Tuesday 22 November 2016

பெரியவர் மோன்ழிலே


    ( பிரஞ்சு சிறுகதை மன்னர் மொப்பசான் எழுதியது; ஜனவரி 1997 மஞ்சரியில் வந்தது)

எங்கள் அலுவலகத்துப் பெரியவர் மோன்ழிலே பணி மூப்பர்பண்பாளர்; எங்களுக்குத் தெரிந்து அவர் பாரீசை விட்டு வெளியே சென்றதேயில்லை.   

 நாங்களோ, கோடை தொடங்கியதும், எல்லாரும் சேர்ந்துஞாயிறுதோறும்புற நகர்களுக்குப் போய்ப் புல்லில் உருண்டு புரள்வது அல்லது கழுத்துவரை நீரில் மூழ்கிக் கிடப்பது வழக்கம்.  
 
    ஒரு நாள்நாங்கள் சொன்னோம்:   

"அதை அனுபவித்துப் பாருங்கள், ஐயா; ஒரு முறை புற நகருக்கு வாருங்களேன்,  எப்படித்தான் இருக்கிறது என்று பார்ப்பதற்கு".

    அவர் பதிலளித்தார்:   

 "போயிருக்கிறேனேஇருபது ஆண்டுக்கு முன்பு;   அப்பப்பா, போதும்அது போதும்".

    "அப்படியா? அதைப் பற்றி சொல்லுங்களேன்".

     "அதற்கென்ன, சொல்கிறேன். உங்களுக்கு புவாலேனைத் தெரியுமல்லவா, பழைய எழுத்தர்?".

    "அவரா,   நன்றாகத் தெரியுமே!".

    "அந்த ராஸ்கலுக்குப் புற நகர் கொலோம்பில் ஒரு வீடு உண்டு;   ஒரு ஞாயிற்றுக்கிழமையில் அங்கே வரும்படி பல முறை அழைத்துக்கொண்டிருந்தான்; 'வா, மோன்ழிலே, அருமையான வாக்கிங்  போகலாம்' என்று சொன்னான்.   

    ஒரு காலைவேளையில் கொலோம்பை அடைந்தேன்; அலைந்து திரிந்து ஒரு சந்தின் கடைசியில்இரு சுவர்களுக்கு இடையே,    ஒரு பழங்கதவைக் கண்டுபிடித்து மணியடித்தேன்கதவு திறந்தது: விகாரமான, பழந்துணிகளால் மூடப்பட்ட,   அழுக்கேறிய, அருவருப்பான உருவமொன்று நின்றது; தலைமுடியில் கோழி இறகுகளை செருகியிருந்த அது என்னை விழுங்க விரும்பியதுபோல் தோன்றியது.  
 
 --- என்ன வேண்டும்?   

 -- புவாலேன்.   

 -- அவரிடம் உங்களுக்கு ஆகவேண்டியது?   

அந்த சிடுமூஞ்சியின் விசாரணை என்னை நெளீய வைத்தது. திணறியபடி சொன்னேன்: "வந்து... அவர் வரச் சொன்னார்".

-- ஓஹோ,  சாப்பாட்டுக்கு வருபவர் நீங்கள் தானா?

-- ஆம்.   

 வீட்டின் உள்பக்கம் திரும்பிய அவள், " புவாலேன்இதோ உன் நண்பர்" என்று கடுகடுத்த குரலில் கூறினாள்.   

    அவன் வந்து என் கையைக் குலுக்கிய பின்பு,  தோட்டம் என அவன் பெயர் சூட்டியிருந்த ஓர் இடத்துக்கு அழைத்து சென்றான். ஒரு சிறு பரப்பு: சுற்றியிருந்த உயரமான வீடுகள் காரணமாய்,  ஒரு நாளில் இரண்டொரு மணி நேரம் மட்டுமே வெயில்படும்; அங்கே சில பூச்செடிகள் சாவுப்படுக்கையில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தன.  
 
    அவன்,  "நீ எனக்கு ஓர் உதவி செய்யவேண்டும்என் மனைவியைப் பார்த்தாயல்லவா?   அவள் ஒருமாதிரி பெண்உனக்குப் புரிந்திருக்குமே! இன்றைக்குநான் உன்னை அழைத்திருப்பதால், எனக்குத் தூய ஆடை அளித்திருக்கிறாள்அதில் கறைகிறை பட்டதோ, தொலைந்தேன்அதனால்,   இந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற உன்னை நம்பியிருக்கிறேன்" என்றான்.   

