Thursday, 18 December 2014

கழிவிரக்கம்


(ருசோவின் நூலிலிருந்து வேறொரு பகுதியின் மொழிபெயர்ப்பு; 15 ஆம் வயதில் அவர் ஒரு பிரபுவிடம்  ஏவலாளியாய் வேலை செய்தபோது நிகழ்ந்தது) மிகக்  கடினம், குடி போகும்போது  வீட்டில் கொஞ்சம் குழப்பம் ஏற்படாமலும்  பல பொருள்கள்  தொலைந்து போகாமலும் இருப்பது; எனினும்  வேலைக்காரர்களின் விஸ்வாசமும் லொரான்சி இணையரின் விழிப்புணர்வும்  எப்படி இருந்தன என்றால், பட்டியலில் எதுவும் குறையாத அளவுக்கு.

  செல்வி போந்த்தால் மட்டும் ரோஸ் நிறமும் வெண்மையும் கலந்த ஒரு  பழைய ரிப்பனை இழந்துவிட்டாள்.

  அதைவிட மேலான  எத்தனையோ பொருள்  என் கைக்கு அருகில் இருந்த போதிலும்  அந்த ரிப்பன் மாத்திரம்  என்னைக்  கவர்ந்தது. அதை நான்  திருடினேன். மறைத்து வைக்காமையால் விரைவாகவே என்னிடம் அதைக்  கண்டுபிடித்தார்கள்.  எங்கிருந்து எடுத்தேன் என்பதை  அறிய விரும்பினர்.  நான் குழம்பினேன், திக்கித்  திணறிவிட்டு மரியோன் கொடுத்ததாய் முகஞ் சிவக்கச் சொன்னேன்.

  மரியோன்  என்பவள் புதிய இளஞ்  சமையற்காரி; அழகி  மட்டுமல்ல, மலைவாசிகளிடம் மாத்திரமே காணக்கூடிய பிரகாசமான  செந்நிறம் கொண்டவள்; அவளது  அடக்கமும் மென்மையும் அவளைப் பார்க்கிற எவரையும் அவளை  நேசிக்காமலிருக்க விடமாட்டா;  அதோடு  நல்ல பெண், சாது, எந்தச் சோதனையிலும் தேறக்கூடிய விஸ்வாசி.  அதனால்தான்  எல்லார்க்கும் அதிர்ச்சி, நான் அவள்  பெயரைச் சொன்னபோது. அவள்மீது இருந்த நம்பிக்கைக்குக் குறைந்ததல்ல, என்மேலிருந்த நம்பிக்கை; ஆகையால் , இருவரில் யார்  மோசடிக்காரர் என்பதை உறுதிப் படுத்துவது முக்கியம் என முடிவாயிற்று.

  அவளை  வரவழைத்தனர்; நிறையப் பேர் இருந்தார்கள், ரோக் பிரபு உள்பட.  அவள் வந்தாள்;  அவளிடம்  ரிப்பனைக் காட்டினர். நான் அவள்மீது  குற்றம்  சாற்றினேன்; அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனித்து, என்மேல் ஒரு பார்வையை வீசினாள் , பேய்களையும் முறியடிக்கும் பார்வை; என் பண்பாடற்ற இதயம்  அதை எதிர்த்து நின்றது. சிறிது  நேரத்தில் அவள் மறுத்தாள், உறுதியாய் ஆனால் படபடப்புடன்;  என்னிடம் கூறினாள், யோசித்துப் பார்க்கும்படியும் எனக்குத் தீங்கிழைக்காத ஒரு  நிரபராதி பெண்ணை அகெளரவப்படுத்தாமல் இருக்கும்படியும்; நானோ  பயங்கரக்  கெட்ட எண்ணத்துடன்   என் கூற்றை வலியுறுத்தினேன், அவளது முகத்துக்கு எதிரே சொன்னேன் ரிப்பன் தந்ததாக.

  அந்தப் பரிதாபத்துக்கு உரிய பெண்  என்னிடம் இந்தச் சொற்களைத்தான் உரைத்தாள் : "ஆ, ருசோ, நீங்கள் நல்ல மனிதர் என்று  நம்பியிருந்தேன்; நீங்கள் என்னை மிகத் துர்ப்பாக்கியசாலி ஆக்குகிறீர்கள்;  உங்களின் இடத்தில் இருக்க  நான் விரும்ப மாட்டேன், அவ்வளவுதான்".  

 தொடர்ந்து  ஆர்ப்பாட்டம் இல்லாமலும்  அழுத்தமாகவும்  தற்காப்பை மேற்கொண்டாள், என்மீது  சிறு வசவும் மொழியாமலே.

  அந்த அடக்கம் என் உறுதியான நிலைப்பாட்டுடன் ஒப்பிடப்பட்டு அவளுக்கு  அநீதி இழைத்தது. ஒரு பக்கம் அமைதியான மென்மை, மறுபக்கம் அசாத்திய  துணிச்சல்   என்பது  இயல்பானதாய்ப் படவில்லை.  தீர்மானமாய்  ஓரு  முடிவுக்கு வந்தார்கள்  எனத் தோன்றவில்லை;   ஆனால்  எனக்குச் சாதகச் சூழ்நிலை.

