காந்தியடிகள் தம் வரலாற்றை 1925 ஆம் ஆண்டில் எழுதத் தொடங்கினார்; நவஜீவன் என்ற குஜராத்தி வார இதழில் அது தொடர்ந்து வெளிவந்தது. அவருடைய 50 வயதுவரை வரலாறு கூறும் அது, 'சத்திய சோதனை' என்னுந் தலைப்பில் தமிழில் பெயர்க்கப்பட்டு 1964 இல் நூலுருவம் அடைந்தது. ஐந்து பாகங்கொண்ட அதில் 2 ஆம் பாகம் 20 ஆம் அத்தியாயத்தில், அவர் தென்னாப்ரிக்காவில் வழக்குரைஞராய்த் தொழில் நடத்தியபோது, நிகழ்ந்த சம்பவமொன்றை விவரித்திருக்கிறார்: தலைப்பு: பாலசுந்தரம்
"மனப்பூர்வமாகக் கொள்ளும் புனிதமான ஆசை எதுவும் நிறைவேறிவிடுகிறது; இந்த விதி உண்மையானது என்பதை என் சொந்த அனுபவத்தில் அடிக்கடி கண்டிருக்கிறேன். ஏழைகளுக்கு சேவை செய்யவேண்டும் என்பதே என் உள்ளத்தின் அத்யந்த ஆசை; அந்த ஆசை, என்னை எப்பொழுதும் ஏழைகளின் நடுவில் கொண்டுபோய்ச் சேர்த்தது; அதனால் அவர்களுள் ஒருவனாய் என்னை ஆக்கிக்கொள்ளவும் முடிந்தது.
நான் வழக்குரைஞர் தொழிலை ஆரம்பித்து 3, 4 மாதங்கூட ஆகவில்லை. அப்பொழுது ஒரு தமிழர், கந்தையணிந்து, முண்டாசுத் துணியைக் கையில் வைத்துக்கொண்டு, முன்னம் பற்கள் இரண்டும் உடைந்துபோய், ரத்தம் வழியும் கோலத்தில் நடுங்கிக்கொண்டும் அழுதுகொண்டும் என் முன்னே வந்து நின்றார். அவர், தம்முடைய எஜமானால் கடுமையாய் அடிக்கப்பட்டிருந்தார். என் குமாஸ்தா ஒரு தமிழர்; அவர்மூலம் எல்லா விவரங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டேன். வந்தவரின் பெயர் பாலசுந்தரம். ஒரு பிரபலமான ஐரோப்பியரின்கீழ் ஒப்பந்தக் கூலியாய் வேலை செய்துவந்தார்; எஜமான் அவர்மீது கோபம் கொண்டார்; எல்லை மீறிப்போய் பலமாக அடித்துப் பற்களை உடைத்துவிட்டார்.
அவரை ஒரு டாக்டரிடம் அனுப்பினேன். பாலசுந்தரத்துக்கு ஏற்பட்டிருந்த காயங்களின் தன்மையைக் குறித்து டாக்டரிடமிருந்து ஓர் அத்தாட்சி வேண்டுமென்று கேட்டேன். அதைப் பெற்றேன். பாலசுந்தரத்தை மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் சென்று, அவரிடம் காயமடைந்தவரின் பிரமாண வாக்குமூலத்தை சமர்ப்பித்தேன்; அதைப் படித்ததும் மாஜிஸ்ட்ரேட் எரிச்சலுற்றார்; எஜமானுக்கு சம்மன் அனுப்பினார்.
எஜமான் தண்டிக்கப்படவேண்டும் என்பதல்ல என் விருப்பம். அவரிடமிருந்து பாலசுந்தரம் விடுதலை பெறவேண்டும் என்றே விரும்பினேன். ஒப்பந்தத் தொழிலாளர் பற்றிய சட்டங்களைப் படித்தேன். சாதாரண வேலைக்காரன் ஒருவன், முன்கூட்டி அறிவிக்காமல் வேலையை விட்டுப் போய்விட்டால், அவன்மீது எஜமான் சிவில் மன்றத்தில் வழக்கு தொடரலாம்; ஆனால், ஒப்பந்தத் தொழிலாளியின் விஷயத்திலோ இம்முறை முற்றும் மாறானது; எஜமான் தொழிலாளிமேல் கிரிமினல் மன்றத்தில் வழக்கு போட்டுத் தண்டித்து சிறையில் இடலாம். ஓர் அடிமையைப் போன்றே ஒப்பந்தத் தொழிலாளியும் எஜமானின் சொத்து.
