Friday 27 May 2016

தனியே அவர்க்கோர் குணம்


நூல்களிலிருந்து - 7

 (தமிழரைப் பற்றிப் பேச அல்லது எழுத நேர்ந்தால், பெரும்பாலானவர்கள், ஆகா, ஓகோ என்று தக்க ஆதாரமின்றி வானுக்கு உயர்த்திப் புகழ்வது வழக்கம். நடுநிலைத் திறனாய்வால் கண்ட முடிவுகளை அச்சமின்றித் தயக்கமின்றி வெளிப்படுத்தியவர் எஸ்.வையாபுரியார்; அடுத்து, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள க.ப.அறவாணன் அவர்கள்.

  தமிழர் என்றோர் இனமுண்டு
  தனியே அவர்க்கொரு குணமுண்டு

எனப் பாடினார் நாமக்கல் கவிஞர் ராமலிங்கர்; எது அந்தக் குணம் என்று ஆராய்ந்து முடிவு  கூறுகிறார் அறவாணன்.

  அவரது கட்டுரையொன்றை ஆய்வுக் கோவை 2004  என்னும் நூலிலிருந்து எடுத்துப் பகிர்கிறேன்.)

முனைவர் க.ப.அறவாணன்


    தனியே அவர்க்கோர் குணம்


  தமிழ் இலக்கியங்கள் பொதுவாகவும் அற இலக்கியங்கள் குறிப்பாகவும் தமிழர் நடத்தைகளை எந்த அளவில் பாதித்தன? 'போதிய அளவு பாதிக்கவில்லை அல்லது தமிழர்கள் இலக்கியங்களைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை. தமிழ் இலக்கியங்களைப் பொறுத்த அளவிற்குப் பெரும்பான்மை, தமிழ் மக்களின் கண்ணாடியாக விளங்குவதில்லை' என்பனவே இக்கட்டுரையின் கருதுகோள்.

  உடலோடு ஒட்டிய அங்கங்கள், உடல்மேல் மாட்டிய ஆடைகள், இவை இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. தோலின் நிலைமை வேறு, ஆடையின் நிலைமை வேறு. தோல் உடலின், உயிரின் ஒன்றிய அங்கம்; ஆடை அத்தகையது அன்று. தமிழரைப் பொறுத்தவரை, இலக்கியங்களும் அறங்களும் சமயங்களும் அவை சொல்லும் கோட்பாடுகளும் தமிழரின்  அங்கம் ஆனதில்லை; அவை வெறும் அலங்கார ஆடை மட்டுமே.

  சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய அற இலக்கியங்கள், திருக்குறள், இவற்றின் பின் தோன்றிய அற இலக்கியங்கள், அவற்றில் சொல்லப்பட்ட வாழ்க்கை வழிகாட்டும் நெறிமுறைகள், கடந்த நூற்றாண்டுகளில் பெரிய அளவு மக்களைப் பாதித்ததாகத் தெரியவில்லை; அற இலக்கியங்கள் மட்டுமன்றிகம்ப ராமாயணம், வில்லி பாரதம் முதலிய இதிகாசங்களும் சிலம்பு, மணிமேகலை முதலாய காப்பியங்களும் பெரிய புராணம், கந்த புராணம் முதலாய புராணங்களும் இன்ன பிறவுங்கூட இலக்கிய அரங்குகளிலும் கோயில் மேடைகளிலும் பயன்படுத்தப்பட்டன; அவை மக்களால் சுவைத்து இரசிக்கவும்பட்டன; ஆனால், மக்கள் வாழ்க்கையோடு செரிமானம் ஆகவில்லை; இரத்தத்தில் கலக்கவில்லை; நாடி நரம்புகளில் ஏறவில்லை. தமிழருடைய கடந்த நூற்றாண்டு வாழ்க்கையில் கிடைத்திருக்கும் சான்றுகளை வைத்து ஆராயும்போது மேற்கண்ட இலக்கியங்கள் எதுவும் அவர்களை அசைத்ததாகத் தெரியவில்லை. சான்றாகக் கள் குடித்தல், புலால் தின்னுதல், அதற்காக உயிர்களைக் கொல்லுதல்ஆண் பெண் பாலுறவுச் சிக்கல்கள், பரத்தையர் பெருக்கம், பொய்ஏமாற்று, திருட்டு முதலாய சமுதாயக் குற்றங்கள் குறைந்தனவாகத் தெரியவே இல்லை; நாளும் பெருகி வருகின்றன.

  இலக்கியங்கள்வழிப் பரப்பப்பட்ட சமுதாய அறங்கள் மட்டுமன்றி, இந்தியச் சமயங்கள் வழியாகப் பரப்பப்பட்ட அறங்களும் மக்களைச் சென்றடையவில்லை. சான்றாக, கி.பி. 3 முதல் 6  வரையிலான 300 ஆண்டுகளில், தமிழகத்தில் சமண  பெளத்த மதங்கள் மேலோங்கியிருந்தன; அவற்றின் நெறிகள் இலக்கியம், நடைவழிப் பயணம், மக்களிடம் கதை சொல்லிப் பிரச்சாரம் செய்தல்வழி மேற்கொள்ளப்பட்டன; விளைவாகச் சமண பெளத்தச் சடங்குகள், கோயில்கள், சிலை வழிபாடுகள் ஆகியன பெருகின; அந்த அளவுஅம்மதச் சான்றோர் பரப்பிய ஜைன அறமோ பெளத்த அறமோ பெருகவில்லை, நிலைக்கவில்லை என்பதைக் கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட தமிழருடைய தொடர் வரலாறு இன்றுவரை நிறுவிவருகிறது; விலக்காக ஆங்காங்கே சில  ஊர்களில் இருக்கும் மத நெறிகளைப் பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் நெறிகளாகக் கொள்ள முடியாது.

