ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்,
அதை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பது பரவலாக அறிந்த
செய்தி. அவரைப் பற்றிய பின்வரும் தகவலும் பலப்பலர்க்குத் தெரிந்திருக்கும்:
சேர மன்னன் சேரலாதனின் அவைக்கு வந்த ஒரு
சோதிடர், அவனது இளைய மகனைப் பார்த்து, " இவனே அடுத்த
வேந்தன் ஆவான் என்பதற்கான அறிகுறி தெரிகிறது" என்று சொன்னதைக் கேட்ட இளங்கோ, "மூத்தவன் இருக்க நான் அரசனாவது முறையல்ல, துறவு பூணுகிறேன்" என்று
தெரிவித்துவிட்டுத் துறவி ஆயினார்.
இதற்கு எந்த எழுத்தாதாரமும் இல்லாமையால்
இது ஒரு கற்பனை எனத் தெரிகிறது.
சிலப்பதிகாரத்தின் பதிகப் பாடல் பின்வருமாறு
தொடங்குகிறது:
குணவாயில் கோட்டத்து அரசுதுறந்து இருந்த
குடக்கோச் சேரன் இளங்கோ அடிகட்கு
இதன் பொருள்:
அரச போகத்தைத் துறந்து, குணவாயில் என்ற ஊரிலுள்ள கோவிலில்
தங்கி இருந்த மேற்கு நாட்டுச் சேர மன்னனின் தம்பியாகிய அடிகளுக்கு.
சோதிடரின் ஆரூடம் பற்றி இது பேசவில்லை.
இளங்கோ தாமாகவே துறவி ஆனார் என்றுதான் விளங்குகிறது.
சேரலாதனுக்குப் பின்பு மூத்த மகன்
களங்காய்க் கண்ணி நார்முடிச் சேரலும் அவனையடுத்து இரண்டாம் மகன் செங்குட்டுவனும்
பிறகு மூன்றாம் மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனும் ஆண்டனர் என்று பதிற்றுப்பத்து கூறுகிறது.
பதிற்றுப்பத்து என்பது சங்க எட்டுத்
தொகை நூல்களுள் ஒன்று. பல சேர வேந்தர் பற்றிய பாடல்கள் அதில் உள்ளன.
செங்குட்டுவனைக் குறித்துப் பரணர்,
தாம் இயற்றிய 227 அடிப் பாட்டில், அவனது வீரதீரம், அருமைபெருமை, கொடைத் திறன் முதலியவற்றைப் போற்றியும் அவனைப் பலபட வாழ்த்தியும் உள்ளார்; அவன் கடல் போரில் வென்றான் எனத் தெரிவிக்கிறார்; ஆனால் வட நாட்டுப் படையெடுப்பு, கனக விசயர், கண்ணகிக்குக் கல் ஆகியவை பற்றிய சிறு
குறிப்பும் கூறவில்லை. இந்திய வரலாற்று நூல்களிலும் இது இடம் பெறவில்லை. ஆகையால்
கண்ணகி கதை, கற்பனை எனத் தெரிகிறது.
பரணரின் பாட்டுக்கு ஒரு பதிகம் உள்ளது:
கடவுள் பத்தினிக்
கல்கோள் வேண்டி
ஆரிய அண்ணலை வீட்டி
என்கிறது அது. கண்ணகிக்குக் கல் கொண்டு
வருவதற்கு ஆரிய மன்னனை வென்று என்பது அதன் பொருள். பதிகம் பிற்காலத்தில்
சேர்க்கப்பட்டது என்பது ஆய்வாளர்களின் முடிவு. அது கி. பி. 10 ஆம் நூற்றாண்டுக்குமுன்
இயற்றப்பெற்றிருக்க வேண்டும் என்பது ஆராய்ச்சி விரிவுரையாளர் டி. வி. சதாசிவ
பண்டாரத்தார் கருத்து. இன்ன காலம் என யாராலும்
வரையறுக்க இயலவில்லை. ஆகவே இந்தப் பிற்கால இடைச்செருகல் தள்ளப்பட
வேண்டிய ஒன்று.
ஆய்வறிஞர் எஸ். வையாபுரி பிள்ளை, தம் "காவிய காலம்" என்ற
நூலில், சிலப்பதிகாரம் எட்டாம்
நூற்றாண்டில் இயற்றப்பட்டது எனப் பலப்பல ஆதாரங்களைக் காட்டி, நிறுவுகிறார்.
10 ஆம் நூற்றாண்டு அரசன் ராஜராஜனைத் தலைவனாய் வைத்து 20 ஆம் நூற்றாண்டு கல்கி,
"பொன்னியின் செல்வன்" எழுதினாற் போல, யாரோ பெயர் தெரியாத புலவர் ஒருவர், 2 ஆம் நூற்றாண்டு மன்னன் செங்குட்டுவனை நாயகனாய்க் கொண்டு, சிலப்பதிகாரம் இயற்றியுள்ளார்.
