Thursday, 26 December 2013

விசித்திர மாற்றங்கள்


தமிழகத்தின் இரண்டு ஊர்களின் பெயர்கள் வேடிக்கையான முறையில் மாற்றம் பெற்றுள்ளன:

1 -  விருத்தாசலம் -- கடலூர்க்கு அண்மையில் இருக்கிற இதன் முந்தைய தமிழ்ப் பெயர் பழ மலை; கனி மரங்கள் நிறைந்த மலை என்று பொருள். ஒரு கால கட்டத்தில் இது சமற்கிருதத்தில் தவறாய் மொழிபெயர்க்கப்பட்டு விருத்தாசலம் ஆனது;  பழ மலையைப் பழைய மலை என்று பிழையாய் அர்த்தப்படுத்திக்கொண்டு அந்தப் பெயரை இட்டனர்

 விருத்த + அசலம் = முதிய மலை அதாவது கிழ மலை!

வள்ளலார் ஒரு பாட்டில், "பழமலையைக் கிழமலை என்று ஓதுகின்றீர் எனச் சாடியுள்ளார்.

தமிழர்களில் சிலர்உண்மைப் பெயர் பழ மலை என்பதை அறியாமல்விருத்தாசலத்தை முதுகுன்றம் எனப் பெயர்த்தனர்;  சமற்கிருதக் கிழமலை தமிழிலும் கிழமலையாய் நீடித்தது.

முதுமை + குன்றம் = முதுகுன்றம் = கிழ மலை! 

பாடல் பெற்ற தலம் ஆகையால்,  திரு என்ற சிறப்பு டைமொழி சேர்ந்துதிருமுதுகுன்றம் எனப்பட்டது;  ஆனால் சமற்கிருத மோகம்  வென்றதால் விருத்தாசலமாகவே நிலைபெற்றுவிட்டது.

  2 - வேதாரண்யம் -- திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சிறு காடு மரைக்காடு என இனிய தமிழில் பெயர் சூட்டப்பட்டது. மரை என்றால் மான்; மான்கள் நிறைந்த காடு ஆதலால் அது மிகப் பொருத்தமான பெயர். தாமரை என்னும் சொல்லை, தா + மரை ஆகப் பிரித்துத் தாவுகின்ற மான்  என்று பொருள் கொள்ளலாம் என இலக்கணத்தில் படித்திருக்கிறோம்.
தமிழ் சரியாய் அறியாத பார்ப்பனர், அதை மறைக்காடு (மறை = வேதம்) எனத் தவறாய்ப் புரிந்துகொண்டு, வேதாரண்யம் என்று மாற்றினர்;  

வேதம் + ஆரண்யம் = வேதக் காடு! 

வேதம் என்ன புலியா சிங்கமா,  அதற்கு ஒரு காடு ஒதுக்க? கொஞ்சங்கூடப் பகுத்தறிவு இன்றிச் செய்த மொழிபெயர்ப்பு அது! ஆரியரின் வேதத்துக்கும் தமிழரின் காட்டுக்கும் என்ன தொடர்பு? அடிமை மனப்பான்மை மிக்க தமிழர் அதை எதிர்ப்பின்றி ஏற்றனர்சிலர் மட்டும் தமிழ்ப் படுத்தியும் திரு சேர்த்தும் "திருமறைக்காடு" என்றனர்; ஆனால் அது அற்ப ஆயுளில் மறைந்து சமற்கிருதப் பெயரே புழக்கத்தில் இருக்கிறது.

இந்த விசித்திர மாற்றங்களுக்கு ஒரு பாலமும் உள்ளானது: சென்னையில் திருவல்லிக்கேணியையும் மய்லாப்பூரையும் இணைக்கிற பாலம் ஹமில்ட்டன் பிரிட்ஜ் என யாரோ ஒரு வெள்ளைக்காரரின் பெயரைக் கொண்டிருந்தது;  பாமரர்கள் அதை அமில்ட்டன் வாராவதி என்று அழைத்தார்கள்காலப் போக்கில் அது அம்பட்டன் வாராவதி ஆயிற்று. ஆங்கில மோகம் உடையோர், பார்பர்ஸ் ப்ரிட்ஜ் என மொழிபெயர்த்தார்கள். ஹமில்ட்டன், பார்பர் ஆனார்! இப்போது பிபி எனச் சுருக்கமாகச் சுட்டப்படுகிறது.

  ===============================

6 comments:

 1. முற்றிலும் புதிய தகவல்கள்! இது போல் அபத்தமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கும் ஊர்ப்பெயர்களைத் தொகுத்து எழுதுங்கள். பிற்காலத்தில் ஒரு வேளை நம்மவர்க்கு நம் மொழியின் மீது அக்கறையும் ஆர்வமும் வந்து, திருத்தம் செய்ய விரும்பினால் உங்கள் பதிவு அதற்குதவி செய்யும். ஹமில்டன் அம்பட்டன் ஆனது நல்ல ஜோக்!

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . தவறுதலாய்ப் பெயர்மாற்றம் பெற்ற ஊர்கள் , இடங்கள் அதிகம் இருப்பதாகத் தெரியவில்லை . தெரிந்தால் அவை பற்றி எழுதுவேன் .

   Delete
 2. இந்த உண்மை மிகவும் வேதனையளிக்கிறது.
  என்ன ஒரு அகந்தை. இதுபோன்ற செயலுக்காக பார்ப்பனர்களை தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து திட்டுவோம்.

  கோபாலன்

  ReplyDelete
 3. நீங்கள் சொன்னதுபோல் வேதனை தரும் உண்மைதான் . பார்ப்பனரைத் திட்டுதல் தகும் என்றாலும் நம்மவருடைய விழிப்பின்மையை எண்ணித்தான் அதிகம் நொந்துகொள்ளவேண்டும் . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

  ReplyDelete
 4. ஊர்களுக்குப் பொருத்தமான பெயர்களை இப்படி முற்றிலும் தவறான பொருளில் மாற்றி அழைக்கிறோமே... மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி. இப்போதாவது ஊர்களின் உண்மைப் பெயர்களையும் அவை தவறாக வழங்கிவரும் தகவலையும் அறிந்துகொள்ள முடிந்ததே. அறியச் செய்த தங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 5. வருத்தத்துக்கு உரிய செய்திதான் மாயவரம் ( மாய்வதற்கு வரம் - அதாவது சாவதற்கு வரம் ! ) என்று இருந்ததை மயில் ஆடு துறை என்று அழகிய தமிழில் மாற்ற முடிந்தது ; மக்களிடை மொழிப் பற்று குறைவு , மேன்மேலும் அருகிவருகிறது . இந் நிலையில் பிற தவறான பெயர்களைத் திருத்துவது எளிதல்ல . கருத்துரைக்கு மிக்க நன்றி .

  ReplyDelete