    இசைந்தேன். கோட்டைக் கழற்றி, சட்டைக் கைகளைத் தூக்கிவிட்டுக்கொண்டு,   முழு வலிமையுடன் ஒரு விதப் பம்ப்பைக் கையாளத் தொடங்கினேன். அது விசிலடித்தும் புஸ் எனப் பெருமூச்சு விட்டும் காசநோயாளிபோல் கரகரப்பான ஓசையெழுப்பிக்கொண்டு மெல்லிய நீர்த்தாரையைப் பீய்ச்சிற்று. ஒரு தடவை பூவாளியை நிரப்பப் பத்து நிமிடம் தேவைப்பட்டது. நான் தொப்பல்!

புவாலேன் எனக்கு ஆணையிட்டான்: "இங்கே... இந்த செடிக்கு... இன்னம் கொஞ்சம்.. போதும்.. அந்த செடிக்கு.."

    பூவாளி ஓட்டை;    மலர்மேல் பட்ட நீரைவிட என் காலில் கொட்டியது  அதிகம். கால்சட்டையின் அடிப்பகுதி நனைந்து சேற்றைப் பூசிக்கொண்டது;    இப்படி பல தடவை நீர் பாய்ச்சுவதும் கால்களை நனைத்துக்கொள்வதுமாய் இருந்துவிட்டு, கடைசியில் ஓய்ந்துபோய் வேலையை நிறுத்தினேன்.  
     
    திருமதியின் குரல் தொலைவிலிருந்து கேட்டது: "வருகிறீர்களா   சாப்பாடு தயார்!"

 வீட்டில் வெயில் தகித்தது;  அரபு நாட்டு வெந்நீர்க் குளியலறைகூட அந்த சாப்பாட்டறையைக் காட்டிலும் வெப்பம் குறைந்துதான் இருக்கும்!

    மேசைமீது மூன்று தட்டு;   முள்கரண்டிகள்,  ஸ்பூன்கள்; நடுவே ஒரு சட்டியில் மாட்டுக்கறி + உருளைக்கிழங்கு கஞ்சி. உண்ணத் தொடங்கினோம்.    

    வெளிர் சிவப்பு நிறத் தண்ணீரால் நிரம்பிய ஒரு கண்ணாடிக் கூஜா என் பார்வையைக் கவர்ந்தது. சங்கடத்தில் நெளிந்த புவாலேன் அவளிடம், "ஏன், விசேஷ நாளில், சுயமான செந்திராட்சை மது கொஞ்சம் தரமாட்டாயா?" என்று கேட்டான்.  
 
கோபத்துடன் அவனது முகத்தை வெறித்துப் பார்த்தாள்: "எதற்குஇரண்டுபேரும் போதை தலைக்கேறி இன்று முழுதும் என் வீட்டில் கத்திக்கொண்டு கிடப்பதற்கா? விசேஷமாவது,  ஒண்ணாவது!"

    அவன் மவுனமானான். கஞ்சிக்கு அப்புறம், பன்றிக் கொழுப்புடன் தயாரித்த உருளைக்கிழங்கு கொண்டுவந்து வைத்தாள். உரையாடாமலே அதை உண்டு முடித்தோம். "அவ்வளவுதான்; எழுந்திருங்கள்" என்றாள். 
  
    அவன் மலைத்துப்போய் அவளை நோக்கி, " என்னது? அந்தப் புறாகாலையில் உரித்தாயே, அது?" எனக் கேட்டான்; அவள் இடுப்பில் கைகளுடன் பதில் அளித்தாள்: "போதாதாசாப்பிட்டது? நீ யாரையாவது அழைத்து வந்தால், வீட்டில் இருப்பதையெல்லாம் தின்று தீர்த்துவிடவேண்டும் என்று அர்த்தமாஇரவு நான் எதை சாப்பிடுவேன்?"

 நாங்கள் எழுந்தோம். நண்பன் என் காதைக் கடித்தான்: "ஒரு நிமிஷம்;   வருகிறேன்".

    சமையல் அறைக்குள் நுழைந்த மனைவியைத் தொடர்ந்தான். உரையாடல் என் காதில் விழுந்தது.   

    -- இருபது பிரான் தாயேன்.   

 ---என்ன செய்யப்போகிறாய்இருபது பிரானை வைத்துக்கொண்டு?   

 --தெரியவில்லை; என்ன செலவு வருமென்று முன்கூட்டியே சொல்ல முடியாது. கையில் பணம் இருப்பது நல்லது.  

 எனக்குக் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவள் இரைந்தாள்: "முடியாது; தர மாட்டேன். அந்த மனிதர் நம் வீட்டில் சாப்பிட்டிருப்பதால் அவர்தான் செலவு செய்ய வேண்டும்".

    புவாலேன் வந்தான். வாக்கிங் கிளம்பினோம். பண்பாடு காக்க விரும்பிய நான்,    அவளுக்கு முன்னால் குனிந்துதிக்கியபடி சொன்னேன்:

    "மேடம்,  நன்றி;   இனிய விருந்தோம்பல்".

