Saturday, 19 April 2014

தொல்காப்பியம் - ஒரு விளக்கம்  நமக்குக் கிடைத்துள்ள தமிழ் நூல்களுள் மிகப் பழமையானது தொல்காப்பியம் என்னும் இலக்கண நூல். அது எழுத்ததிகாரம், சொல்லதிகாரம்,  பொருளதிகாரம் ஆகிய மூன்று பிரிவுகள் உடையது. எழுத்துகளின் இலக்கணம் கூறுவது முதல் பிரிவுஅடுத்தது சொற்களுக்கு இலக்கணம் இயம்புவது; ஆகவே பொருளதிகாரம், சொற்களின் பொருளுக்கு இலக்கணமாஅல்ல,  சொற்பொருள் சொல்வது அகராதி, இலக்கணமாகாது.

   வாழ்க்கைக்கு இலக்கணம் வகுப்பது பொருளதிகாரம் என்று சிறு வயதில் படித்திருக்கிறேன்; வாழ்வுக்கு இலக்கணம் இருக்க முடியுமா என  வியப்பு மேலிட்டது. "பண்டைத் தமிழர் இன்பியல் வாழ்க்கை" என்னும் தலைப்பில் ஒரு தமிழறிஞர் இயற்றிய நூலை வாசித்தேன்;   நம் முன்னோரின் அக வாழ்க்கையைத் தொல்காப்பியப் பொருளதிகாரம் எவ்வாறு விவரிக்கிறது என்பதை அந்த நூல் விளக்கியிருந்தது. எனக்குப் பல ஐயங்கள் தோன்றின. அவை தீர்ந்தன, நான் பல்லாண்டுக்குப் பின்பு தொல்காப்பியம் கற்றபோது.

  பொருளதிகாரம் என்பதில் பொருள் என்னும் சொல் சப்ஜெக்ட் என்ற அர்த்தம் உடையது;  "மாந்த நேயம்" என்ற பொருள் குறித்து ஒரு சொற்பொழிவு நிகழ்ந்தது என்னும்போது அந்தச் சொல் அவ்வாறு அர்த்தம் தரக் காண்கிறோம். பழந்தமிழ்ப் பாடல்கள் எந்தெந்த சப்ஜெக்ட் பற்றிப் பாடுகின்றன என்பதைத் தொகுத்து,  வகைப் படுத்தி,  திணை, துறை முதலிய பெயர்களைச் சூட்டி,  விளக்குவதுதான் பொருளதிகாரம். (அது வாழ்க்கையின் இலக்கணம் அல்ல).

    அகப் பாடல்களில் இடம் பெறுகிற பாத்திரங்களுள் முக்கியமானவை: தலைவன்,  தலைவி, அவளுடைய தோழி,  செவிலித்தாய். தலைவியைப் பெற்றவள் நற்றாய் எனப்படுவாள்இவளுக்குப் பெரும் பங்கில்லைதலைவியை வளர்த்தவளுக்கே (செவிலித்தாய்) முதன்மை; இவளுக்குத் தலைவியின் வயதில் ஒரு மகள் இருப்பாள்;  இவள்தான் தோழி.

  இப்படி,  நாடகப் பாத்திரங்கள் போல் சிலரைப் படைத்து,   அவர்கள் பாடுவதாகப் புலவர்கள் கற்பனை செய்தவையே அகப் பாட்டுகள். இவை ஐந்து நூல்களில் உள்ளன: குறுந்தொகை, நற்றிணை, அக நானூறு, கலித்தொகை,  ஐங்குறு நூறு.

  காதலர் சந்திப்பது குறிஞ்சித் திணை;  தலைவன் பிரிவது பாலை; தலைவி பொறுமையாகக் காத்திருப்பது முல்லைத் திணை; புலம்புவது நெய்தல்; இல்லறம் நடத்துவது மருதம். இவ்வாறெல்லாம் தொல்காப்பியம் இலக்கணம் கூறுகிறது.

  ( நம் காலத் தமிழ்த் திரைப்படங்களை ஆதாரமாய்க் கொண்டு,   சுமார் 500 ஆண்டுக்குப் பின்பு ஆராய்கிறார் ஒருவர் என வைத்துக்கொள்வோம்; 21-ஆம் நூற்றாண்டுத் தமிழரின் அக வாழ்வைப் புரிந்துகொள்வது அந்த ஆராய்ச்சியின் நோக்கம். அவரது முடிவு என்னவாக இருக்கும்?

   "ஐந்து நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ் இளைஞர் இரு பாலாரும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தனர்; காதலிப்பதை வாழ்வின் குறிக்கோளாய்க் கொண்டனர்; இருவர்க்கு இடையில் காதல் அரும்பியதும், அவர்கள் கடற்கரை,  பாறை உச்சி ஆகிய இடங்களில் நின்றுகொண்டும்,  பூங்காக்களில் ஒருவரை ஒருவர் துரத்திக்கொண்டு ஓடியும் ஆடிப் பாடி மகிழ்வது வழக்கமாய் இருந்தது"

    இது எவ்வளவு தவறான முடிவு?  கற்பனையையும் நிஜ வாழ்க்கையையும் போட்டுக் குழப்பிக்கொண்ட முடிவல்லவா? இது போன்றதுதான் சங்கப் பாக்களைச் சான்றாக வைத்துப் பண்டைத் தமிழரின் வாழ்வைச் சித்திரிப்பது.)

   புறம் பற்றிய பாட்டுகளின் சப்ஜெக்ட்களுக்கும் திணை, துறை முதலான இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. காட்டாக,  ஒருவரைப்  புகழ்வது பாடாண்திணை; பாடு + ஆண் + திணை.

  யாப்பு,  மரபு முதலிய இலக்கணங்களும் பொருளதிகாரத்தில் இருக்கின்றன.

                       ====================


 (படம் நன்றி: இணையம்)
 


5 comments:

 1. தக்க உதாரணத்துடன் சங்கப்பாடல் சூழல்களை விளக்கியமைக்கு தங்களுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ககருஹ்துரைத்தமைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 2. மீண்டும் ஆசிரியர் முன் உட்கார்ந்து கேட்பது போல் இருந்தது. என்ன.... இதெல்லாம் இப்போது மூளைக்குள் நிற்பது இல்லை. விளக்கங்களுக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிக் கருத்துரைத்தமைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 3. பழந்தமிழ்ப் பாடல்கள் எந்தெந்த சப்ஜெக்ட் பற்றிப் பாடுகின்றன என்பதைத் தொகுத்து, வகைப் படுத்தி, திணை, துறை முதலிய பெயர்களைச் சூட்டி, விளக்குவதுதான் பொருளதிகாரம். (அது வாழ்க்கையின் இலக்கணம் அல்ல).

  முக்கியமான இந்தப்பதிவை இவ்வளவு நாட்கள் நான் எப்படித் தவறவிட்டேன் எனத் தெரியவில்லை. அண்மையில் தான் இதே கருத்தைக் கூறிய பதிவொன்றை ஊமைக்கனவுகள் தளத்தில் வாசித்தேன். அதுவரை வாழ்க்கைக்கு இலக்கணம் கூறியவன் தமிழன் என்று நான் பள்ளியில் படித்த காலத்திலிருந்து என் தமிழாசிரியர் உட்பட பலர் சொல்லியும் எழுதியும் கேள்விப்பட்டதை நம்பியிருந்தேன்.
  காதலர்கள் ஆடிப்பாடுவதை வைத்து நம் கால வாழ்க்கையைத் தீர்மானிப்பது எவ்வளவு அபத்தமாக முடியும் என அருமையான எடுத்துக்காட்டு கூறி விளக்கியிருக்கிறீர்கள். தொல்காப்பியத்தைப் பற்றிய மிகவும் அருமையான பதிவு பாராட்டுகள்!

  ReplyDelete