Wednesday 15 April 2015

நூற்பா வரிசை


   இலக்கணவிதிகளைக் கூறும் செய்யுள்கள் வட  மொழியில் சூத்திரங்கள்  எனவும் தமிழில் நூற்பாக்கள் எனவும் சுட்டப்படுகின்றன. அவை அமைகிற வரிசையை அழகிய சொற்றொடரால் நன்னூல் குறிப்பிடுகிறது; அந்த வரிசை நான்கு வகைப்படும்:

    1   --   ஆற்றொழுக்கு  --  ஒரு  விதியைக்  கூறும்  ஒரு   சூத்திரம்அதற்குத்  தொடர்புடைய  அடுத்த  சூத்திரம்இப்படித்  தொடர்ந்து  செல்லும்  வரிசைக்கு  ஆற்றொழுக்கு  என்று  பெயர்.

   ஆற்றில்  நீர்  ஓடுகிறதுஅதைத்   தொடர்கிறது   பின்னால்  வரும்  நீர்இதை  மனத்திற்   கொண்டு  சூட்டிய  பெயர்.

   2  --    அரிமா  நோக்கம் -   பல   நூற்பாக்களையடுத்து  இடம்  பெறும்  ஒரு  சூத்திரமானது, தனக்கு முன்னால் உள்ள அத்தனைக்கும் பொதுவான  விதியைச்  சொன்னால்அது   அரிமா  நோக்கம்.

         அரிமா  என்பது  சிங்கம்;   அது  கொஞ்ச  தொலை  நடந்து  சென்றபின் ,  நின்று,     தான்  கடந்து   வந்த   பாதையைத்    திரும்பிப்   பார்க்குமாம்.  (மெய்  தானா  என்பது விலங்கு நூலார்க்குத்தான் தெரியும்). அப்படி சிங்கம்  நோக்குவது   போல்,   இந்த   நூற்பா, முந்தைய   பாக்களைத்  தழுவி,  விதி   சொல்கிறது  அல்லவா?

   3  --  தவளைப்  பாய்த்து --   அதாவது  தவளைப்   பாய்ச்சல்:   தவளைஓரிடத்திலிருந்து   வேறிடத்துக்குப்  பாயும்போதுஇடையில்  ஒரு   சிறு  நிலப்  பகுதியைத்   தாண்டுகிறது  அல்லவா?

 ஒரு பா இருக்கிறது;   இதற்கும்  அடுத்த  சில   பாக்களுக்கும்  தொடர்பு   இல்லை;  ஆனால்,  அதன்பின்பு  வரும் பாவுடன் தொடர்பு கொள்கிறது.  காட்டாக 28-  ஆம்   பாவின்   விதியும்   33 - ஆம்   சூத்திரத்தின்   விதியும்   சம்பந்தம்  உடையது.  இதுதான்  தவளைப்  பாய்த்து.  நான்கு  பாக்களைத்   தாண்டிவிடுகிறது.   

   4  --  பருந்தின்   வீழ்வு    ----   பல  நூற்பாக்கள்     ஆற்றொழுக்காகத்  தொடர்ந்து  செல்ல,   அடுத்து  வரும்  ஒன்று,   தனக்கு  முன்னால்  உள்ள    எல்லாப்  பாக்களுக்கும்   மட்டும்   அன்றி,   பின்னால்  வரப்  போகிற  சிலவற்றுக்கும்  பொருந்தும்   ஒரு  விதியைச்  சொன்னால்அது   பருந்தின்   வீழ்வு  (bird's  eye view).

 பருந்தானது  மேலே  வட்டம்  அடித்துக்கொண்டு  கீழேயுள்ள  எல்லாவற்றையும்   கவனிப்பது  போன்றது.

                                    நன்னூல்:

                    ஆற்றொழுக்கு      அரிமா     நோக்கம்    தவளைப்
                     பாய்த்துப்   பருந்தின்வீழ்வு  அன்னசூத்  திரநிலை.