+++++++++++++++++++++++++++
புகாரிலிருந்து புறப்பட்டு, பதினெட்டு ஆண்டுகள் ஆய்வு செய்து, கண்ணகி நடந்த பாதையிலேயே நடந்து சென்று கண்ணகி கோயிலை, 1963 ஆம் ஆண்டு கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்த பெருமைக்கு உரிய வர் புலவர் சி.கோவிந்தராசனார் என்பவராவார். ஐயா இவர் கரந்தையிலே வாழ்ந்து கொண்டிருக்கிறார். தங்களின் தகவலுக்காக மட்டும். நன்றி
ReplyDelete18 ஆண்டு ஆய்வு செய்த பெருமைக்கு உரிய சி . கோவிந்தராசனார் பற்றி அறியச் செய்தமைக்கு நன்றி . அவர் அது குறித்து நூலோ வேறு வெளியீடோ எழுதி இருக்கிறாரா என்பதைத் தெரிவியுங்கள் . அவர் எதைப் பற்றி ஆய்வு செய்தார் என்பதையும் அறிவிக்கக் கேட்டுக்கொள்கிறேன் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteகரந்தை ஜெயக்குமார் அவர்களின் தகவலுக்கும் நன்றி...
ReplyDeleteஎன் கட்டுரையை வாசித்துக் கருத்துரைத்தமைக்கு மிகுந்த நன்றி .
Deleteபல கற்பனைக் கதைகளை உண்மை என்று நம்பி. அது குறித்து ஐயம் எழுப்பினாலே கொதித்தெழுவோரும் உள்ளனர். எனக்கு ஒரு சந்தேகம். இந்தமாதிரி பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வுகளை எந்த ஆதாரத்தில் பதிவு செய்கின்றனர்.?பனை ஓலைச் சுவடிகளில் எழுதியது கொண்டா, உலோகப் பட்டயங்களில் செதுக்கியது கண்டா, இல்லை வாய்வழி தகவல்கள் மூலமா.?அச்சு முறை ஆறு நூற்றாண்டுகளாகத்தானே இருக்கிறது. ?நம் காலத்தில் வாழ்ந்த பாரதியின் பாடல்களிலேயே சில பாடபேதங்கள் இருப்பதாகத் தெரிகிறதே.?தெளிவித்தால் கடமைப் பட்டிருப்பேன். நன்றி.
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . நீங்கள் சொல்வது உண்மைதான் . முன்னோர்களின் நூலில் ஐயம் எழுப்பினாலோ பிழை கண்டாலோ தொடை தட்டி ஆர்ப்பரித்துச் சீறுவோர் பலர் உள்ளனர் . அதற்குக் காரணம் தமிழில் இலக்கியத் திறனாய்வு என்ற துறை தோன்றாமையே . முந்தைய நிகழ்வுகளை ஓலைச் சுவடிகள் , செப்புப் பட்டயங்கள் , கல்வெட்டுகள், அகழ்வாய்வுகள் முதலானவை கொண்டு அறிகிறோம் . வாய்வழிச் செய்திகளும் இருக்கின்றன. இவற்றுள் ஓலைச் சுவடிகளைப் படிப்போர் , பெயர்த்து
Deleteஎழுதுவோர்களுள் சிலர் மட்டும் தங்கள் பாட்டுகளைச் செருகிவிடுகின்றனர் . " படித்தவன் பாட்டைக் கெடுத்தான் , எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் " என்னும் பழமொழி இதனால் தோன்றியது கம்பராமாயணத்தில் வெள்ளீயம்பலத் தம்பிரான். என்பவர் தம் பாடல்களைச் சேர்த்துவிட்டார் எனவும் அவை வெள்ளி பாடல்கள் என்று சொல்லப்படுகின்றன எனவும் பரவலான கருத்து உண்டு .
அய்யாவிற்கு வணக்கம், ஆய்வு நோக்கில் அமைந்த கட்டுரையைப் படித்தது மகிழ்வளிக்கிறது. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.
ReplyDeleteஉங்கள் அன்பான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteஅடடே! இது நாள் வரை இளங்கோவடிகள் தாம் சிலப்பதிகாரத்தை இயற்றினார் என்றல்லவா நினைத்துக் கொண்டிருந்தேன். இது புது செய்தியாக அல்லவா இருக்கிறது! சிலப்பதிகாரம் எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது என்பதற்கு வையாபுரி பிள்ளையவர்கள் சான்றுகள் பல எடுத்துக்காட்டியிருப்பதாக எழுதியுள்ளீர்கள். அவற்றில் முக்கியமான சான்றுகள் சிலவற்றைக் கூறினால் என் போன்றோர் தெரிந்து கொள்ள ஏதுவாயிருக்கும். மிக்க நன்றி.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . முக்கிய சான்றுகளை விரைவில் தெரிவிப்பேன் .
Delete