 அப்போதைய  அலங்கோலத்தில்,  ஆழமாகப் பரிசீலிக்க  நேரம் இன்மையால்  ரோக் பிரபு  எங்களிருவரையும் வேலையிலிருந்து நீக்குகையில், "குற்றவாளியின் மனசாட்சி  நிரபராதிக்காகப் போதிய  அளவு பழி  வாங்கும்" என்று மட்டும் கூறினார்.

  அவரது  முன்னறிவிப்பு பொய்க்கவில்லை;  நிறைவேறத் தவறவில்லை, ஒரு  நாள்கூட.

  என்  புளுகு குற்றச்சாற்றுக்குப் பலியான அவள்  என்னவானாள் என்பதை நானறியேன்;  ஆனால்  ஒரு நல்ல வேலையை எளிதில் பெற்றிருப்பது சாத்தியமில்லை;  தன் கெளரவத்துக்குக் கொடிய இழுக்கொன்றை அவள் சுமந்திருந்தாள்.   திருட்டு அற்பமானதே , இருந்தாலும்  திருட்டு திருட்டுதான்;  மேலும் மோசம், ஓர் இளைஞனைக் கவர்வதற்காகச்  செய்த  திருட்டு.  இந்தக் குற்றங்களைத்  தன்னிடம் கொண்டவள் மீள்வதற்கு  என் பொய்யும் பிடிவாதமும் நம்பிக்கை தரவில்லை.

  அவளுக்கு  என்னால் ஏற்பட்ட பரிதாப  மற்றும்  ஆதரவற்ற நிலையைக்கூட  மிகப் பெரிய ஆபத்தாக  நான் கருதவில்லை; யாரறிவார், அவள் வயதில், இழிவுக்கு  ஆளான   ஒரு நிரபராதியின் மனத் தளர்ச்சி  எங்கே இட்டுச் சென்றிருக்கும் என்பதை?  அவளைத் துர்ப்பாக்கியசாலி ஆக்கியதற்கான கழிவிரக்கம் என்னால் தாங்க முடியாதது எனில், என்னைக் காட்டிலும் கீழானவளாக்கியதற்கான கழிவிரக்கம் பற்றி எண்ணிப் பாருங்கள்.

  இந்தக் கொடிய நினைவு என்னைச் சில வேளைகளில் கலக்குகிறது மற்றும்  இம்சிக்கிறது;  எந்த அளவுக்கு என்றால், தூக்கம் வராத இரவுகளில், என் குற்றம் நேற்றுதான் நிகழ்ந்தது போலவும்  அந்தப் பரிதாபப் பெண் வந்து  அதை இடித்துக் காட்டுவது போலவும் உணரும் அளவுக்கு;  என் நிம்மதியான நாள்களில், அதன் இம்சை குறைவாய் இருந்தது; ஆனால், புயல் வாழ்க்கையின்போது, "நான் தண்டிக்கப்பட்ட நிரபராதி" என்று சொல்லிக்கொள்ளும் ஆறுதலை நான் அடைய அது விடவில்லை. வளமான வாழ்வில் கழிவிரக்கம் தூங்குகிறது, துன்பச் சூழ்நிலையில் கொட்டுகிறது.

  (குறிப்பு - 1 -முதுமையில் ருசோ எத் தவறும் செய்யாதிருந்தும்  எந்த நாட்டிலும் புகலிடம் கிடைக்காமல் அலைந்தார் : ஆகவே, "புயல் வாழ்வு", "தண்டிக்கப்பட்ட நிரபராதி"  என்றார்.

              2 - மேலை நாடுகளில், ஓட்டுநர், ஏவலாள் முதலியவர்கள் புது இடத்தில் வேலை தேடும்போது, முந்தைய எஜமானர்கள் தந்த நற்சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

7 comments:

 1. ///முந்தைய எஜமானர்கள் தந்த நற்சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.///
  அருமையான முறை ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ; நம் நாட்டிலும் அந்த முறை இருந்தால் எவ்வளவு பயன் தரூம் !

   Delete
 2. வணக்கம்
  ஐயா.
  நல்ல கருத்து மிக்க கதை நன்றாக உள்ளது. தாங்கள் சொல்வது உண்மைதான்.
  தகுதிக்கு ஏற்ப சான்றிதழ் இருந்தால்தான் தகுதிக்கு ஏற்ப வேலை கிடைக்கும்..
  அருமையாக சொல்லியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. பராட்டிப் பின்ன்னூட்டம் தந்தமைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 3. சூழலால் தவறிழைத்த நிலையில் அதை பின்னாளில் நினைத்துப் பார்க்கும்போது எழும் கழிவிரக்கம் மிகக் கொடுமையானது. அதன் தீவிரத்தை மிகத் துல்லியமாக உணரச்செய்கின்றன ருசோவின் அனுபவ வரிகள். அந்தப் பெண்ணுக்காவது நான் தண்டிக்கப்பட்ட நிரபராதி என்ற ஆறுதல் கிட்டியிருக்கும். ஆனால் இவருக்கு தண்டனையிலிருந்து தப்பிய குற்றவாளி என்ற குறுகுறுப்பே மிஞ்சும். உண்மைதான். தேர்ந்த மொழிபெயர்ப்புக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 4. விமர்சித்துப் பின்ன்னூட்டம் அளித்தமைக்கு மிகுந்த நன்றி .

  ReplyDelete