தமிழ் இலக்கியங்களில் பாக்கள் முழு எண்ணிக்கையில் இருப்பதைக் கவனிக்கிறோம்:
பதிகம் --- 10
இனியவை, இன்னா, கார், களவழி -- 40
ஐந்திணை -- 50.
பதிற்றுப் பத்து, சதகம் -- 100
திணைமாலை --150
குறுந்தொகை, அகம், புறம், நற்றிணை, பழமொழி, -- 400
திருமந்திரம் -- 3000
திவியப் பிரபந்தம் -- 4000
இவையெல்லாவற்றுக்கும் முரணாகத் திருக்குறள் அதிகாரம் மட்டும் 133 என அரைகுறை
எண்ணாகஇருப்பதேன்? ஆசிரியர் இயற்றியவை 100, இடைச்செருகல் 33 என்று இருக்குமோ?
வ.உ.சிதம்பரனார், முதல் மூன்று அதிகாரங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை எனக் கருத்து
தெரிவித்தார்; அவரது கூற்றுப்படி, அதிகாரங்கள் 130 (முழு எண்).
நான் ஊகிக்கிறேன் 100 தான் அசல், மற்றவை இடைச்செருகல் என. எப்படி இருப்பினும், பயனில
சொல்லாமை, ஊழ், பெண்வழிச் சேறல் ஆகிய மூன்றும் நிச்சயமாய்ப் பிற்சேர்க்கையே என்று
எனக்குப் படுகிறது.
1 -- பயனற்றவை பேசுதல் கடுங் குற்றமா? கேட்பார்க்கு என்ன கேடு உண்டாகிவிடும்?
பெரும்பாலார் அப்படிப் பேசுவதில்லை; சிலர்க்கு மாத்திரம் அது பழக்கம். நம்பிக்கைத் துரோகம்,
வாக்குத் தவறுதல் முதலிய, மற்றவர்க்கு ஊறு விளைவிக்கும், குற்றங்களைக் கண்டுகொள்ளாமல்
விட்ட திருவள்ளுவர், ஒரு சாதாரண பழக்கத்தைக் கடிந்து பத்துப் பா இயற்றியிருப்பாரா?
பயனில சொல்லுவோர் மக்களே அல்ல, பதர்கள் என்று கடுமையாக இழித்துரைப்பாரா?
2 -- ஊழ் அதிகாரம், நூல் முழுதும் வற்புறுத்தும் ஆக்கக் கருத்துகளுக்கு அடியோடு முரண்பட்டு
அவற்றுக்கு வேட்டு வைக்கிறது.
ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி.
கருத்து - முயற்சியும் சோம்பலும் ஊழால் உண்டாகும் என அந்த அதிகாரம் கூறுகிறது .
ஆனால்,
திருவள்ளுவர் மற்ற அதிகாரங்களில் என்ன சொல்லியுள்ளார்?
603 - மடிமடிக் கொண்டொழுகும் பேதை
சோம்பேறியாய் ஒழுகுபவன் அறிவில்லாதவன்.
605 - நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
கெட்டுப் போகிறவர்கள் விரும்பி செய்யும் நான்கு குற்றங்களுள் ஒன்று சோம்பல் .
607 -- ..........................
மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
புரிந்து = விரும்பி. மாண்ட உஞற்றிலவர் = சோம்பலை விரும்புவதால் முயற்சி செய்யாதவர்.
619 -- தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
ஊழ் காரணமாய் முழுதும் முடியாமற் போனாலும் பாடுபட்ட அளவு பலன் கிடைக்கும்; ஆகையால்
முயல்வது மேலானது .
620 -- ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்.
விடாமுயற்சி ஊழையும் முறியடிக்கும்.
இவ்வாறு பெரும்பாலான பாக்களால் ஆசிரியர், மக்களைச் செயலுக்குத் தூண்டுகிறார்; எனவே
ஊழ் அதிகாரம் அவருக்கு உடன்பாடல்ல.
3 -- பெண்வழிச்சேறல், ஒருவன் தன் மனைவிக்கு அஞ்சி நடப்பதை வன்மையாய்ச் சாடுகிறது.
மனைவிக்கு, 'வாழ்க்கைத் துணை' என்னும் விருது தந்து, "பெண்ணின் பெருந்தக்கது இல்"
என்று அவளை மேன்மைப்படுத்தி,
பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்
என்று வினவிப் பெண்ணுக்கு உயர்வு தந்த ஆசிரியர், அத்தகைய கற்புடைய இல்லாளின் சொற்கேட்டு
நடக்கும் கணவனை இகழமாட்டார்.
பெண்ணை மட்டந்தட்டும் அந்த அதிகாரம், 'உயர்ந்தவனாகிய கணவன், தாழ்ந்தவளாகிய
மனையாளை, அடக்கி ஆள வேண்டுமே தவிர, அவள் பேச்சைக் கேட்டு ஒழுகுவது ஆண்மைக்கு
இழுக்கு' என்ற கருத்து கொண்ட ஆணாதிக்கவாதி ஒருவரின் சரக்குதான்.
வேறு இடைச்செருகல்களும் இருக்கலாம் என்று கருதுகிறேன்.
+++++++++++++++++++++++++++
(படம் உதவி - இணையம்)
இடைச்செருகல்களாக இருக்குமோ என சந்தேகித்து, அதனை நன்கு அலசி ஆராய்ந்து, தகுந்த உதாரணங்களும் கொடுத்து அசத்தியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteதொடர்ந்து பாராட்டி ஊக்குவிக்கும் உங்களுக்கு என் நெஞ்சு நிறைந்த நன்றி .
Deleteவித்தியாசமான அலசல் ..அருமை
ReplyDeleteவருக , வருக , உங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி .
Deleteஉங்கள் ஊகத்தைச் சான்று கொடுத்து விளக்கியுள்ளீர்கள். பெண்வழிச்சேறல் கண்டிப்பாக இடைச்செருகலாகத் தான் இருக்க வேண்டும். ஆய்வுக்குப் பயன்படும் பதிவு. மிகவும் நன்றி!
ReplyDeleteபாராட்டிக் கருத்துரைத்தமைக்கு என் உள்ளமார்ந்த நன்றி .
Delete