Monday, 16 November 2015

கவிஞரின் தாயார்
   மின்சாரம்  வராத  காலத்தில்பேய்  பிசாசு  பற்றிய  நம்பிக்கையும்  அச்சமும் நிறைந்திருந்தன;  இரவில், திருடர்  மற்றும்  தவிர்க்கமுடியாக்  காரணத்தால் வெளியே  போகவேண்டியவர் தவிர, மற்ற  எல்லாரும் இல்லத்தின்  உள்ளேயே  உறைந்தனர். மருண்டவன்  கண்ணுக்கு  இருண்டதெல்லாம்  பேயாய்த்  தோன்றி  நடுங்க  வைத்த  காலம்  அது! "ராத்திரி  ஒருவனைப் பேய் அடித்துவிட்டதுவாயாலும்  மூக்காலும் ரத்தம்  கக்கி  செத்துக்கிடந்தான்என, சில காலை வேளைகளில், மக்கள் பேசிக்கொண்டதைக்  கேட்டிருக்கிறேன். அப்படிப்பட்ட சூழ்நிலையில் நடந்த சுவை மிக்க நிகழ்ச்சியொன்றை நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம்தம் நூலொன்றில்  ("தாயார்  கொடுத்த  தனம்அல்லது  "என்  கதை"; சரியாக  நினைவில்லை; அறுபது ஆண்டுக்குமுன்பு வாசித்தது) விவரித்துள்ளார்:

 அவரது  தாயார் ஏட்டையாவின் (தலைமைக் காவலர்மனைவி.

  ஊரைப் பேயச்சம் பிடித்தாட்டிற்று; ஆனால் இவர், தாம் அஞ்சாதது  மட்டுமன்றி, 'அப்படியொன்று இல்லைஎன்று பெண்களிடம் கூறி விழிப்புணர்வு  ஏற்படுத்திக்கொண்டிருந்தார்.

  இருள் மண்டிய ஒரு மாலை வேளையில்தமது வீட்டின் கொல்லைப்  பக்கத்தில் சிறிது தொலைவில் இருந்த குளத்தில் நீர் மொண்டுகொண்டு வந்தபோது தமக்குப் பின்னால் மரக்கிளையின்  சலசலப்பு  கேட்டுத்  திரும்பிப்  பார்த்தார்; மரத்திலிருந்து குதித்த ஓர் உருவம் தலைவிரிகோலமாய்க் கைகளை அகல விரித்தபடி தம்மை நெருங்கக்கண்டு  உஷாரானார்அது ஓடி வந்து இவரை விரட்டியதுகொஞ்சமும் அஞ்சாமல் எதிர்த்துப் போராடித் தலையில்  குடத்தால்  ஓங்கி  மொத்தியவுடன்  ஓட்டம்  பிடித்தது.

   சில நாளுக்குப்பின்பு, தலையில் கட்டுடன் சந்தைக்கு வந்திருந்த ஓராள்  அங்கு இவரைப் பார்த்ததும், முகம் வேறுபட்டுப் பதுங்கவேஅவனைப்  பிடிக்கும்படி  தம்முடன்  வந்திருந்த  காவலரிடம்  சோன்னார்.

  தம்மைத்  தாக்கிய  பேய் அவன்தான்  என்பது  விசாரணையில்  தெரிந்தது.  அவன்  வாக்குமூலம் தந்தான்:

   பூசாரி பணம்  தந்து  ஏவினாராம்; மூட  நம்பிக்கைக்கு எதிராக  அந்த  அம்மா  பிரச்சாரம்  செய்வதால்  தம்மிடம் மாந்திரிகம்  செய்துகொள்ள  வருபவர்களின் எண்ணிக்கை  குறைவதாகவும் அவரைப்  பயமுறுத்திப் பேய் நம்பிக்கையை  உண்டாக்கினால்  வருமானம்  அதிகரிக்கும்  என்றும்  அவர்  சொன்னாராம்.

  இன்றைக்கும் பற்பலர் பேய் பிசாசு காத்து கருப்புக்குப் பயப்படுகையில்நூறு  ஆண்டுக்கு முந்தைய கால கட்டத்தில் ஒரு பெண்மணி பகுத்தறிவைப்  பயன்படுத்துபவராயும் நெஞ்சுரம்  மிக்கவராயும்  திகழ்ந்தமை  போற்றுதலுக்கு  உரியது.    ***********

10 comments:

 1. விழிப்புணர்வு ஊட்டிடும் நல்லதொரு கதை. பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. நல்ல கதை யெனப் பாராட்டிய உங்களுக்கு மிக்க நன்றி .

   Delete
 2. Replies
  1. அருமை அறிந்து அதைத் தெரிவித்த உங்களுக்கு மிக்க நன்றி .

   Delete
 3. Replies
  1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete
 4. நாமக்கல் கவிஞரின் தாயார் பற்றிய செய்தி வியப்பை ஊட்டுவதாக உள்ளது. நூறு ஆண்டுக்கு முன்னரே அதுவும் ஒரு பெண், பேய் பிசாசு பற்றிய மூடநம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட்டுள்ளார் என்பது வியக்க வைக்கும் செய்தி. பகிர்வுக்கு மிகவும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . மூட நம்பிக்கைக்கு ஆட்படாமல் பிரச்சினைகளைப் பகுத்தறிவால் அணுகித் தீர்வு கண்ட பெண்களும் பழங் காலத்தில் வாழ்ந்தமை வியப்புக்கும் பாராட்டுக்கும் உரியதுதான் .

   Delete
 5. எப்பேர்ப்பட்ட தைரியசாலியாக இருந்தாலும், இருள் மண்டிய மாலைப்பொழுதில் திடீரென்று தலைவிரிகோலமாய் ஒரு பயங்கர உருவம் நம்முன் குதித்தால் பயந்து மிரண்டு ஓடத்தான் பார்ப்பார்கள். ஆனால் கவிஞரின் தாயாரோ அந்த உருவத்துடன் போராடி, குடத்தாலேயே மொத்தி விரட்டியோடச் செய்ததுமில்லாமல், சந்தையில் அந்த ஆளைக் கண்டுபிடித்து விஷயத்தையும் கக்கவைத்துவிட்டாரே... மிகவும் வியக்கவைக்கும் நிகழ்வுதான் இது. பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வழக்கம்போல் விரிவான விமர்சனத்துடன் பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி .

   Delete