Sunday, 8 February 2015

தமிழ் வளர்ச்சிக்குத் தடை திசம்பர் 2004 இல் ஜோ. டி. குரூஸ் இயற்றிய புதினம் "ஆழிசூழ்  உலகு" வெளிவந்து எட்டாண்டில் நான்காம் பதிப்பைக் கண்டது.

   கன்னியாகுமரி மாவட்ட மீனவச் சமுதாயத்தில் பிறந்த ஆசிரியர், அந்த நூலில், தம் குலத்தினரின் ஆபத்து நிறைந்த தொழில், பழக்க வழக்கங்கள், உட்பகை முதலானவற்றைச் சித்திரித்ததோடு சில பாதிரிமார்களின் குறுகிய நோக்கம், ஒழுக்கக் கேடு ஆகியவற்றையும் வெட்ட வெளிச்சம் ஆக்கியதால் இவர்கள் கிளப்பிவிட்ட எதிர்ப்பு  காரணமாய், சென்னையில் பணியாற்றும் அவர் தம் ஊருக்குள் நுழைய இயலவில்லை.

 (அவரது அடுத்த புதினம், "கொற்கை", சாகித்திய அக்காதெமி பரிசு பெற்றது).

   புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலம் கிராமத்து மா.மு.கண்ணனின் இரண்டாம் புதினம், "கானா ஈனாவின் கணினி" பிரசுரமான சில நாள்களில் ஊர்க்காரர்கள் வெகுண்டெழுந்து வன்செயல்களில் ஈடுபட்டு அவரது குடிசையைக் கொளுத்திவிட்டார்கள்;  அதில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஏராள நூல்கள் தீக்கிரையாயின. அறிவுப் புதையல்களாயும் சிந்தனைக் கருவூலங்களாயும் திகழ்கிற நூல்களை எரிப்பது எவ்வளவு மடமை! காட்டுமிராண்டிகள் மேற்கொள்கின்ற இழிசெயல்!

  ஆசிரியர் இரண்டாண்டுக் காலமாய் ஊர் கடந்து வாழ்கிறார். சமூகச் சீரழிவு, பரவலான ஒழுக்கக் கேடு முதலியவற்றைத் தம் சொந்த அனுபவங்களை அடிப்படையாய்க் கொண்டு அம்பலப்படுத்தியதே அவரது  குற்றம்!

  அதே மாவட்டத்தின் குலந்திரன்பட்டு என்னும் சிற்றூர்க்காரர், தலித் எழுத்தாளர் துரை. குணா 40 பக்கக் கதை ஒன்று எழுதினார்; தலைப்பு: ஊரார் வரைந்த ஓவியம். சாதிக்கொடுமைகளைப் படம் பிடிக்கிற அதை மேல்சாதிக்காரர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. குடும்பத்தையே ஒதுக்கிவிட்டார்கள்; ஆசிரியர் ஊரினின்றும் வெளியேற நேரிட்டது.

   பேராசிரியர் பெருமாள் முருகனின் புதினம், "மாதொரு பாகன்", 2010இல்  வெளிவந்தது. திருச்செங்கோட்டுக்காரரான அவர்,  அப்பகுதி மக்களின் ஒரு  பழைய வழக்கத்தை மையக்கருவாய் வைத்து எழுதிய கதை; குழந்தைப்பேறு அற்ற பெண்கள், கோவில் தேரோட்ட நாளன்று இரவில், பிற ஆடவருடன் சேர்ந்து, அதிர்ஷ்டம் இருப்பின், சூலிகள் ஆவது அந்த வழக்கம். கதை பழங்காலத்தில் நிகழ்கிறது.

   நான்காண்டு சும்மா இருந்துவிட்டு, இப்போது, பெண்களை இழிவு படுத்தியுள்ளதாய்க் குற்றஞ்சுமத்தி, ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி, கடையடைப்பு ஆகியவற்றை ஆர்,எஸ்,எஸ். முதலிய மத வெறியர்களும் கவுண்டர்களில் சாதி வெறி தலைக்கேறியோரும் நடத்தியமையால், காவல் துறையின் ஆலோசனைப்படி, ஆசிரியர் வேற்றூருக்குச் சென்றார்.

