ஆண்டின் பெயர் விஜய.

தமிழர்களுக்குத் தனியாண்டு தேவை என்று கருதியவர்கள் திருவள்ளுவராண்டைத் தோற்றுவித்தார்கள்.

இதுபற்றி அறிக்கை ஒன்றை வாசித்தேன். அதில் கீழ்க்காணும் விவரங்கள் உள்ளன:   

        1  --    தமிழர்க்குத் தமிழில் தொடர் ஆண்டு இல்லாத குறையை உணர்ந்த தமிழறிஞர்கள்,    சான்றோர்கள்,   புலவர்கள்,  1921 ஆம் ஆண்டு,    சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில்,    தமிழ்க்கடல் மறைமலையடிகள்  தலைமையில் ஐந்நூற்றுக்கு மேற்பட்ட பெருமக்கள் கூடி ஆராய்ந்தார்கள்.

           2  --  திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது,  அதையே தமிழாண்டு எனக் கொள்வது;   திருவள்ளுவர் காலம் கி. மு. 31 ;   தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை மாதம் முதல் நாள் என்று முடிவு செய்தார்கள்.

மேற்கண்ட நிகழ்ச்சிக்கு எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. 1921 இல் எந்த மாதம்,  எந்தத் தேதியில் ஆராய்ச்சி நடந்தது?    கூட்டத்தின் முடிவை அறிக்கையாகவோ கையேடாகவோ வெளியிட்டார்களா?    ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்குச் சான்று தரவேண்டாமோ?

அது ஒரு கற்பனையான நிகழ்ச்சி என்று நினைக்கப் போதிய ஆதாரம் இருக்கிறது.

 மறைமலையடிகள் வரலாறு என்னும் தலைப்பில் அவருடைய மகன் திருநாவுக்கரசு 868 பக்கம் கொண்ட ஒரு விரிவான நூலை 1959 இல் வெளியிட்டிருக்கிறார்;  அதில் 773 ஆம் பக்கத்தில் காணப்படும் தகவல் கீழ் வரும்:

        "அடிகள் திருவள்ளுவரையே தமிழர்க்குரிய ஆண்டுக் கணக்கீட்டின் முதல்வராகக் கொண்டார். அடிகளின் கருத்துப்படி திருவள்ளுவர் கிறித்துவுக்கு முப்பத்தொரு ஆண்டுகள் முற்பட்டவர்

அடிகளின் கருத்துப்படி என்பதைக் கவனிக்க வேண்டும்;   ஆராய்ச்சிப்படி என்று சொல்லப்படவில்லை. கருத்து வேறு,    ஆராய்ச்சி முடிவு வேறு அல்லவா?

மேற்கண்ட நான்கு வரிகள் மட்டுமே திருவள்ளுவராண்டு பற்றிக் கூறுகின்றன;  மற்றபடி,   பச்சையப்பன் கல்லூரிக் கூட்டம்,    ஏராள அறிஞர்கள் கூடி ஆராய்ந்தமை முதலியவை குறித்து எதுவும் இல்லை.

ஒருகால்,  ஆசிரியர்,   'அது சாதாரண விஷயம்,  அதைப் பற்றி விவரிக்கத் தேவை இல்லை' எனக் கருதி அதைப் புறக்கணித்திருப்பாரோ?  மாட்டார். ஏனெனில் அவர் அந்த நூலில்,   மிக மிகச் சாதாரணச் செய்திகளைக்கூட விரித்து எழுதி இருக்கிறார்.

ஒரு காட்டு (பக்கம் 260 ) :

"அடிகள் மாளிகை பெரியது. ஆதலின் மண்ணெண்ணெய் விளக்குகள் பல உண்டு. கிழமைக்கு ஒரு முறை மாலையில் அவைகளை அவர் நன்றாகக் கழுவித் துடைத்துத் துப்புரவு செய்வார். விளக்கின் எண்ணெய்க் கூடுகளையும் அவ்வாறே தூய்மை செய்வார். திரிகளை எல்லாம் கத்தரிக்கோலால் அளவாகக் கத்தரிப்பார். மண்ணெண்ணெயை வடிகட்டி விளக்குக் கூடுகளில் நிறைப்பார்"

வாசித்தீர்களா?  வாழ்க்கை வரலாற்றில் இடம் பெற வேண்டிய அருஞ்சாதனையா,  இது?   இப்படிப்பட்ட உப்புசப்பற்ற தகவல்களைக்கூட விரித்து உரைக்கும் ஆசிரியர், அடிகளின் தலைமையில் நடந்ததும் தமிழச் சமுதாய வரலாற்றில் ஒரு மைல் கல்லாக விளங்கத் தக்கதுமான ஆராய்ச்சி மாநாட்டை மெளனிக்கமாட்டார்.

மேலும்,  அடிகள் கலந்துகொண்ட நிகழ்ச்சியாக,   " 29 - 2- 1919 இல், சென்னை இராயப்பேட்டை பாலசுப்ரமணிய பக்த சபையின் விழா,   அடிகள் தலைமையில் நடந்தது" எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. (பக்.347 )   அடுத்த நிகழ்ச்சியாய்,  "அடிகள் என்னை அழைத்துக்கொண்டு பல்லாவரத்தினின்றும் 16  - 12  1921 இல், யாழ்ப்பாணத்திற்குப் புறப்பட்டனர்" என்று உள்ளது. (பக். 349)

ஆக,  1920 ,  1921 ஆண்டுகளில் மறைமலையடிகள் எந்தக் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அவரது தலைமையில் 1921 இல் ஆராய்ச்சி நிகழ்ந்தது என்பது கற்பனையாகத்தான் இருக்கவேண்டும்.

இதுகாறும் கூறியவற்றால்,  மறைமலையடிகள் யாரையும் கலந்தாலோசியாமல்,  விவாதிக்காமல்,  தாமும் எந்த ஆராய்ச்சியும் செய்யாமல்,  தம்மிச்சையாய்,  திருவள்ளுவர்    கி.மு. 31 இல் பிறந்தார் எனக் கருதினார் என்பதும் அதைப் பிடித்துக்கொண்டு,  திருவள்ளுவராண்டை யாரோ தோற்றுவித்திருக்கிறார்கள் என்பதும் தெரியவருகின்றன.

ஆராய்ச்சி நடந்தது மெய்தான் என்பதற்கு யாரேனும் ஆதாரம் காட்டுவாரானால்,    அதை அறிந்துகொள்ள ஆவலாக உள்ளேன். 

                                                         ++++++++++++++++++++++

 

 

4 comments:

 1. சரியாக ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்...

  விரிவான விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

  ReplyDelete
 2. வணக்கம்

  திருவள்ளுவராண்டு பற்றிய விரிவான விளக்கங்களுக்கு நன்றி ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. விரிவான விளக்கங்களுக்கு நன்றி ஐயா

  ReplyDelete
 4. வருடப் பிறப்பு தை மாதமா, சித்திரை மாதமா.?ஒரு வேளை இந்த நிகழ்ச்சி பற்றிக் குறிக்க மற்ந்திருப்பாரோ. ? சிந்திக்க வைக்கும் பதிவுக்கு நன்றி அய்யா..

  ReplyDelete