Monday, 17 February 2014

கதம்பம் - தொடர்ச்சி

 7-- நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நாம் ஆங்கிலேயரிடமிருந்து கற்றோம்; தேங்க்ஸ் என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் இல்லாமையால், "நன்றி" என்கிறோம்.

  அது நன்மை என்றுதான் பொருள்படும். அவ்வையார் இயற்றிய "மூதுரை" யின் முதற் பாட்டு, " நன்றி ஒருவற்குச் செய்தக்கால்" எனத் தொடங்குகிறது: 'ஒருவருக்கு நன்மை செய்தால்என்பது அர்த்தம். திருக்குறளின் 101 ஆம் அதிகாரத் தலைப்பு: நன்றியில் செல்வம். நன்மை இல்லாத செல்வம்அதாவது  தானும் துய்க்காமல் பிறர்க்கும் ஈயாமல்  சேர்த்து வைத்துள்ள செல்வம்.

 குறளின் 11 ஆம் அதிகாரம் "செய்ந்நன்றி அறிதல்" என்பதற்கு மற்றவர் நமக்குச் செய்த நன்மையை மறவாமை என்பது பொருள். அந்த அதிகாரத்தில், நன்றி என்னும் சொல்லுக்கு மாற்றாக அதே அர்த்தமுடைய உதவி,  நன்று என்ற சொற்கள் இடம்பெற்றிருப்பதைக் காண்கிறோம்.

குறள் 439:     இதில்,  "நன்றி பயவா வினை" என்பதற்குப் பரிமேலழகர்,  "தனக்கு நன்மை தராத செயல்கள்" என உரைத்துள்ளார்.

     எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
     செய்ந்நன்றி கொன்ற மகற்கு

என்னும் குறளின் விளக்கம் அறிவோம்:


  எந்த நன்மையைச் சிதைத்தார்க்கும், அதாவது நிழல் தரும் சாலை மரத்தை வெட்டுதல்,  குடிநீர்க் குளத்தை (ஊருணி) அசுத்தப்படுத்தல் முதலான நன்மைகளைக் கெடுத்தார்க்கும் மன்னிப்பு உண்டுஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது மன்னிக்கக் கூடாதது.

   8 -- உழவுத் தொழில் -- பண்டைய   நாகரிக மக்களாகிய பாபிலோனியர், எகிப்தியர், ரோமானியர்உழவையே மகோன்னதத் தொழிலாய் மதித்துப் போற்றினர்தமிழர்களும் அவ்வாறே. திருக்குறளில் அதற்கு ஓர் அதிகாரம் ஒதுக்கப்பட்டு உள்ளது:

   "சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம்"
   "உழுவார் உலகத்தார்க்கு ஆணி"
    "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்"

 என்றெல்லாம் உழவைத் திருக்குறள் உயர்த்திப் புகழ்கிறது. பிற தமிழ் அற நூல்களும் தான்.

 அது பண்ட மாற்றுக் காலத்திய நிலைமை. அவரவரும் தங்களிடம் உள்ளபொருளைக் கொடுத்து அதற்குப் பதிலாகத் தேவையான பொருளைப் பெற்றனர். மிளகுக்கு உப்புஆட்டுக்கு நெல்,  துணிக்குக் கள்முத்துக்கு மாடு எனப் பொருள்கள் கை மாறின:

   "பாலொடு வந்து கூழொடு பெயரும்
  யாடுடை இடையன் ..... " குறுந் --221  

 கைத்தொழிலாளர் தாங்கள் உருவாக்கிய சட்டி பானைபாய்கூடைமரப்பெட்டிவிசிறி  முதலான சாமான்களைத் தந்து மாற்றுப் பொருள் வாங்கினர்உடலுழைப்பைத் தந்து அதற்கு ஈடாய் ஏதாவது பொருள் பெற்றனர். உழைக்கவும் இயலாதவனுக்கு எப்பொருளும் கிட்டாதுஅவன்வாழ வழி ஏதுஇரந்துதான் காலம் தள்ள வேண்டும்ஆகையால், "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்றார் வள்ளுவர்.  (சில பகுதிகளில் காசும் புழங்கியது)