  சைவர்கள் தேவாரங்களையும் திருவாசகத்தையும் போற்றினர்; வைணவர், திவ்வியப் பிரபந்தத்தைப் போற்றினர்; ஆனால் இவை இறைவனை நோக்கிய போற்றிகளாக மட்டும், பக்தி போதை தரும் இறைவனின் அருட்செயல்களைப் பற்றிப் பேசுவனவாக மட்டும்  அமைந்துள்ளன. இப்பாடல்களில் அறக் கூறுகளின் பங்கு மிக மிகக் குறைவு. கிறித்துவ விவிலியத்தையும் அதில் உள்ள நீதி மொழிகளையும், இசுலாமியரின் திருக்குறானையும் அதிலுள்ள பல்வேறு நெறியுரைக்கும் கருத்துகளையும் ஒப்பிடும்போதுதேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம் ஆகியவற்றுள் அடங்கியுள்ள அறக்கருத்துகள்  மிகக் குறைவு; எனவே இவற்றால் மக்களிடம் அறநெறிகள் பரவவில்லை; பக்தி உணர்வுமயமாதல் மட்டுமே பெருகிற்று.

  ஆக, இலக்கியங்கள், அற இலக்கியங்கள், இந்திய சமயங்கள், இந்திய சமய இலக்கியங்கள் மக்கட் சமுதாயத்தை அறக் கோட்பாட்டில் பெரிதாக மாற்றி அமைத்துவிடவில்லை. ஐரோப்பியர் வரவிற்குப் பிறகுசட்டம் மேற்கண்டவற்றின் இடத்தைப் பெற்றுக்கொண்டது. வெளிப்படையான தண்டனை முறைகள் காவல் துறையினராலும் நீதித் துறையினராலும் வழங்கப்படுவதால், ஓரளவு இச்சட்டங்கள் மதிக்கப்படுகின்றன; ஆனால் சட்டங்களை மதிக்காத மக்கள் என்றே தமிழர்கள் மற்றவர்களால் கணிக்கப்படுகின்றனர். சிங்கப்பூர் முதலிய நாடுகளை ஒப்பிடும்போது அக்கணிப்பு சரி என்றே கருதத் தோன்றுகிறது. 

 கற்றவர்களிடம் இலக்கியம் சொல்லும் செய்தி (message) கொய்யாப் பழத்தின் தோல் போல அங்கமாவதில்லை; புளியம்பழம், தோல் வேறு சதை வேறாக இருப்பதுபோல், படித்த இலக்கியக் கருத்துரை வேறு, வாழ்வு வேறாக அயன்மையுற்று வாழ்கின்றனர்.

  சமுதாய ஒழுங்குகளைப் பயிற்றுகின்ற, நடைமுறைப்படுத்த விரும்புகின்ற மதங்களையும் தத்துவங்களையும் இசங்களையும் புறக்கணிக்கும் குணம் உடையவர்களாகவே தமிழர்கள் வரலாறு நெடுகத் தென்படுகின்றனர். சான்று: பெளத்தம், சமணம், கம்யூனிச இயக்கம், பெரியார் இயக்கம். மாறாக, தலைமை வழிபாட்டிலும் உணர்ச்சிவயத்திலும் தங்களை நிலைநிறுத்தும் மதங்களையும் கோட்பாடுகளையும் இயக்கங்களையுமே பின்பற்றுகின்றனர். சான்று: பக்தி இயக்கம், வேத சமயம், சினிமாக் கதாநாயகர்களை முன்னிறுத்தும் அரசியல் இயக்கங்கள்.


        +++++++++++++++++++++++++++++++++++++
(படம் உதவி - இணையம்)



6 comments:

  1. சரியான அலசல் ... அருமை https://ethilumpudhumai.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  2. நல்லதொரு மிகச்சிறப்பான அலசல் கட்டுரையைக் கொடுத்துள்ளீர்கள்.

    திரு. க.ப.அறவாணன் அவர்கள் எழுதிய மிகப்பெரிய நூல் ஒன்று எனக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதன் பெயர்: ’அற இலக்கியக் களஞ்சியம்’ என்பதாகும். அது விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் என்ற ஊரில் எனக்கு வழங்கப்பட்டது. அதுபற்றிய மேலும் விபரங்கள் இதோ இந்த என் பதிவினில் உள்ளன:- http://gopu1949.blogspot.in/2011/07/4.html

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தராய்ப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர் என்ற செய்தியும், அவரின் உருவப்படமும் தங்களின் இந்தப்பதிவின் மூலம் மட்டுமே நான் புதிதாக இன்று அறிந்துகொண்டேன். மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி . உங்கள் பதிவை நிச்சயமாக வாசிப்பேன் .

      Delete
  3. தமிழர்களின் தனிப்பட்ட குணங்களை அச்சமின்றித் தயக்கமின்றி உள்ளது உள்ளபடி வெளிப்படுத்தியிருக்கும் திரு அறவாணன் அவர்கள் பாராட்டுக்குரியவர். இனப்பற்று, மொழிப்பற்று அறவே இல்லாததும் தமிழரின் தனிப்பட்ட குணங்களே. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஏற்கக்கூடிய கருத்து . பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .

      Delete