அவள் பதிலுக்கு,  "சரி சரிதிரும்பி வரும்போது அவர் நிதானத்தில் இருக்க வேண்டும்; இல்லாவிட்டால் நீங்கள் எனக்குப் பதில் சொல்ல வேண்டியிருக்கும், தெரிகிறதா?" என்றாள். நாங்கள் புறப்பட்டோம். 



கொளுத்தும் வெயிலில்ஆற்றங்கரையை அடைந்தோம். என் பசி தீரவில்லை;   "ஏதாவது சாப்பிட வேண்டும்" என்றேன். ஒரு குடிசையுள் அழைத்து சென்றான்: அது ஒரு சாராயக் கடை; மாலுமிகள் நிறைந்திருந்தார்கள்.   

    "பார்வைக்கு இப்படி இருக்கிறதேயொழிய, அருமையான இடம்" என்றான். சாப்பிட்டோம், ஒயின் பருகினோம்இரண்டாம் கிலாசிலேயே அந்தப் பயலுக்குப் போதை தலைக்கேறிவிட்டது; ஒயினில் அவள் ஏன் நிறைய நீர் கலந்திருந்தாள் என்பது அப்போதுதான் எனக்குப் புரிந்தது. அவன் சொற்பொழிவாற்றத் தொடங்கினான்; எழுந்தான்சர்க்கஸ் வேலைகள் செய்ய முனைந்தான்; கைகலப்பில் ஈடுபட்ட இருவர்க்கிடையில் மத்தியஸ்தம் செய்ய முற்பட்டான்கடை உரிமையாளர் மட்டும் தலையிட்டிராவிட்டால் எங்கள் இருவரையுமே நொறுக்கியிருப்பார்கள்.   

அவனைக் கைத்தாங்கலாய்ப் பக்கத்துத் தோப்புக்குக் கூட்டிச் சென்று படுக்க வைத்தேன். நானும் படுத்தேன்,   தூங்கிவிட்டேன்.  
 
 நான் விழித்தபோது இரவு கவிந்திருந்தது. அவனை உலுக்கி எழச்செய்தேன். கிளம்பினோம். கும்மிருட்டுவழியைக் கண்டுபிடித்துவிட்டதாய் சொன்னான். இடம் வலம் என மாறிமாறித் திரும்பி அழைத்துப் போனான். வானமும் தெரியவில்லைதரையும் தெரியவில்லை. எங்கள் மூக்கு உயரத்துக்கு நீண்டிருந்த, ஈட்டி போன்ற கழிகள் நிறைந்த ஒரு சிறு காட்டில் அலைந்தோம்; அவை திராட்சை செடிகளுக்கு நட்டிருந்த கொம்புகளாய் இருக்கலாம். நடந்தோம்நடந்தோம், அங்கேஇங்கே திரும்பியும் தடுமாறியும் கைகளை நீட்டிக்கொண்டும்  குருட்டுப்போக்கில் நடந்தோம்வெளியேறும் வழி தெரியவில்லை. அவன் உதவி கோரித் தொண்டை கிழியுமாறு கத்தினான்;  நானும் பலங்கொண்ட மட்டும் குரலெழுப்பினேன்.   

    நல்ல காலமாய் கிராமவாசியொருவர் எங்கள் குரல் கேட்டு வந்து வழி காட்டினார்.   

வீடுவரை புவாலேனை அழைத்துச் சென்ற நான்வாயிலில் விட்டுவிட்டு  நழுவப் பார்த்தேன். திடீரெனக் கதவு திறந்ததுகையில் மெழுகுவர்த்தியுடன் தோன்றியவளைக் கண்டதும் எனக்குக் குலை நடுங்கிற்று.    

 "அயோக்கியா! எனக்குத் தெரியுமேநீ அவரைப் போதையிலேதான் அழைத்து வருவாய் என்று" எனக் கத்தினாள். எடுத்தேன் ஓட்டம்.   

    இப்போது தெரிகிறதா,  நான் ஏன் மணம் செய்துகொள்ளவில்லை என்பதும் புறநகர்க்கு ஏன் போவதில்லை என்பதும்".   

                 -----------------------------------------------------


14 comments:

  1. மிகவும் அருமையான கதை.

    எடுத்துச்சொல்லியுள்ள விதம் என்னை மிகவும் கவர்ந்தது.

    //இப்போது தெரிகிறதா, நான் ஏன் மணம் செய்துகொள்ளவில்லை என்பதும் புறநகர்க்கு ஏன் போவதில்லை என்பதும்".//

    மிகவும் நன்றாகவே தெரிகிறது :)

    எழுதியுள்ள கதாசிரியருக்குப் பாராட்டுகள்.