 பொருள்களுள் இன்றியமையாதது உணவு அல்லவா?   வேறு பொருள் இல்லாமல் வாழ்ந்துவிடலாம்;   சாப்பிடாமல் பிழைக்க இயலாதுஅந்த மேம்பட்ட உணவுப் பயிரை விளைக்கிற தொழில் தலைசிறந்ததாய்ப் போற்றப்பட்டதுபணம் இருந்தால், எதையும் கடையில் வாங்கலாம் என்ற நிலை ஏற்பட்ட பிறகுஉழவு சிறிது சிறிதாய் மதிப்பு இழந்ததுஉழவர்கள்  பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள். வாய்ப்பு  உடையோர், அந்தத் தொழிலை விட்டு வேறு தொழிலுக்கு மாறவே  விரும்புகின்றனர்.

  இப்போது, யாவற்றிலும் உயர்ந்த தொழில் எதுமருத்துவமே. உயிரைக் காப்பது அதுவல்லவோ?   உயிரினும் விழுமியது வேறென்ன?
6 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  விளக்கம் நன்றாக உள்ளது.

  காலம் அறிந்து பயிர் செய்கிறார்கள்.....த.ம 1வது வாக்கு.
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி .

   Delete
 2. சிறப்பான பல குறள்களுடன் அருமையான விளக்கம் ஐயா... நன்றி...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வாழ்த்தும் பாராட்டும் என்னை ஊக்கப்படுத்துகின்றன . மிக்க நன்றி .

   Delete
 3. //நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை நாம் ஆங்கிலேயரிடமிருந்து கற்றோம்; தேங்க்ஸ் என்பதற்கு உரிய தமிழ்ச் சொல் இல்லாமையால், "நன்றி" என்கிறோம்.///

  மன்னிக்கவும். உங்களின் விளக்கம் தவறானது என்பது என்னுடைய கருத்தாகும். நீங்கள் சொல்வதின் படி பார்த்தால் ஆங்கில Thanks தாங்க்ஸ் க்குக் கூட உண்மையான கருத்து Thought என்பது தான்.

  ஆங்கில Thanks என்ற சொல்லின் வேர்ச்சொல் ஜேர்மன் சொல்லாகிய Denken (Think/Thought) அல்லது நினைப்பது, ஒருவர் “நினைத்துச் செய்த நற்செயல் அல்லது உதவி” அதை மதிக்கிறேன் அல்லது Appreciate பண்ணுகிறேன் என்பது தான் Thanks என்பதன் கருத்தாகும். .

  Denken (Germanic) > Thanc (Old Englihs) > Thancas (Old English) > Thanks.

  அதனால், ஆங்கிலத்தில் Thanks கிடையாது, Thought என்பதற்கான சொல்லைத் தான் பாவிக்கிறோம் என்று எந்த ஆங்கிலேயரும் கூற மாட்டார்கள். தமிழிலும், நீங்கள் கூறிய உதாரணங்களின் படி பார்த்தால், நன்றி என்பது ஒருவர் செய்த அல்லது ஒருவருக்கு மற்றவர்கள் செய்கிற உதவி அல்லது நன்மையைக் குறிக்கிறது. அதாவது, நாங்கள் நன்றி என்று கூறும் போது, ஆங்கிலத் Thanks ஐப் போன்றே, ஒருவர் செய்த நன்மையை மதிக்கிறோம், அதை வரவேற்கிறோம் என்பது தான் கருத்தாகும். பல இந்திய மொழிகளில் நன்றி என்ற சொல் கிடையாது என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் தமிழில் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் சொல்லாராய்ச்சியிலிருந்து பயன் பெற்றேன் . நான் சொன்னது தேன்க்ஸ் என்னும் சொல்லைப் பற்றியல்ல . தேன்க்ஸ் சொல்லும் பழக்கத்தை ஆங்கிலேயரிடமிருந்து கற்றோம் என்றுதான் கூறினேன் . உங்கள் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி .

   Delete