அந்தச் சிற்றூரிலிருந்த ஒரு குன்றின் அடிவாரத்தில்,
அடுத்தடுத்து அமைந்திருந்தன இரு குடிசைகள். அவற்றில் வசித்தவர்கள்,
வளங்குறைந்த மண்ணுடன் போராடித்தான் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டியிருந்தது; குழந்தைகளுக்குப் பஞ்சமில்லை: குடிசைக்கு நான்கு!
பகல் முழுதும் தெருவில் விளையாடிப் பொழுது போக்கினார்கள். துய்வாஷ்
குடும்பத்தில் மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும்; வல்லேன் குடும்பத்தில்,
மூன்று பெண், ஓர் ஆண். கஷ்ட ஜீவனம்; சூப், உருளைக்கிழங்கு, தூய காற்று ஆகியவையே
முக்கிய உணவு.
ஒரு பிற்பகல்; குதிரை வண்டியொன்று குடிசைகளின் எதிரே திடீரென நின்றது. ஓட்டி வந்த பெண், தன் பக்கத்தில் இருந்தவரை நோக்கி,
" அதோ பார்,
ஆன்ரி, அந்தக் குழந்தைக் கூட்டத்தை. அவர்கள் புழுதியில்
கும்மாளம் போடுவதும் அழகாகத்தான்
இருக்கிறது" என்றாள். அவர் பதிலொன்றும் சொல்லவில்லை. திருமதி துய்ப்ளிஏரின் இந்த
வியப்புப் பேச்சு அவருக்குப் பழக்கமானதுதான்; அது அவருக்குத் துயரந் தரும்; தம்மீது அவள் குற்றஞ்
சுமத்துவதுபோல் அவருக்குத் தோன்றும்.
அவள் தொடர்ந்தாள்: "அவர்களை நான் கொஞ்ச
வேண்டும்; அதோ அந்தக் குழந்தையைப்போல எனக்கு ஒன்று
இருந்தால்!"
b
வண்டியை விட்டு இறங்கிய அவள், குழந்தைகளிடம்
ஓடி, துய்வாஷ் குடும்பத்து சிறுவனைத் தூக்கி அவனது அழுக்குக்
கன்னம், கைகளில் முத்த மழை பொழிந்தாள். பெற்றோரை அறிமுகப்படுத்திக்கொண்டு,
அடிக்கடி வந்து, அந்தப் பிள்ளைக்குக் கேக்கும் மற்றவர்களுக்கு மிட்டாயும் வழங்கினாள்; தானும் குழந்தையாய் மாறி அவர்களுடன் விளையாடினாள். கணவர் பொறுமையாக வண்டியில் காத்திருப்பார்.
ஒருநாள் அவரும் வந்தார்; இருவரும்
குடிசையுள் புகுந்தனர். அடுப்புக்குக் குச்சி
ஒடித்துக்கொண்டிருந்த பெற்றோருக்கு ஒரே வியப்பு!
திருமதி துய்ப்ளிஏர் சொன்னாள்: "நான் உங்களைப்
பார்க்க வந்தது எதற்காக என்றால், என்னோடு உங்கள்
கடைசிப் பையனை அழைத்துப்போக ஆசைப்படுகிறேன்".
பிரமித்துப்போன பெற்றோரால் பதில் சொல்ல
இயலவில்லை. அவள் மறுபடியும்,
"எங்களுக்குக் குழந்தை
இல்லை; அவனை நாங்கள் வளர்ப்போம்.
சம்மதமா?" என்று கேட்டாள்.
ஏழைத் தாய்க்கு இப்போது புரிந்தது. அவள் சொன்னாள்: "ஷர்லோவை நாங்கள் பிரிவதா?
நடக்காது, நடக்கவே நடக்காது".
திரு துய்ப்ளிஏர் குறுக்கிட்டார்: "என்
மனைவி சரியாய் சொல்லவில்லை. நாங்கள் அவனைத்
தத்து எடுத்துக்கொள்கிறோம். அடிக்கடி இங்கே அழைத்து வருவோம்;
நீங்கள் பார்க்கலாம்.
அவன் எங்களுக்கு வாரிசு ஆவான்; எங்கள் சொத்து அவனுக்குத்தான்; அது மட்டுமல்ல,
உங்களுக்கு மாதம்மாதம்
நூறு பிரான் தருவோம்".
தாய் எழுந்தாள், கோபாவேசத்தோடு: "எங்கள் பிள்ளையை விற்க சொல்லுகிறீர்களா? முடியாது; பெற்றவர்கள்
கிட்டே பேசுகிற பேச்சா இது? மாட்டவே மாட்டேன்"
என உறுதியாய்க் கூறினாள். தந்தை ஒன்றுஞ் சொல்லாவிட்டாலும்
தலையை ஆட்டியாட்டி, மனைவியின் பேச்சை ஆமோதித்துக்கொண்டிருந்தார். வந்த பெண் பதறிப்போய்
அழத் தொடங்கினாள். கணவர் பக்கம் திரும்பி, "அவர்கள் விரும்பவில்லை, ஆன்ரி,
விரும்பவில்லை"
என்று குழந்தைபோல் செருமியபடி சோகத்துடன் சொன்னாள்.
