Wednesday, 4 December 2013

பழைய விளையாட்டுகள் - குச்சி தள்ளல்

பழைய விளையாட்டுகள் (தொடர்ச்சி-2)
                 3 -குச்சி தள்ளல்
  
ஒருவரது குச்சியை மற்றவர்கள் தத்தம் குச்சிகளால் தள்ளிக்கொண்டே போவது இந்த விளையாட்டு.

  ஆட்டக்காரர் ஐந்து பேர் என வைத்துக்கொள்வோம்ஒவ்வொருவர் கையிலும் ஒரு மெல்லிய, சுமார் ஒரு மீட்டர் நீளக் குச்சி,  சவுக்கை அல்லது மூங்கில்.

  நடுத் தெருவில்,  ஓரிடத்தில் (இதுதான் தொடக்க இடம்) நின்று, குச்சிகளைப் பலம் கொண்ட மட்டும்,  ஒவ்வொருவராய்த் தூக்கி எறிய வேண்டும். அதிக வலு உள்ளவரின் குச்சி முன்னாலும் பிறரின் குச்சிகள் பின்னாலும் போய் விழும். ஒருவரின் குச்சி மற்ற எல்லாக் குச்சிகளையும்விடப் பிந்திக் கிடக்கும் அல்லவா?  இவர் பெயர் எவ்வி எனக் கொள்வோம்.

 எல்லாரும் குச்சிகளை எடுத்துக் கொள்கிறார்கள்;  எவ்வி,  தொடக்க இடத்தில் நின்றுகைகளைத் தலைக்குமேல் தூக்கிஉள்ளங்கைகளை விரித்து வானத்துக்குக் காட்டிக்கொண்டுஅவற்றால் தம் குச்சியை  ஏந்துகிறார். கைகளுக்கு நடுவே இடைவெளி இருக்கிறது;  ஒருவர்  எவ்வியின் பின்னால் போய் நின்றுஅந்த இடைவெளியில் தம் குச்சியை நீட்டித்  தம் முதுகுக்குப் பின்னால் எவ்வியின் குச்சி போய் விழும்படி பலமாகத் தள்ளுகிறார்; அது விழும் இடம் நோக்கி எல்லாரும் ஓடுகிறார்கள்.

  அதைத் தத்தம் குச்சியால் தொலைவில் சென்று விழும்படி எத்திக்கொண்டே போகவேண்டும். எத்துகிற ஒருவரை எவ்வி தொட்டுவிட்டால்ஆட்டம் முடிந்துபோகும். தெருவில் கிடக்கிற கல், மண்ணாங்கட்டி, இலை, தழை முதலான எதன்  மேலாவது குச்சியை ஊன்றலாம்அப்போது தொடுவது செல்லாது. அவரவரும் தள்ள முயல்வதுபோல் போக்குக் காட்டுவார்;  எவ்வி இங்கும் அங்கும் விரைந்து  யாரையாவது தொட்டுவிடப் பார்ப்பார்;   அவர் நெருங்கும்போது குச்சியை ஊன்றித் தப்பித்துக்கொள்வார்கள். அவரது கவனம் தம்மீது இல்லாதபோது, குச்சியைத் திடீரெனத் தள்ளிவிடுவார்கள்.

    இப்படித் தள்ளிக்கொண்டு போகையில் ஒருவர் தொடப்படுகிறார்; அவருக்கு முகிலன் என்று பெயர் சூட்டுவோமே! இனிமேல் தள்ளக்கூடாது. எல்லாரும் குச்சிகளை எடுத்துக்  கொள்கிறார்கள்;  எவ்வியும் எடுத்துக்கொண்டு நொண்டியபடியே,  தொடக்க இடத்துக்குப் போக வேண்டும்;   மற்ற நால்வரும் கூடவே நடந்து வருவார்கள். அப்போது அவர்கள் பாடும் பாட்டு

            எங்கூட்டு நாயீ எலை பொறுக்கப் போச்சு
            கல்லால் அடிச்சேன்  காலொடிஞ்சு போச்சு.

  "எலை பொறுக்கப் போச்சு" என்பதன் பொருள் முதியோர்களுக்கு மட்டுமே தெரியும். முன் காலத்தில் திருமணம், வளைகாப்பு, காதணி விழா, பூப்பு நீராட்டு விழா முதலிய எல்லா நிகழ்ச்சிகளும் வீடுகளில் கொண்டாடப்பட்டன. சாப்பாடு பந்தி பந்தியாய் நடந்தது;   ஒவ்வொரு பந்தியிலும் சுமார் இருபது பேர் உண்டவுடன் எச்சில் இலைகளைச் சுருட்டி எடுத்துப் போய்த் தெரு ஓரத்தில் வீசுவார்கள். அதற்காகக் காத்திருக்கும் பிச்சைக்காரர்கள் நான் நீ எனப் போட்டி போட்டு,   ஆளுக்குச்  சில இலைகளைக் கைப்பற்றிஅவற்றில் உள்ள மிச்சம் மீதிகளைச் சாப்பிடுவார்கள்;  இலைகளை எடுக்கையில் தள்ளுமுள்ளுதகராறு ஏற்படும்; அந்தக் காட்சியைப் பதிந்தார் உடுமலை நாராயணகவி,   பராசக்தி (1952) திரைப்படத்தில்,   கா கா  எனத் தொடங்கும் பாடலில்:

          எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்குப்
          பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே.

    பிச்சைக்காரரோடு நாய்களும் சேர்ந்துகொள்ளும்,  அதாவது, " இலை பொறுக்கப் போகும்."

                            -----------------------------

6 comments:

  1. பொருள் விளக்கம் பாடலோடு ஒப்பிட்டது நன்று ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுப் பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. இந்த விளையாட்டு நானும் விளையாடி இருக்கிறேன். ஆனால் பாட்டெல்லாம் கிடையாது.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் இந்த ஆட்டத்தை ஆடியமை அறிந்து மகிழ்கிறேன் . பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. இது வரை கேள்விப்பட்டிராத விளையாட்டுக்களை எங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் தங்களுக்கு மிக்க நன்றி. பாட்டைக் கூட மறக்காமல் எழுதும் உங்களது நினைவுத் திறன் வியக்க வைக்கிறது. கண்டிப்பாக இத்தொடர் ஆவணமாக்கப் பட வேண்டிய பதிவு. தமிழரின் பழைய விளையாட்டுக்களைப் பற்றி ஆய்வு மேற்கொள்வோருக்கும் பயன்படும் பதிவு தொடர்ந்து எழுதுங்கள். .

    ReplyDelete
  4. வாசகர்களின் பின்னூட்டங்கள் ஊக்கம் தருகின்றன .மிக்க நன்றி . கூடுமானவரை ஆய்வுகளுக்குப் பயன்படக்கூடிய பழைய காலத்துச் செய்திகளை மேலும் பலர் எழுதவேண்டும் . அவர்களுடைய அநுபவங்கள் எல்லாருக்கும் புதிய தகவல்களைத் தெரிவிக்கும் .

    ReplyDelete