     ஒரு    கட்டுரையிலும்  இந்த    நான்கு  நிலைகளைக்    காணலாம்:

    தொடர்ச்சியாகக்  கருத்துகளை  அடுக்கினால்ஆற்றொழுக்கு.   முன்னால்  உள்ள   சில  பத்திகளின்  எல்லாக்   கருத்துகளுக்கும்  தொடர்புடைய  பொதுவான  ஒரு  கருத்தைச்  சொல்வது  அரிமா  நோக்கம்.    4 ஆம்  பத்தியின்   கருத்தை    7 ஆம்    பத்தியில்   நினைவுபடுத்தி  மேலும்  அதை  விளக்குவது   தவளைப்   பாய்த்து . முன்னால்  எழுதியதுபின்னால்   சொல்லப்போவது,    யாவற்றையும்  தழுவும்  கருத்துபருந்தின்  வீழ்வு.  


                                 ============================

12 comments:

  1. நன்னூல்:
    ஆற்றொழுக்கு அரிமா நோக்கம் தவளைப்
    பாய்த்துப் பருந்தின்வீழ்வு அன்னசூத் திரநிலை.//

    நன்னூலில் வரும் இந்தப் பாடல் வரிகளையும் சுட்டிக்காட்டி, அதற்கான விளக்கங்களையும் மிக அழகாகவும், நன்கு மிகச்சுலபமாகப் புரிந்து கொள்ளும் விதமாகவும், மனதில் பதிந்துகொள்ளும் விதமாகவும் கூறியுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.

    தங்களின் புலமைக்கும், ஆர்வத்திற்கும் தலை வணங்குகிறேன், ஐயா. பகிர்வுக்கு நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு என் உள்ளம் நிறை நன்றி

      Delete
  2. அருமையான அழகான விளக்கங்கள் ஐயா... நன்றி...

    தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் குடும்பத்தார்க்கும் நானும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துக்கொள்கிறேன் .உங்கள் பாராட்டுரைக்கு என் மனம் நிறை நன்றி

      Delete
  3. அய்யா வணக்கம்.
    அரிமா நோக்கென்றால் ஒரு சூத்திரம் நடு நின்று தனக்கு முன்னும் பின்னும் உள்ள சூத்திரப்பொருட்களைத் தழுவுவது என நினைத்திருந்தேன்.
    அரிய செய்திகளை அறியத்தரும் தங்களின் விளக்கம் அருமையாக உள்ளது.
    தங்களைத் தொடர்கிறேன்.
    நன்றி.

    த ம 1

    ReplyDelete
    Replies
    1. உங்களை வரவேற்கிறேன் , தொடருங்கள் . உங்கள் பாராட்டு எனக்கு ஊக்கம் தருகிறது . உங்கள் வலைத் தளத்தில் பத்துப் பரிந்துரை , எட்டுக் கோடி பற்றிய கட்டுரை வாசித்தேன் , உங்கள் கருத்து சரியானது .

      Delete
  4. வணக்கம்
    ஐயா.

    விளக்கம் அருமையாக உள்ளது... அறியாத தகவல் பகிர்வுக்கு நன்றி த.ம 3

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுப் பின்னுரைக்கு என் மனப் பூர்வ நன்றி .

      Delete
  5. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பரிச்சயமானவற்றைக் கொண்டு இலக்கணம் கற்றுக்கொள்வது எவ்வளவு எளிதாக உள்ளது. இப்படிக் கற்றுக்கொள்ளும் இலக்கணம் எத்தனை வருடங்கள் ஆனாலும் மறக்கவே மறக்காது என்பதுதான் சிறப்பு. நூற்பா வரிசை குறித்த நன்னூல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியான கருத்து . இலக்கணத்தில் சில பகுதிகளை மட்டும் எளிமையாகக் கற்பிக்க இயலும் . கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  6. நூற்பாக்களின் வரிசை பற்றி நன்னூல் கூறுவது மிகவும் அருமை! நன்னூல் கூறும் செய்திகளை இது போல் அவ்வப்போது எழுதினால் நன்னூல் பற்றி நாங்களும் தெரிந்து கொள்ள வழியேற்படும். புதிய செய்திகளைத் தெரிவித்த பதிவுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  7. முயல்வேன் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி

    ReplyDelete