Thursday, 19 February 2015

கடல் ஊர்தி


    


சில லட்சம்  ஆண்டுக்கு  முன்பே மனிதர் தோன்றிவிட்டாலும்  கடந்த ஐயாயிரம் வருடங்களுக்கு மட்டுந்தான்  அவர்களின் வரலாறு தெரிகிறதுஅதற்கு முன்னர் அவர்கள்  எங்கெங்கு எப்படியெப்படி வாழ்ந்து என்னென்ன சாதனை நிகழ்த்தினார்கள் என்பதை அறிய வழியில்லை.

     கடலைக் கடப்பதற்கு  ஊர்தி  உருவாக்கியது  ஓர் அரும் பெருஞ் சாதனை;    எந்த நாட்டுக்காரர்  அப்பெருமைக்கு  உரியவரோ?

      வரலாற்றின்படி, கப்பல்களைக் கட்டும் தொழில் நுட்பம் தெரிந்து  அவற்றை உருவாக்கி  முதன் முதலில் கடலைக் கடந்தவர்கள் சுமேரியர்கள்இப்போதைய  ஈராக்கில் வசித்த அவர்களே முதல் கடல் வணிகர்கள்.

       அவர்களின்  வாரிசாய்  விளங்கியவர்கள் எகிப்தியர்  என்றாலும், பெருமளவு  கடல்  வாணிகம் புரிந்த உலக  முதல்வர்கள் கிரீட்டியர்கள்;  அவர்களின் நாடு  எகிப்துக்கு  வடக்கில்  உள்ள கிரீட்  தீவுநடுநிலக்  கடல் முழுதிலும்  குறுக்கும் நெடுக்குமாய்க்  கலம் ஓட்டிப்   பற்பல நாடுகளுடன் வர்த்தகம் புரிந்து  செல்வம் குவித்துச் செழிப்பாய், சொகுசாய், வாழ்ந்த அவர்களுக்குப் பின்னர், சீதோனியர் என விவிலியம் குறிப்பிடும்  பினீசியர்   (இன்றைய  லெபனானின்  பழங்கால  மக்கள்)  கடலாதிக்கத்தைக் கைப்பற்றி  நீண்டநெடுந் தொலைவுப்  பயணம் மேற்கொண்டதுடன் நில்லாமல்,  போர்க் கப்பல்களும் கட்டிப்  பிற  நாடுகளின்மீது  படையெடுத்துச் சென்று  வென்று காலனிகள் தோற்றுவித்துப் பிற்காலத்து  ஆங்கிலேயர்  முதலியோர்க்கு முன்னோடிகளாய்த்  திகழ்ந்தார்கள்.

   அதன் பின்பு, யவனர்கள்  (கிரேக்கர், ரோமானியர்) கடல் வியாபாரிகளாய்ச் சிறந்து விளங்கினர்;   அவர்கள் தமிழகத்துக்கும்  வந்திருக்கிறார்கள்:

  1 - அக நானூறு - 149 :

  யவனர் தந்த வினைமாண் நன்கலம்
  பொன்னொடு வந்து கறியொடு பெயரும்

  (பொன்னைத் தந்து மிளகு வாங்கினர்);

  2 - புற நானூறு - 56 :

   யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்

  (தேறல் - மது;  சாராயம்  கொண்டு வந்து விற்றனர்);

  3 - மதுரைக் காஞ்சி - 321 - 323 :

    விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
    நனந்தலைத் தேஎத்து  நன்கலன் உய்ம்மார்
    புணர்ந்துடன் கொணர்ந்த  புரவியொடு

 (நாவாய் - கப்பல்;  ஓச்சுநர் - மாலுமிகள்;   கலன் உய்ம்மார்நகை வாங்கிப் போவதற்கு;   புரவி - குதிரைகள்.)
 குதிரைக்கு  மாற்று, பொன் நகை.

 தொழில் நுட்பம் மேம்பட மேம்பட,  காற்றை நம்பிச்  செலுத்திய பாய்மரக் கப்பல்களைக் கைவிட்டு நீராவியால் இயங்கும் பென்னம்பெரிய கலங்களை உருவாக்கி, உலகத்தின் ஒரு கோடியிலிருந்து மறு கோடிக்குத் துணிச்சலுடன் பயணித்த ஐரோப்பியர்களுள்  குறிப்பிடத்தக்கவர்கள் ஸ்பெயின், போர்த்துகல்ஆலந்து, இங்கிலாந்து, பிரான்சு  நாட்டவர்கள்பிற நாடுகளை இவர்கள் கைப்பற்றித்  தங்கள்  ஆட்சியை  அங்கே திணித்துச்  செல்வந் திரட்டிக்   கொழித்தார்கள்.

