லத்தீனிலிருந்து பொ.யு. 10-ஆம் நூற்றாண்டில் உருவாகிய பிரஞ்சு, அடுத்த ஆறாண்டுகளில், உரைநடையும் செய்யுளுமாகப் பலதுறை இலக்கியங்களை
ஈன்றது.
![]() |
Moliere |
16-ஆம் நூற்றாண்டுக் கவிஞர் Ronsard-இன் படைப்புகள் சுவை மிக்கவை. அதற்குப் பிந்தைய
நூற்றாண்டில், துன்பியல் நாடகங்களை Corneille, Racine என்னும் இருவர் செய்யுள்
வடிவில் இயற்றினர்; இவர்களுக்குக் கருக்கள்
கிரேக்க ரோமானிய வரலாறுகளிலிருந்து கிடைத்தன. இன்பியல் நாடகங்கள் Moliere -ஆல் உரைநடையிலும் எழுதப்பட்டன.
![]() |
Rousseau |
அடுத்த நூற்றாண்டு, உரைநடைக் காலம்: Voltaire, Rousseau
ஆகிய எழுத்துவல்லார் இருவர், மன்னனின்
எதேச்சதிகாரத்தையும் சமுதாயத்தின்மீது மத பீடங்கள் செலுத்திய ஆதிக்கத்தையும்
எதிர்த்து முழங்கிய கருத்துகள் 1789-இல் வெடித்த தீவிரமான, மக்கட் புரட்சிக்கான காரணங்களுள் குறிப்பிடத்தக்கவை; முடியாட்சி
ஒழிந்து குடியரசு முகிழ்ப்பதற்கு அவை வித்திட்டன. Rousseau-வின் Le Contrat Social (சமுதாய ஒப்பந்தம்) என்னும் நூல் மிக முக்கியமானது; உலகம் முழுதும் மன்னனைத் தெய்வ அம்சமாய்க் கருதிப் போற்றிய
காலத்தில், 'மக்களே நாட்டின் தலைவர்கள்' என்ற புதுமைக் கருத்தை அது பரப்பியது.
![]() |
Maupassant |
19-ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த எழுத்தாளராய்த்
திகழ்ந்த Victor Hugo, Balzac, Maupassant ஆகியோரைத் தமிழ் இலக்கிய உலகு அறியும். கவிஞர் Hugo விழுமிய
உரைநடையாளரும் ஆவார். அவரது Les
Miserables புதினம், 'ஏழை படும் பாடு'
என்ற தலைப்பில் சுத்தானந்த
பாரதியாரால் 75 ஆண்டுக்குமுன்பு
பெயர்க்கப்பட்டு, பிற்காலத்தில் அதே தலைப்புடன் திரைப்படமாயிற்று.
Balzac, 80-க்கு மேற்பட்ட புதினங்களை எழுதிக் குவித்த கற்பனைக்
களஞ்சியம். உலகச் சிறுகதை மன்னர் Maupassant இயற்றிய 300-க்கும் அதிகமான கதைகளுள்
பெரும்பாலானவை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன; அவரின் தாக்கம்
பெற்ற புதுமைப்பித்தன் ஐந்தைப் பெயர்த்துள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக Emile
Zola- வைச் சொல்லலாம்; இவருடைய 17 புதினங்களுள் Nana தமிழர்க்கு
அறிமுகமானது.
சிறந்த கவிஞர்களும் உதித்துக் கீர்த்தி
அடைந்தார்கள்:
![]() |
Beaudelaire |
Arthur Rimbaud |
1 -- Beaudelaire -இன் Les Fleurs du mal (துன்ப மலர்கள்) குறியீடுகளும் உருவகங்களும் நிரம்பிய படைப்பு.
2 -- யாப்பிலக்கணத்தைப் புறக்கணித்த படைப்பாளி Arthur
Rimbaud; இவர், Vers Libre (Free Verse) பயன்படுத்திப் பல வகை அடிகளில் புதுப்புதுப் படிமங்களை
வாரி வழங்கியவர். உலகக் கவிஞர் பற்பலருக்கு வழிகாட்டி; தமிழ்ப் புதுக்கவிதையிலும்
அவரின் தாக்கம் காணப்படுகிறதாம்.
இருவரும் குறியீட்டுக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய படைப்பாளிகளுள்
நால்வர் நோபல் பரிசு பெற்றவர்கள்:
![]() |
Jean Paul Sartre |
--- Jean
Paul Sartre புதுத் தத்துவம் ஒன்றின் தந்தை; அது பிரஞ்சில் existentialisme (இருத்தலியல்)
எனப்படுகிறது. சிறுகதை, நாடகம், புதினம், இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளில் புகழ் எய்திய
அவரது La Nausee (குமட்டல்), Les Mains sales (கறை படிந்த கைகள்), Huis clos (மூடிய கதவு) ஆகியவை பிரபலம். புதுச்சேரிப்
பிரஞ்சுப் பேராசிரியர் வெ. ராஜகோபாலனால் Les
Mains Sales 'மீண்டும் ஒரு விடுதலை' என்னுந்தலைப்பில் தமிழாக்கப்பட்டுள்ளது.
![]() |
Albert Camus |
---Albert
Camus பிரஞ்சு உரைநடையைச் சிறப்பாய்க் கையாண்டு மெருகேற்றியவர். அவர் படைத்த L'Etranger
(அந்நியன்), La
Peste ( Plague என்ற கொடுநோய்) ஆகிய புதினங்கள்
பிரஞ்சு இலக்கிய வானில் விண்மீன்கள். புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியை
மதனகல்யாணி La Peste- ஐத் தமிழில் பெயர்த்திருக்கிறார்.
