Saturday, 23 January 2016

பிரஞ்சு ஆய்வு நிறுவனம்

    முன்னாள் பிரஞ்சிந்தியாவை இந்தியாவிடம்  பிரஞ்சுக்காரர்கள் 1955 இல் ஒப்படைத்தபோது, இரு நாடுகளும் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, பிரஞ்சு ஆய்வு  நிறுவனமொன்றைப் புதுச்சேரியில் இயக்குவதற்குப் பிரான்சு அனுமதி  பெற்றது.

     அதன்  விளைவாய்,  புதுச்சேரியில்  மேற்சொன்ன  அமைப்பு  உடனடியாய் உருவாகிப்  பிரான்சின்  பண  உதவியால்   இயங்கி வருகிறது.  அதன்  பிரஞ்சுப் பெயர் ஐன்ஸ்த்தித்துய் பிரான்சே (Institut Francais). அதன்  60 ஆம் ஆண்டு நிறைவு விழா 18-11-2015 இல் கொண்டாடப்பட்டது. பழந்தமிழ் மற்றும் வடமொழி  இலக்கியச்  சுவடிகளை சேகரித்து, அவை   கெடாமல் இருப்பதற்கு ஏற்ற தட்ப வெப்ப சூழ்நிலையில் பத்திரப்படுத்தல், ஆராய்தல், மொழி பெயர்த்தல்,  நூல்  வெளியிடல் முதலியவை அதன்  நற்பணிகள். ஏறக்குறைய  8500  சுவடிகள்  அதன் வசம்  உள்ளன.

   முதல்  வெளியீடு,   காரைக்கால் அம்மையார்  இயற்றிய   நூல்களின்   பிரஞ்சு மொழிபெயர்ப்பு; ஏறக்குறை 50 ஆண்டுக்குமுன் இது வெளியாயிற்று. பெயர்ப்பாளர்  காரவேலன்  என்னும்  புனைபெயர் தரித்த லெஓன்  சேன்ழான்   (Leon Saint Jean) என்ற காரைக்காலின் புகழ் பெற்ற வழக்குரைஞர். தமிழ் ஆர்வலராகிய அவர், பாரதி கவிதை, தாயுமானவர் பாடல், சிலவற்றைப் பிரஞ்சில்  பெயர்த்தவர். 

   அவரது ஒத்துழைப்போடு, 1962 இல், தொடங்கியது நிறுவனத்தின்  'சங்க இலக்கியச் சொல்லடைவு' என்னும் நூல்; இடையில் அவர் காலமாகிவிடினும், நூல் முற்றுப்பெற்றது. சங்க இலக்கியங்களில் மட்டுமல்லாது, இனியவை நாற்பது முதலான சிறுசிறு நூல்களிலும் பயின்றுள்ள எல்லாச் சொற்களையும் அகர வரிசைப்படி தொகுத்து, அவை எந்தெந்த  நூல்களில்,  எவ்விடங்களில் வருகின்றன என்னும் விவரங்களை வழங்குகிற  நூல் அது.

     காட்டுகள்:

    அஃகாமை  --   குறள்  178 - 1.
    அகநிலை   --  சிலப் . 8 - 39.
    அகப்படுத்து - பதிற்று  14; கலி 57-24; அகம் 36-21; பழமொழி 387 -  2.
    பரிசின்மாக்கள் -  புறம்  121-21

    ஆயிரம் பக்கங்களுக்கு மேலும், மூன்று தொகுதிகளும் உடைய அது, ஆய்வர்களுக்குக் கைகொடுக்கும் அருமையான நூல்; பிரம்மாண்ட பணி! எந்தத்  தமிழ்  அமைப்பும் அரசும்  மேற்கொள்ளாத ஆக்கம்!


 ////////////////////////////////////////////////////////////////////
(படம் உதவி - இணையம்)

10 comments:

 1. சிறந்த நூல் பற்றிய தகவலுக்கு நன்றி ஐயா... ஆதங்கமும் புரிகிறது...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 2. //ஆயிரம் பக்கங்களுக்கு மேலும், மூன்று தொகுதிகளும் உடைய அது, ஆய்வர்களுக்குக் கைகொடுக்கும் அருமையான நூல்; பிரம்மாண்ட பணி! எந்தத் தமிழ் அமைப்பும் அரசும் மேற்கொள்ளாத ஆக்கம்!//

  வியப்பளிக்கும் தகவலுக்கு மிக்க நன்றி, சார்.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 3. இதுவரை கேள்விப்படாத செய்தி. தனி ஆளாக இருந்து பிரமாண்டமான இ்ச்செயலைச் செய்ததற்கு மிகுந்த பொறுமையும் கடின உழைப்பும் தேவைப்பட்டிருக்கும். பகிர்வுக்கு மிகுந்த நன்றி!

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு மிகுந்த நன்றி .

   Delete
 4. வணக்கம்
  ஐயா

  நூல்பற்றி சிறப்பாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வாக்குக்கும் மிகுந்த நன்றி .

   Delete
 5. பிரெஞ்சு ஆய்வுநிறுவனத்தின் பணிகள் வியக்கவைக்கின்றன. சுவடிகளைப் பத்திரப்படுத்திப் பாதுகாத்தல் என்பது எவ்வளவு கடினமான பணி. அதையும் சிரத்தையுடன் மேற்கொள்ளும் நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் போற்றுதற்குரியது. புதியதொரு தகவலை அறியத் தந்தமைக்கு மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. கருத்துரைக்கு மிக்க நன்றி . வெள்ளைக்காரர்கள் நன்கு திட்டமிட்டு முறையாகவும் செம்மையாகவும் செய்வார்கள் , நிதியும் நிறைய உண்டு .

   Delete