   புதுப்புதுப் பிரதேசங்களைக் கண்டுபிடிக்க  நான்கு தடவை பயணித்த கொலம்பஸ்  ஓர்  இத்தாலியர், உலகை  முதன்முதல்  வலம்வந்த மெகல்லன்  போர்த்துகீசியர் , ஆஸ்திரேலியாவைக் கண்ட  தாமஸ்  குக் ஆங்கிலேயர்,   எனத் தனிக் கடலோடிகளும்  சாதனை புரிந்து புகழ் எய்தி உலக வரலாற்றில்  இடம் பிடித்தனர்.

  வாணிகம்,   நாடு கைப்பற்றல்  அல்லாமல்,    பிற  தேசங்களுக்குக்  கடல்  பயணம் மேற்கொள்ள  நவீன  மற்றும் பெரிய  கப்பல்கள் பயன்பாட்டுக்கு வந்தன. காட்டாக, சென்னைக்கும்  சிங்கப்பூருக்கும்  இடையே ரோனாரஜூலா  என்ற   கப்பல்கள்   கால அட்டவணைப்படி பயணித்தன.

   பழந் தமிழ் மன்னர்கள்  கடலில் கலம்  செலுத்தினார்கள்  என்பது  கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்,  கடலுள்  மாய்ந்த  இளம்பெரு வழுதி  என்ற பெயர்களாலும்,

    நளியிரு முந்நீர்  நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட  உரவோன் ... ( முந்நீர் - கடல் )

 என்னும் புற நானூற்றுப்  பாடல்  அடிகளாலும் தெரிகிறது; ஆனால் விவரமான தகவல்கள் இல்லை. கப்பல் கட்டும் தொழில் நுட்பம் தமிழர்களுக்குத் தெரிந்திருந்தது என்பதற்குச்  சிறு ஆதாரமும்  இல்லை.

  பிற்காலச் சோழர்களுள் முதலாம்  ராஜேந்திரன்  மலேசியாவரைத் தன் கடற்படையைச்  செலுத்திச்  சில பகுதிகளைக் கைப்பற்றினான்   என்று வரலாறு  தெரிவிக்கிறது.
            -----------------------------------------------------7 comments:

 1. மலேசியாவின் கெடா (கடாரம்) நகரினைக் காண்பதற்கான வாய்ப்பு ஒரு முறை கிட்டியதை இப்போது எண்ணிப்பார்க்கின்றேன்
  நன்றி ஐயா
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வரலாற்றுத் தொடர்புடைய இடங்களைக் காண நேர்வது நல்வாய்ப்புதான் ; அது உங்களுக்குக் கிட்டியதறிய மகிழ்ச்சி . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

   Delete
 2. ஒவ்வொரு விளக்கமும் அருமை ஐயா....

  அறியத் தந்தமைக்கு நன்றி...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிப் பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி .

   Delete
 3. கடல் வாணிகம் செய்த நாட்டினர் பற்றியும், கடலில் கலம் ஓட்டிய தமிழ் மன்னர்கள் பற்றியும் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி. சென்னைக்கும் சிங்கப்பூருக்கும் இடையே ஓடிய கப்பல் பெயர்கள் ரோனா, ரஜூலா இதுவரை அறியாத புதிய செய்தி.

  ReplyDelete
 4. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . என் ஊரான காரைக்காலிலிருந்து அநேக முஸ்லிம்கள் சிங்கப்பூர் போவதும் வருவதுமாய் இருந்தமையால் கப்பல்களின் பெயர்கள் அடிக்கடி காதில் விழும் ; நாகப்பட்டினம் துறைமுகத்திலேயே ஏறலாம் , இறங்கலாம் .

  ReplyDelete

 5. ஐயா வணக்கம்!

  இன்று உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்.

  http://blogintamil.blogspot.fr/2015/08/blog-post_8.html

  ReplyDelete