![]() |
Claude simon |
--- 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுப்புதினம் என்ற
இலக்கிய வகை பிரான்சில் தோன்றிற்று. அது பாத்திரப்
படைப்பு, கால அளவு (chronology)
முதலியவற்றைப் புறக்கணிக்கிறது.
Claude Simon புதுப்புதினர்களுள் தலைசிறந்தவர். அவர் 1-9-2005-இல் காலமானார்.
--- Le Clesieux
வாழுகின்ற புதினப் படைப்பாளி.
இவருடைய La Tempete (சூறாவளி) Femme sans Identite (அடையாளம் தேடி அலையும் பெண்) ஆகிய நூல்கள் புதுச்சேரிப்
பிரஞ்சுப் பேராசிரியரும் குறுந்தொகையைப் பிரஞ்சில் பெயர்த்தவருமான முனைவர் சு.அ. வெங்கட சுப்ராய நாயகரால்
தமிழாக்கம் செய்யப்பட்டு, 16-9-16 அன்று, புதுச்சேரித் தமிழ்ச்
சங்கத்தில் வெளியிடப்பட்டன. Le Clesieux-விடம் இந்தியச் சிந்தனைத் தாக்கம் காணப்படுகிறது என்பதை விளக்கிப்
புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியர் இரா.
கிருஷ்ணமூர்த்தி எழுதிய Impact of Indian Thought on Le Clesieux
என்ற கட்டுரை The
Hindu நாளிதழில் 5 ஆண்டுக்குமுன் வெளிவந்த
தகவல் குறிப்பிடத்தக்கது.
இலக்கிய வளஞ்செறிந்த மொழிகளுள் பிரஞ்சு முக்கியமானது.
இது ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக உலகில் பரவியுள்ளது. இந்தச் சிறு கட்டுரை மிக முக்கிய
படைப்பாளிகளை மட்டும் அறிமுகப்படுத்துகிறது.
================================
//Rousseau-வின் Le Contrat Social (சமுதாய ஒப்பந்தம்) என்னும் நூல் மிக முக்கியமானது; உலகம் முழுதும் மன்னனைத் தெய்வ அம்சமாய்க் கருதிப் போற்றிய காலத்தில், 'மக்களே நாட்டின் தலைவர்கள்' என்ற புதுமைக் கருத்தை அது பரப்பியது.//
ReplyDeleteஆஹா, மிகவும் பயனுள்ள செய்திகளுடன் வழக்கம்போல வரலாற்று கட்டுரை அருமையாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.
தொடர்ந்து வாசிப்பதோடு நின்றுவிடாமல் பாராட்டி ஊக்கமும் அளிக்கும் உங்களுக்கு மிக்க நன்றி .
DeleteThis comment has been removed by the author.
Deleteவணக்கம்.
ReplyDeleteகாலப்பெரும்பகுப்புப் பொதுயுகம் என்று குறிக்கப்பட்டமை இன்னும் பரவலாக்கம் பெறாப் புதுமை.
பிரஞ்சு இலக்கியத்தில் தாங்கள் குறிப்பிட்டுள்ள நூல்களுள் சிலவற்றின் பெயர்கள் மட்டுமே தெரிந்தவை.
கூடுதல் குறிப்புகளைத் தங்கள் பதிவின் வாயிலாக அறிந்தேன்.
இருப்பினும் ஒரு மொழியின் சுகம் அறிந்த ஒருவனுக்கு, ஒரு மொழி கற்க/அறிய முடியாததன் வலியும் தெரியும்.
பிரஞ்சு கற்காததன் இழப்பை உணர்கிறேன் தங்கள் பதிவின் ஊடாக.
தொடர்கிறேன்.
மிக்க நன்றி.
வருக , வருக , வணக்கம் . கொஞ்ச காலத்துக்கு முன்பு ஊமைக் கனவுகளை வாசிக்கும் ஆவலோடு திறந்தேன் . ஓர் அரிய தளம் நின்றுபோயிற்றே என வருந்தினேன் .உங்களின் ஊக்கும் பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி . இழப்புக்காக வருந்தாதீர்கள் ; தாய்மொழியையே கற்க வாய்ப்பில்லாதோர் நிறைந்த நாட்டில் நாம் பிற மொழிகூடப் பயில முடிந்ததே !
DeleteThis comment has been removed by the author.
Deleteபிரெஞ்சு இலக்கியப் பெருந்தகைகளைப் பற்றிப் பெரிதும் அறிந்துகொள்ள உதவும் பதிவு.. தங்கள் தயவால்தான் மொலியேர், ரூசோ, மொப்பசான் போன்ற பெரும் எழுத்தாளுமைகளின் ஆக்கங்களை தமிழில் வாசித்து இன்புற முடிந்தது, முடிகிறது. தங்கள் அயராத பணிக்கு மனமார்ந்த நன்றியும் பாராட்டும்.
ReplyDeleteபாராட்டுக்கு மிக்க நன்றி ."தாமின் புறுவ துலகின் புறக்கண்டு காமுறுவர் கற்றறிந்தார் "
DeleteThis comment has been removed by the author.
Deleteபிரெஞ்சிலக்கியப் படைப்பாளிகள் சிலரைப் பற்றியும் அவர்தம் படைப்புகள் பற்றியும் அறிந்து கொண்டேன். Le Clesieux நூல்களின் மொழியாக்கம் அண்மையில் வெளியிடப்பட்டதும் அறிந்தேன். பிரெஞ்சிலக்கிய வரலாற்றின் மிக முக்கியப் படைப்பாளிகள் குறித்துத் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு மிகவும் நன்றி!.
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Delete