    பகிர்ந்துகொண்ட தங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. இந்த ப்ரெஞ்சுக் கதையை தமிழில் தாங்களே மொழியாக்கம் செய்துள்ளீர்கள் என்பதும் அதுவே ’மஞ்சரி’யில் 20 ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்துள்ளது என்பதையும், கீத மஞ்சரி வலைப்பதிவர் அவர்களின் பின்னூட்டம் மூலம், இப்போது நான் மிகவும் தாமதமாகத்தான் புரிந்துகொண்டேன்.

      மனம் நிறைந்த பாராட்டுகள் + இனிய நல்வாழ்த்துகள், ஐயா.

      Delete
    2. உங்கள் நன்றிக்கும் பாராட்டுக்கும் மிகுந்த நன்றி .

      Delete
  2. இப்படியொரு கண்டிப்பான மனைவி இருக்கையில் எந்த தைரியத்தில் புவாலேன் மோன்ழிலேவை விருந்துக்கு அழைத்தார்? வியப்புதான். திருமணமே வேண்டாம் என்ற முடிவெடுத்து அதைக் காப்பாற்றவும் செய்திருக்கிறார் என்றால் எந்த அளவுக்கு அச்சம்பவத்தால் அவர் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது புரிகிறது. சிறப்பான மொழியாக்கம்.. இருபது வருடங்களுக்கு முன்பே மஞ்சரியில் வெளியானது என்று அறிய மிகவும் மகிழ்ச்சி. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி . கணவனுக்கு இரு நோக்கம் இருந்திருக்கலாம் : தோட்ட வேலை வாங்கலாம் ; சிறந்த உணவும் சாராயமும் கிடைக்கும்.

      Delete
  3. எனக்கு ஃப்ரென்ச் மொழி தெரியாது. மொழியாக்கம் பற்றிக் கருத்துக் கூறவும் இயலாது. ஆனால் மொழியாக்கம் செய்யும் போது ஒரு நேடிவிடி குறைவதுபோலோ இல்லாதது போலோ இருக்கிறது கணவனை நன்கு புரிந்து கொண்ட கண்டிப்பான மனைவி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .நேட்டிவிட்டி குறைவு என்பதை விளக்கினால் அறிந்துகொள்வேன் .

      Delete
  4. இதேகருத்தை நீங்கள் உங்கள் நடையிலேயே எழுதிப்பாருங்கள் அபோதுபுரியலாம்

    ReplyDelete
  5. கொஞ்சம் சிரமப்பட்டு விளக்குங்களேன் , அருள் கூர்ந்து .

    ReplyDelete
  6. எஸ். பா .அவர்களே , உங்கள் விளக்கத்துக்காகக் காத்திருக்கிறேன் .

    ReplyDelete
  7. ஒரு வாரமாகியும் நீங்கள் விளக்கவில்லை.தெரியவில்லை எனில் அதை ஒப்புக்கொள்வது நேர்மை .

    ReplyDelete
  8. "பூச்செடிகள் சாவுப்படுக்கையில் சங்கடப்பட்டுக்கொண்டிருந்தன, விசிலடித்தும் புஸ் எனப் பெருமூச்சு விட்டும் காசநோயாளிபோல் கரகரப்பான ஓசையெழுப்பிக்கொண்டு," என்ற வரிகளில் இழையொடும் நகைச்சுவையை ரசித்தேன். விருந்துக்கு அழைத்துவிட்டு நண்பரை தோட்டவேலை வாங்குவதில் கணவனின் சாமர்த்தியம் தெரிகின்றது. கல்யாணமே வேண்டாம் என்று முடிவெடுக்கும் அளவுக்கு மனைவியின் நடவடிக்கை அமைந்திருக்கின்றது. பாவம் மோன்ழிலே! சரளமான நடையில் பிரெஞ்சுக்கதையைச் சுவைக்கத் தந்தமைக்கு நன்றி. மஞ்சரியில் வெளிவந்தமைக்குப் பாராட்டு!

    ReplyDelete
    Replies
    1. விரிவாய் விமர்சித்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  9. பல நாட்களுக்குப் பின் இப்போதுதான் வந்தேன் சில உணர்வுகளை விளக்குவது சிரமம் சுருங்கச் சொன்னால் இதே கதையை தமிழில் சிந்தித்து எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று தோன்றியது பிறமொழிச் சிந்தனை நேடிவிடியைக் குறைக்கும் பெரியவர் மோன்ழிலே ஃப்ரென்சில் சித்தித்து எழுதியதை நீங்கள் உள்வாஙிட் தமிழில் உங்கள் பாணியில் எழுதினால் வித்ட்க்ஹியாசம் தெரியும் போல் இருந்தது இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை.

    ReplyDelete