Saturday 10 May 2014

தேங்காய்




தேங்காய் - இந்தச் சொல்லின் தொடக்க வடிவம்: தெங்கங்காய். தென்னை மரத்தின் பழைய பெயர், தெங்கு. நன்றி ஒருவற்கு எனத் தொடங்கும் வாக்குண்டாம்  செய்யுளில், “தளரா வளர் தெங்கு என வருதல் காண்க.

 தெங்கு + அம் + காய் = தெங்கங்காய். அம் என்பது இரண்டு பெயர்ச் சொற்களை இணைக்கப் பயன்படுவது; சாரியை என்பார்கள்.

  வேறு காட்டுகள்:
நாற்று + அம் + கால் = நாற்றங்கால்;
ஆறு + அம் + கரை = ஆற்றங்கரை;
தென்னை + அம் + கீற்று = தென்னங்கீற்று.

  தெங்கங்காய் முற்றினால், தெங்கம்பழம். நாய் பெற்ற தெங்கம்பழம் என்னும் பழமொழியை அறிந்திருப்பீர்கள். ஒரு நாயிடம் முற்றிய தேங்காய் கிடைத்தால், அதனை அது உருட்டி விளையாடக்கூடும், பயன்படுத்தாது. தேங்காயை எவராவது எடுக்கப் போனால், குரைக்கும், கடிக்க வரும். தானும் உபயோகிக்காமல் பிறர்க்கும் ஈயாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தைக் குறிப்பது அந்தப் பழமொழி.

  (“வைக்கோல் போர் நாய் என்றும் சொல்வதுண்டு: வைக்கோல் போரின் அடியில் படுத்திருக்கும் நாய் வைக்கோலைத் தின்னப்போவதில்லை; தின்ன வரும் மாட்டையும் விரட்டும்.)



 தேங்காய் என்பதற்குத் "தேங்காதே" எனவும் பொருளுண்டு. திருமணங்களில் ஏன் தேங்காய் வழங்குகிறார்கள்?  நகைச்சுவையாய் ஒரு காரணம் சொன்னார் தமிழறிஞர் அரசஞ் சண்முகனார். மணம் முடிந்துவிட்டது, போய்விடு; இங்கே தேங்காதே (தங்கிவிடாதே) என்பதை நாசுக்காய்த் தெரிவிப்பதற்குத் தேங்காய் கொடுக்கிறோம் என்றார் அவர்.

 பிஞ்சுத் தேங்காயை ளநீர்’  என்கிறோம்; இச்சொல்லை விளக்கியுள்ளார் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்: இதில் உள்ள நீர்தமிழல்ல;  இந்தியாவின் மொழிகளுள் ஒன்றான முண்டாவில், நீர் என்பது தேங்காயைக் குறிக்கும்; எனவே, இள நீர் = இளந் தேங்காய் என்பது அவரது விளக்கம்.

         (முண்டா இன மக்கள் கிழக்கிந்தியவாசிகள்)
               -------------------------------------------


13 comments:

  1. தேங்காய் பற்றிய பல சுவாரசியப் பகிர்வுக்கு நன்றி. தெங்கம்பழம் என்ற வார்த்தை இலக்கியநயத்துக்காக சொல்லப்படுவது என்றே நினைத்திருந்தேன். சரியான வார்த்தை என்றறிய வியப்பு. திருமணத்தில் தேங்காய் கொடுப்பதன் காரணத்தை தமிழறிஞர் நகைச்சுவையாய் சொன்னவிதம் ரசிக்கவைத்தது.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டக் கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. வணக்கம்
    ஐயா.

    தேங்காய் பற்றி சிறப்பான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி .

      Delete
  3. தேங்காய் ஆரம்பத்தில் சிறிதாக இருக்கும் போது குரும்பட்டி என்றழைக்கப்படும்.
    இது ஒன்றுக்கும் உதவாது.(யாருக்காவது எறியலாம்.)
    பின்னர் அது இளநீர் ஆக மாறும். குடிக்கலாம், உள்புறம் பார்த்தால் ஒன்றும் இருக்காது.
    சிறிது காலம் முற்றவிட்டால் இளநீரும் வழுக்கலும் கிடைக்கும்
    இன்னும் சிறிது காலம் முற்றவிட்டால் முட்டுக்காய் என அழைக்கப்படும். இளநீரும் முற்றாத அரைப்பருவ தேங்காயும் கிடைக்கும்.
    மரத்திலிருந்து தானாக விழுந்த தேங்காய் மட்டையுடனான தேங்காயிலிருந்துதான் தேங்காய்ப்பூ, பால், எண்ணை போன்றவை பெறமுடியும்.

    ReplyDelete
    Replies
    1. அரிய தகவல்கள் கொண்ட உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  4. தேங்காய் பல அறியாத செய்திகளை அறிந்து கொண்டேன் நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

      Delete
  5. விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் தொடர்ந்த கருத்துரைகளுக்கு மிகுந்த நன்றி .

      Delete
  6. தேங்காதே விளக்கம் சுவையாய் இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  7. தேங்காதே என்பதற்குத் தமிழறிஞர் கூறிய காரணம் நல்ல நகைச்சுவை! ரசிக்க வைத்தது!

    ReplyDelete