    அந்த நூலைப் பென்குவின் கம்பனி, ஒன் பார்ட் வுமன் என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் பெயர்த்து 2014 இல் வெளியிட்டதற்குப் பின்பே எதிர்ப்பு. அரசு சமரசக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தது. அரசியலமைப்பு வழங்கியுள்ள கருத்து வெளியீட்டுச் சுதந்தரத்தை அது வலியுறுத்திப் பெருமாள் முருகனை ஆதரிப்பதற்குப் பதிலாய், கிளர்ச்சியாளருடன் சேர்ந்து,  காவல் துறையின் துணையுடன், ஆசிரியரை வற்புறுத்தி நிபந்தனையற்ற மன்னிப்பு, சர்ச்சைக்குரியவற்றை இனி எழுதுவதில்லை, விற்காத பிரதிகளைத் திரும்பப் பெறுவது ஆகிய முடிவுகளை அவர்மீது  திணித்து எழுதி வாங்கிக்கொண்டது. 

   நொந்துபோன பெருமாள் முருகன் இனி எதுவும் எழுதுவதில்லை என  அறிவித்திருக்கிறார்.

  மேற்கண்ட செய்திகள் எதைக் காட்டுகின்றன? இலக்கிய ரசனை குறைந்தவர்களாகத் தமிழ்ப் பொதுமக்கள் இருக்கிறார்கள், உள்ளதைச் சொன்னால் உடம்பெரிச்சல் அடைகிறார்கள்.

  புதுப்புதுக் கருக்களைக் கொண்ட நூல்கள்தான் மொழிக்குச் செழுமை சேர்க்கும். ஆட்சேபணைக்குரிய கருத்துகள் எனில் சட்டப்படி நடவடிக்கை  எடுப்பதை விடுத்துப் படைப்பாளியை ஒடுக்குவது எவ்வளவு மோசமான  செயல்? இனி எழுத்தாளர்கள், "நமக்கேன் வம்பு?" என்றெண்ணி அரைத்த  மாவையே அரைக்க வேண்டுமோ?  தமிழ்த் திரைப்படங்களைப் போல?


    +++++++++++++++++++++++++++++++++++++

8 comments:

 1. உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா...

  எல்லாம் காலக் கொடுமை...

  ReplyDelete
  Replies
  1. ஆதங்கப்படுவது தவிர வேறு என்ன செய்ய இயலும் ?கருத்துரைக்கு மிக்க நன்றி ...

   Delete
 2. தமிழ் மக்களின் இலக்கிய ரசனை இன்னும் மேம்படவேண்டும். பதிவிலுள்ள எடுத்துக்காட்டுகள் யாவும் வேதனை தருகின்றன. எழுத்தாளர்களின் சிந்தனைகள் முடக்கப்படும்போது எப்படி இலக்கியம் செழிக்கும்? மொழி எப்படி தழைக்கும்? நியாமான ஆதங்கம்.

  ReplyDelete
  Replies
  1. ரசனை மேம்படுமா என்பது ஐயம்தான் , பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

   Delete
 3. வேதனை தரும் நிக்ழ்வுகள் ஐயா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் , வருத்தம் தருவனவும் ஆகும் . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

   Delete
 4. பழங்காலத்தில் நடந்ததாகச் சொல்லப்பட்ட கதைக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம் ஏன்? அதுவும் வெளியாகி நான்காண்டுகள் கழித்து? மகாபாரதத்திலும் பழைய புராணங்களிலும் இல்லாத ஒன்றையா எழுத்தாளர் பெருமாள் முருகன் சொல்லிவிட்டார்? அவற்றை எந்த எதிர்ப்புமின்றித் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் மக்கள், இப்போது மட்டும் ஆர்ப்பரித்து எழுவதேன்? இதே போன்ற நிலைமை நீடித்தால், நீங்கள் சொல்வது போல் புதிதாக எழுத வருபவர்கள் நமக்கேன் வம்பு என்று அரைத்த மாவையே அரைக்கப் போகிறார்கள்! அதனால் தமிழ் புதின வளர்ச்சி தான் தடைபட்டுப் போகும்! பொருத்தமான காட்டுகளுடன் அருமையான கட்டுரை!

  ReplyDelete
  Replies
  1. சரீயான கருத்து . இந்துப் புராணங்களில் இல்லாத தீயொழுக்க நிகழ்ச்சிகளா ? அவற்றைப் போற்றுகிறார்கள் . இப்போதைய எதிர்ப்புக்கு மத மற்றும் சாதி வெறியர்களே காரணம் . விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete