Wednesday, 15 February 2017

திருக்குறள் அறிமுகவுரை

  
நூல்களிலிருந்து -- 11





பேராசிரியர் தொ. பரமசிவன்



  பேராசிரியர் தொ. பரமசிவனின் கட்டுரைகள், 'உரைகல்என்னுந் தலைப்புடன் நூலாக 2014-இல் வந்துள்ளன. அவற்றுள் ஒரு பகுதியைப் பகிர்கிறேன்தலைப்பு:

                     திருக்குறள் அறிமுகவுரை

  "திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஒன்பது அறிஞருள் ஒருவராகிய Kindersly  1810-இல்சில பகுதிகளை முதன்முதலில் அச்சு வாகனம் ஏற்றினார். அதே கால அளவில், எல்லீசன் எனத் தம் பெயரைத் தமிழாக்கியவரும் அன்றைய சென்னை மாநிலத் தலைமை நிதி அதிகாரியுமான F.N.Ellis  வள்ளுவதாசராய் வாழ்ந்திருக்கிறார். 1818-இல்சென்னையில் உருவான குடிநீர்த் தட்டுப்பாட்டினைப் போக்க, எல்லீஸ் வெட்டிய கிணறுகளுள் ஒன்று, சென்னை ராயப்பேட்டை பெரியபாளையத்தம்மன் கோயிலில் இன்றும் உள்ளதுஇக்கிணற்றின் கைப்பிடி சுவரில் வெட்டி வைத்த கல்வெட்டு இன்றளவும் நம்  பார்வைக்கு உள்ளது. அதில்,



 சமயங் கொண்ட தொண்டிய சாணுறு நாடெனும்
 ஆழியி லிழைத்த அழகுறு மாமணி
 குணகடல் முதலாகக் குடகடல் அளவு
 நெடுநிலத் தாழ நிமிர்ந்திடு சென்னப்
 பட்டணத்து எல்லீசன் என்பவன் யானே
 பண்டார காரியப் பாரஞ் சுமக்கையில்
 புலவர்கள் பெருமான் மயிலையம் பதியான்
 தெய்வப் புலமைத் திருவள் ளுவனார்
 திருக்குறள் தன்னில் திருவுளம் பற்றிய
 இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
 வல்லரணும் நாட்டிற் குறுப்பு
 என்பதின் பொருளை  என்னுள்  ஆய்ந்து

  என்ற அடிகளில் ஓர் அழகிய குறளை மேற்கோளாகக் கையாண்டிருக்கிறார்.

   மற்றொரு கல்வெட்டு திண்டுக்கல் நகரிலுள்ள எல்லீஸ் கல்லறையின்மீது பொறிக்கப்பட்டுள்ளது. இதில்,

  எல்லீசன் என்னும் திருப்பெய ருடையான்
  திருவள் ளுவப்பெயர்த் தெய்வஞ் செப்பி
  அருள்குறள் நூலுள் அறப்பா லினுக்குத்
  தங்குபலநூ லுதாரணக் கடலைப் பெய்து
  இங்கி லீசுதனில் இணங்கமொழி பெயர்த்தோன் 

என்று தெரிவிக்கிறது.

  இக்கல்வெட்டுகளிலிருந்து எல்லீஸ் துரையின் ஆழ்ந்த தமிழ்ப் புலமையும் அவருக்குத் திருவள்ளுவர்மீதும் திருக்குறள்மீதும் இருந்த  ஈடுபாடும் தெளிவாகத் தெரிகின்றன.

  எல்லீஸ் மாநில நிதி அதிகாரியாகவும் அக்கசாலை (mint) தலைவராகவும்  இருந்தமையால் திருவள்ளுவர் உருவம் பொறித்த (புழக்கத்தில் வராத) தங்க நாணயங்களை வெளியிட்டார் எனத் தெரிகிறது. இவற்றை அண்மைக் காலத்தில் நாணயவியல் அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன், அளக்குடி ஆறுமுக சீதாராமன் ஆகிய இருவரும் கண்டுபிடித்துள்ளனர்.

    ________________________________________



6 comments:

  1. ஆழ்ந்த தமிழ்ப் புலமையும், திருவள்ளுவர் மீதும் திருக்குறள் மீதும் ஈடுபாடும் கொண்ட, எல்லீஸ் துரை அவர்கள் பற்றிய செய்திகளை ஆவலுடனும், ஆச்சர்யத்துடனும் அறிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து வாசித்துக் கருத்து தெரிவிக்கும் உங்களுக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. மிகவும் சிறப்பு...

    தகவலுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிப் பின்னூட்டம் எழுதிய உங்களுக்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. வெள்ளையரான எல்லீஸ் துரையின் தமிழ்ப்புலமை வியக்க வைக்கிறது.திருக்குறள் அவரை ஈர்த்திருக்கிறது என்றறிந்து மகிழ்ச்சி. தமிழர்களாகிய நம்மில் எத்தனை பேர் திருக்குறளை முழுதாய்ப் படித்திருக்கிறோம் என்று நினைக்கும்போது வெட்கமாயும், வேதனையாயும் இருக்கிறது. அரிய செய்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கருத்துரைக்கு மிக்க நன்றி .திருக்குறளை மட்டுமல்ல , மற்ற தமிழ்க் கருவூலங்களையும் பெரும்பாலோர் படிப்பதில்லை ; இலக்கியக் கூட்டங்களுக்குப் போய்க் கேட்பதுமில்லை .பொதுவாகத் தமிழ்ப் பற்று மிகக் குறைவு .தொலைக்காட்சிகளைப் பார்த்தால் நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் கோலோச்சுகிறது ; இடையில் சிற்சில தமிழ்ச் சொற்கள் .இதை எதிர்த்து எந்தக் கட்சியாவது குரலெழுப்புகிறதா ?

      Delete