Thursday, 4 December 2014

தாட்சண்யம்

            
(18 ஆம் நூற்றாண்டுப் பிரஞ்சு எழுத்தாளர் ருசோ பற்றித் தமிழ் வாசகர்கள் அறிந்திருப்பார்கள்; அவரது முழுப் பெயர் ழான் ழாக் ருசோ.பிரான்சில் 1789 இல் நிகழ்ந்த மாபெரும் புரட்சிக்கு அவரது எழுத்துகள் முக்கிய உந்துதல் .. அவர் தம் வரலாற்றை எழுதியுள்ளார்;  தம்முடைய தப்புத் தவறுகளையும் ஒளிவு மறைவு இன்றித் தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து மொழிபெயர்த்த ஒரு சிறு பகுதி.

15 ஆம் வயதில், உலோகத்தில் எழுத்து செதுக்கும் வேலையை அவர் கற்றுக்கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி.

 எஸ்பெரேகஸ் - சமைத்து உண்ணும் ஒரு கறிகாய்) என் குருவுக்குத் தோழர் ஒருவர் உண்டு; பெயர் வெரா. அருகில் இருந்த அவரது வீட்டுக்கும் அதன் தோட்டத்துக்கும் கொஞ்சம் தொலைவு.அதில் மிக அழகிய எஸ்ப்பெரேகஸ் (asparagus) விளைந்தது.

 பணப் பற்றாக்குறை உள்ள வெராவுக்கு ஓர் ஆசை தோன்றியது: தம் தாயாருக்குத் தெரியாமல் எஸ்ப்பெரேகசைத் திருடி விற்றுக் கிடைக்கும் தொகையில் நல்ல உணவகச் சாப்பாடு உண்ண விழைந்தார். தமக்குச் சாமர்த்தியம் குறைவு என்பதாலும் தாம் மாட்டிக்கொள்ள விரும்பாமையாலும் அந்த வேலைக்கு என்னைத் தேர்ந்தெடுத்தார்.

 அவரது புகழுரை என்னை மயக்கிற்று; புகழ்ச்சியின் உள்நோக்கம் தெரியாமையால் எளிதில் வசப்பட்டேன். திடீர் எனத் தோன்றிய எண்ணம்போல் அதைத் தெரிவித்தார். மறுத்தேன், வற்புறுத்தினார். புகழ்ச்சிக்கு இரையாவது என் பலவீனம்: ஒப்பினேன்.

  நாள்தோறும் காலை வேளைகளில் நான் போய் நன்கு வளர்ந்த எஸ்பெரேசுகளை அறுவடை செய்து மொலார் என்ற இடத்துக்குக் கொண்டுசென்று ஒரு பெண்ணிடம் விற்றேன்; திருடியது என்பதைப் புரிந்துகொண்ட அவள், அதை என்னிடம் வெளிப்படுத்தினாள் குறைவான விலை தருவதற்காக. எனக்கேற்பட்ட அச்சத்தில் அவள் அளிக்க விரும்பியதைப் பெற்றுக்கொண்டேன்.

  வெராவிடம் கொடுத்தேன்; அது உடனடியாய்ச் சாப்பாடாக மாறியது. வழங்கியவன் நான் என்றாலும் அவருடன் உண்டவன் வேறொரு தோழன்; உணவில் சிறிதளவே எனக்குப் பெரு மகிழ்ச்சி யூட்டப் போதுமானதாய் இருந்தது. அவர்களின் சாராயத்தை நான் தொட்டதுகூட இல்லை.

 அந்தச் சிறு திருட்டு, பல நாள் தொடர்ந்தது. அவரது சொந்தச் சரக்கின் விலையை அவரிடமிருந்து வரியாக வசூலித்து, திருடரையே திருடவேண்டும் என்னும் எண்ணம்கூட உதிக்காமலே, மிக அதிக விஸ்வாசத்துடன், அந் நேர்மை யற்ற செயலைச் செய்துவந்தேன். என் ஒரே நோக்கம் அதைச் செய்யத் தூண்டியவருக்கு உதவுதல் மாத்திரமே.

  நான் ஒரு வேளை மாட்டியிருந்தால், எத்தனை அடிகள், எத்தனை வசவுகள், எவ்வளவு கொடூரமான தண்டனைகள அனுபவித்திருப்பேன்! அப்போது அந்த மோசமான ஆளைக் காட்டிக் கொடுத்திருந்தால், அவர் , மறுத்திருப்பார், அவரை முழுதும் நம்பியிருப்பார்கள்; நான் பொய்யன் ஆவதோடு, அவர்மீது குற்றம் சுமத்தியதற்கு இரட்டிப்புத் தண்டனையும் கிடைத்திருக்கும்; ஏனெனில் அவர் தோழர், நான் கற்றுக்குட்டி.

 வலுவில்லா நிரபராதி சிக்குவான், பலமுள்ள குற்றவாளி தப்புவான் என்பது நிரந்தர நியதி..
              ====================6 comments:

 1. வணக்கம் ஐயா
  நல்லதொரு நிகழ்வைப் பகிர்ந்து அனைவருக்கும் தந்தமைக்கு நன்றிகள். சிறப்பான வரிகளை இறுதியில் தந்து முடித்தது சிறப்பு. தொடருங்கள்..

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி.

   Delete
 2. இந்த சிறு பத்தியில் எவ்வளவு கருத்துகள். புகழுரைக்கு மயங்குவதால் உண்டாகும் பிரச்சனையில் துவங்கி திருடனிடமும் திருடத்தெரியாத அப்பாவித்தனத்தைக் காட்டி இறுதியில் மாட்டியிருந்தால் என்னவாகியிருக்கும் என்ற சிந்தனைத்தெளிவோடு முடித்திருப்பது சிறப்பு. பிரெஞ்சு எழுத்தாளர் ரூசோவின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மொழிபெயர்த்துப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. பிரெஞ்சுப் புரட்சி என்றால் ரூசோவின் பெயர் கண்டிப்பாக நினைவுக்கு வரும். இத்தகைய பெருமைக்கு உரிய ரூசோ புகழ்ச்சிக்கு மயங்கித் திருட்டு வேலை செய்தார் என்பதையறியும் போது வியப்பு மேலிடுகிறது. அதை மறைக்காமல் தம் சுயசரிதையில் எழுதியிருக்கிறார் எனும் போது அவர் மீது உள்ள மதிப்பு இன்னும் அதிகமாகிறது. இதை மொழிபெயர்த்து அளித்தமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. திறனாய்வுப் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி . அறியாப் பருவத்தில் எல்லாரும் குற்றம் புரிதல் இயல்பு . தம் வரலாற்றில் பெரும்பாலான பிரபலங்கள் வெளிப்படுத்துவது இல்லை . சத்திய சோதனையில் காந்தி ஒளிவு மறைவு இன்றி ஒப்பியுள்ளார் .

   Delete
 4. சரியாக விமர்சித்துப் பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி . மொழிபெயர்த்த பகுதி சிறிது , ஆயினும் படிப்பினை பல நல்குவது .

  ReplyDelete