அவர் கடைசி
முயற்சி செய்தார்: "உங்கள் மகனுடைய எதிர்காலத்தை நினைத்துப் பாருங்கள்;
அவனுடைய இன்ப வாழ்க்கை,
அவனுடைய ..."
கோபத்தின் உச்சிக்குப்போன தாய், " எல்லாம் கேட்டாச்சு, எல்லாம் யோசிச்சாச்சு;
போங்கள். ஒரு பிள்ளையை இந்த மாதிரி தூக்கிப் போகப் பார்க்கிறதா? "
வெளியேறியபோது நினைவு வந்தது; பக்கத்துக்
குடிசையுள் நுழைந்தனர். அங்கும் எதிர்ப்புத்தான்;
ஆனால் மாதந்தோறும் பணம்
கிடைக்கும் என்பது தெரிந்தவுடன், தாய் கேட்டாள், கணவனிடம்:
" நீ என்ன சொல்கிறாய் இதைப் பற்றி?" அவன் சொன்னான்: "தள்ளிவிட முடியாது என்கிறேன்". பின்பு, அவர்களைப் பார்த்து, "மாதம் நூறு பிரான்; தாள் எழுதிப்
பதிவு பண்ணித் தருவீர்களா?" என்று கேட்டான்.
"நிச்சயமாக" என உறுதி தந்தாள் திருமதி.
இப்போது, தாய் பேசினாள்: "நூறு பத்தாது; கொஞ்ச நாள் போனால்
பிள்ளை எங்களுக்கு சம்பாதித்துத் தருவானே! நூற்று இருபது வேண்டும்".
திருமதி உடனடியாய் இசைந்தாள். நூறு பிரான் அன்பளிப்பாய்த்
தந்துவிட்டு, மகிழ்வு பொங்கிய
மனத்துடன், விரும்பிய பொம்மையைக்
கடையிலிருந்து வாங்கி செல்வதுபோல, குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவனது அழுகையைத் தணிக்க முயன்றபடி வெளியே சென்றாள்.
அவர்கள் போவதைப் பக்கத்து வீட்டார் தெருவில் நின்று மெளனமாய்ப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
வல்லேன் குடும்பம் வசதியாய் வாழ்ந்தது. இது ஒன்றே
போதுமானதாய் இருந்தது, பக்கத்து வீட்டாரின் பகைமையைத் தூண்டிக்கொண்டே இருக்க! திருமதி துய்வாஷ், நேரம் வாய்க்கும்போதெல்லாம், குழந்தையை விற்பது
கொடுமை, அசிங்கம்,
பாசமில்லாதவர்கள் வேலை என்று
அண்டை அயலாரிடம் தூற்றிக்கொண்டிருந்தாள்.
சில சமயம், ஷர்லோவைத் தூக்கித்
தலைக்குமேல் உயர்த்தி, " நான் உன்னை விக்கலே! பிள்ளை விற்கிறவளா நான்?
ஏழைதான், ஆனால் குழந்தையை விற்கமாட்டேன்"
என உரத்த குரலில் கூறுவாள். அந்தப் பகுதியில், தானே உயர்ந்தவள், என்னும் எண்ணம் அவள் மனத்தில் நங்கூரமிட்டது: அவள் ஷர்லோவை
விற்கவில்லையே! அவளைப் பற்றி மற்றவர்கள், " பணம் வருகிறது என்றால், யோசிக்க வேண்டிய விஷயந்தான்; ஆனால் அவள் நல்ல அம்மாவாய் நடந்துகொண்டாள்" என்று
புகழ்ந்தார்கள்.
18 வயதை
அடைந்துவிட்ட ஷர்லோவும் அதையெல்லாம் கேட்டுக் கேட்டு வளர்ந்தமையால், விற்கப்படாத காரணத்தாலேயே, தான் மேலானவன் என்ற எண்ணத்தில் ஊறியிருந்தான். அவனுடைய ஓர் அண்ணன் சேனையில்
சேர்ந்தான், அடுத்தவன்
இறந்துபோனான்; வயதான தந்தையுடன்
சேர்ந்து பாடுபட இவன் மட்டும் பாக்கி; பெற்றோரைப் பராமரிக்கும் பெரும் பொறுப்பு இவனுக்குத்தான்.
ஒரு நாள் காலை, அழகானதொரு வண்டி பக்கத்து இல்லத்தின் எதிரில்
நின்றதைப் பார்த்தான். தங்க சங்கிலியுடன் கூடிய
கடிகாரம் அணிந்த இளைஞன் ஒருவன் இறங்கினான்; கூடவே ஒரு மூதாட்டி. இருவரும் உள்ளே புகுந்தனர்.