பாலசுந்தரத்தை விடுவிக்க இருந்த வழிகள் இரண்டு: ஒப்பந்தத் தொழிலாளரின் பாதுகாப்பாளரைக்கொண்டு, ஒப்பந்தத்தை ரத்து செய்யும்படி செய்யலாம்; அல்லது வேறோர் எஜமானிடம் அவரை மாற்றிவிடச் செய்யலாம். எஜமானிடம் சென்று பேசினேன்; ஒப்பந்தத்தை ரத்து செய்ய சம்மதித்தார். பின்பு, பாதுகாப்பாளரைப் போய்ப் பார்த்தேன்; புதிய எஜமானரை நான் கண்டுபிடித்தால், தானும் சம்மதிப்பதாய்க் கூறினார்.
ஓர் எஜமானைத் தேடிப் புறப்பட்டேன். ஒப்பந்தத் தொழிலாளியை இந்தியர் வேலைக்கு வைத்துக்கொள்ளக்கூடாது; ஆகையால், அவர் வெள்ளைக்காரராகவே இருக்க வேண்டும். எனக்கு அப்போது மிகச் சில ஐரோப்பியர்களையே தெரியும், அவர்களில் ஒருவரை சந்தித்தேன்; அவர் மிக அன்புடன் ஒப்புக்கொண்டார்.
பாலசுந்தரத்தின் பழைய எஜமான் குற்றம் புரிந்திருப்பதாய் மாஜிஸ்ட்ரேட் முடிவு கூறினார்.
வழக்கு, ஒப்பந்தத் தொழிலாளர் ஒவ்வொருவருடைய காதுக்கும் எட்டிவிட்டது; அவர்கள் என்னைத் தங்களுடைய நண்பனாய்க் கருதினார்கள். இந்தத் தொடர்பைக் குறித்து நான் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தேன். அவர்கள் ஓயாமல் என் அலுவலகத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர். அவர்களுடைய இன்பதுன்பங்களை அறிந்துகொள்வதற்கு எனக்கு சிறந்த வாய்ப்பு அதனால் ஏற்பட்டது.
அந்த வழக்கில் அதிக விசேஷமானது எதுவுமில்லை; ஆனால், தங்கள் கட்சியை எடுத்துப் பேசுவதற்கும் தங்களுக்காகப் பகிரங்கமாக வேலை செய்வதற்கும் நேட்டாலில் ஒருவர் இருக்கிறார் என்பது ஒப்பந்தத் தொழிலாளர்க்கு ஆனந்தத்தோடு கூடிய அதிசயமாக இருந்ததோடு, அதனால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் உண்டாயிற்று."
-----------------------------------------------------
(படம் உதவி - இணையம்)
// தங்கள் கட்சியை எடுத்துப் பேசுவதற்கும் தங்களுக்காகப் பகிரங்கமாக வேலை செய்வதற்கும் நேட்டாலில் ஒருவர் இருக்கிறார் என்பது ஒப்பந்தத் தொழிலாளர்க்கு ஆனந்தத்தோடு கூடிய அதிசயமாக இருந்ததோடு, அதனால் அவர்களுக்கு ஒரு நம்பிக்கையும் உண்டாயிற்று."//
ReplyDeleteஇதுவே உண்மையில் பாதிக்கப்பட்டவரின் மனதுக்கு மிகவும் ஆறுதல் அளிக்கும் விஷயமாகும். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
மிகச் சரியாய்ச் சொன்னீர்கள் ; கருத்துரைக்கு மிகுந்த நன்றி .
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி .
Deleteஅறியாத சிறப்பான செய்தி... நன்றி ஐயா...
ReplyDeleteபாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .
Delete