Thursday, 19 December 2013

சிலப்பதிகாரக் காலம்

  எஸ். வையாபுரி பிள்ளை,  தம் 'காவிய காலம்'  என்னும் நூலின் 86 ஆம் பக்கம் முதல் 119 ஆம் பக்கம்வரை, சிலப்பதிகாரத்தின் காலம் பற்றி ஆராய்ந்துள்ளார். அவர் தரும் சான்றுகளுள்  நான்கை மட்டும் எடுத்து எழுதுகிறேன்;  விரிவஞ்சிப் பிறவற்றை விட்டுவிட்டேன்.
 "சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனது தம்பி எனக் கூறப்படுதலால் செங்குட்டுவன் காலமாகிய கி. பி. 2 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இக் காவியம் தோன்றியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை,  வி. கனகசபை பிள்ளை முதலியோர் கருதுவராயினர்.

 சேரன் செங்குட்டுவன் காலமும் சிலப்பதிகாரத்தின் காலமும் கி. பி. 5 ஆம் நூற்றாண்டு என முதன்முதல் துணிந்து எழுதியவர் தமிழ்ப் பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்களே; செங்குட்டுவன் காலத்தில் தோன்றியதே சிலப்பதிகாரம் என்பது இவர்களுக்கும் முற்றும் உடம்பாடே. சம காலம் அன்று என்று எழுதியவர் கே. வி. சுப்பிரமணிய ஐயர்.  8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இக் காவியம் தோன்றியிருக்க வேண்டும் என்றனர் எல். டி. சுவாமிக்கண்ணு பிள்ளை.

 காவியத்தின் காலம் பிற்பட்டதுதான்:

 1 -- மனுநீதிச் சோழன் கதையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது:

     வாயிற் கடைமணி நடுநா நடுங்க
     ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
     அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
               ( வழக். காதை - 53-55 )

இக் கதை முதல்முறையாக 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட மஹாவம்சத்தில் வருகிறது;  ஏலாரா என்ற சிங்கள அரசன் இவ்வாறு செய்தான் என அந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

 2 -- பல நாட்டினரை இளங்கோ கூறுகிறார்:

    கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
    பங்களர் கங்கர் பல்வேல் கட்டியர்

பங்களர்,  வங்க தேசத்தினர்க்கு 7,  8 ஆம் நூற்றாண்டளவில் சாஸனங்களில் வழங்கும் பெயர்.

  3 -- சங்க காலத்தில் காணப் பெறாத சில தெய்வங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. உதாரணமாகக் கலைமகளாகிய தெய்வத்தைக் கூறலாம். நாயன்மார்கள் காலத்தில்தான் (7 ஆம் நூ.) முதல்முதலாக இத் தெய்வத்தைக் குறித்து வந்துள்ளது:

  கலைமகள் தலைமகன் இவனென வருபவன் (சம்பந்தர் 1 -124,3 )

  சிலப்பதிகாரத்தில்  ஆய்கலைப் பாவை (12 - 71) எனவும்  மாமகளும் நாமகளும் (22 0 இறுதி வெண்பா) எனவும் காண்கிறோம்

  4 -- மிகப் பிற்பட்ட காலத்தனவாகிய பல சொற்கள் வந்துள்ளன: இந்த,  நான்,  வார்த்தை,  பிற்பாடு,  செட்டி,  உடைய (6 ஆம் வேற்றுமை உருபு)

இனி,  விநாசித்தம்பி செல்வநாயகம் தம்,  " தமிழிலக்கிய வரலாற்றில்" எழுதியுள்ளதை அறிவோம்:

 "சங்கப் பாக்களில் இல்லாத நான் (தன்மை ஒருமை),  நீர் (முன்னிலைப் பன்மை),  இந்த (சுட்டு),  அன் (எதிர்காலத் தன்மை ஒருமை விகுதி: போக்குவன்,  உறுவன்),  கள் விகுதி (உயர்திணைப் பன்மையில்) சிலப்பதிகாரத்தில் பயின்றுள்ளன;  இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறை,  பண்பாடு,  சமய வழிபாடுகள் பிற்காலத்தவை. இளங்கோவடிகள் காலத்தில் நடந்ததாய்க் கற்பனை செய்யப்பட்டுள்ளது."

             =======================

  

6 comments:

 1. 'சிலப்பதிகாரமும் அதன் ஆசிரியரும்,' http://sgnanasambandan.blogspot.in/2013/10/blog-post.html என்ற தங்கள் கட்டுரையில் சிலப்பதிகாரம் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்பதற்கு வையாபுரி பிள்ளை கூறியிருக்கும் சான்றுகள் சிலவற்றை எழுதும் படிக் கேட்டிருந்தேன். என் வேண்டுகொளுக்கிணங்கி அவற்றுள் சிலவற்றை எடுத்துக் காட்டியிருப்பதற்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . அந்த வேண்டுகோள் இன்னொரு கட்டுரை எழுத எனக்கு வாய்ப்பு தந்தமையால் அதற்கும் நன்றி .

   Delete
 2. வணக்கம்
  ஐயா
  மிகச்சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி .

   Delete
 3. வணக்கம்
  ஐயா
  த.ம 1வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 4. உங்கள் மதிப்பு மிக்க வாக்குக்கு மிகுந்த நன்றி .

  ReplyDelete