இளைஞன், "வணக்கம் அப்பா, வணக்கம் அம்மா!" என்றான். இருவரும் அவனைக்
கட்டித் தழுவி, " நலமா, நலமா? " எனத் திரும்பத் திரும்பக் கேட்டனர். சற்று நேர அளவளாவலுக்குப்
பின்பு, ழானை எல்லாரிடமும்
காட்ட வெளியே கிளம்பி சென்றார்கள்.
வாயிலில் நின்ற ஷர்லோ கண் கொட்டாமல் ழானையே
நோக்கினான்.
மாலையில், காப்பி வேளையில், பெற்றோரிடம் கூறினான்:
"பக்கத்து வீட்டுப் பையனைத் தத்து கொடுக்க விட்டுவிட்ட
நீங்கள் புத்தி கெட்டவர்கள்". தாயார்
கண்டிப்புடன் பதிலளித்தார்: "உன்னை விற்க நாங்கள்
விரும்பவில்லை".
"இந்த மாதிரி கஷ்டத்தை நீங்கள் தேர்ந்தெடுத்தது
சரியல்ல".
துய்வாஷ் கோபப்பட்டார்: "உன்னைப் பிரிய நாங்கள்
இஷ்டப்படாதது தப்பு என்று சொல்லுவாய் போலிருக்கிறதே?"
"ஆமாம்;
தப்பு என்றுதான் சொல்லுகிறேன்.
உங்களையொத்த அப்பா அம்மா, பிள்ளைகளுடைய சுக
வாழ்க்கைக்கு எதிரிகள்; உங்களை விட்டு
நான் விலகினால், அதற்கு நீங்கள் உங்களைத்தான்
நொந்துகொள்ளவேண்டும்".
தாய் அழுதாள், செருமினாள்: "பிள்ளைகளைப் பெற்று
வளர்க்கப் பட்ட பாடெல்லாம் இதற்குத்தானா?" என்று அவள் கேட்டதற்கு, அவன் கடுமையாய்க்
கூறினான்: "நான் இப்படி இருக்கிறதைவிடப் பிறக்காமலே இருந்திருக்கலாம்; அவனைப் பார்த்தபோது
என் ரத்தம் கொதித்தது; நான்
அப்படி இருந்திருப்பேனே என்று நினைத்துப் பொருமினேன்."
வேகமாய் எழுந்தான்: "நான் இங்கே
இருக்கிறது சரியல்ல; பொழுது விடிந்து
பொழுது போனால் உங்களை, நீங்கள் எனக்கு செய்த கெடுதிக்காக, குத்திக் காட்டிக்கொண்டே இருப்பேன்; அது உங்களுக்குக் கஷ்டமாயிருக்கும். உங்கள்
தப்பை என்னால் மன்னிக்கவும் முடியாது".
அவன் பேச்சைக் கேட்டு முதிய பெற்றோர் இருவரும்
இடிந்துபோய், எதுவும் சொல்லத் தெரியாமல் அழுதனர்.
அவன் தொடர்ந்தான்: "நான் வேறு எங்காவது
போய்ப் பிழைக்கிறதுதான் மேல்".
கதவைத் திறந்தான். பக்கத்து இல்லத்திலிருந்து
குதூகலமான குரல்கள் கேட்டன.
தரையை ஒரு உதை விட்டு, பெற்றோர் பக்கம் திரும்பிக் கத்தினான்: "முட்டாள்களே!"
இருட்டில் மறைந்தான்.
---------------------------------------------------
பணமா பாசமா போராட்டக்கதை யோசிக்க வைக்கிறது. பெற்றவர் ஒன்றை நினைத்துப் பெருமைப்பட்டுக் கொண்டிருக்க அந்தப் பிள்ளை நேர் விரோதமாக நினைக்கிறது ..... மிகவும் கொடுமைதான். என்ன சொல்வது?
ReplyDelete2014 பிப்ரவரி மஞ்சரியில் பிரசுரமானதற்கு வாழ்த்துகள்.
வாழ்த்திப் பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி .நீங்கள் தெரிவித்ததுபோல் கொடுமைதான் .
Deleteபிள்ளையைத் தத்துக்கொடுக்காமல் விட்டது கூட பாசத்தின் காரணமாக என்று சொல்லலாம். ஆனால் அடுத்தவர் தன் பிள்ளையைத் தத்து கொடுப்பதைப் பற்றி கேவலமாகப் பேசி அவமானப்படுத்தியிருக்க வேண்டாம்..
ReplyDeleteதாயும் பிள்ளையும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு, பெத்த மனம் பித்து பிள்ளை மனம் கல்லு போன்ற பழமொழிகள் நினைவுக்கு வருகின்றன.
எந்தப் பிள்ளையை விட்டுப்பிரிய மனமில்லாமல் அன்று செல்வத்தை விரட்டியடித்தார்களோ.. அந்தப் பிள்ளையே இப்போது விட்டுப்போய்விட்டது.. பிள்ளையும் இல்லை.. செல்வமும் இல்லை.. இரண்டு பக்கத்திலும் இடி..
உலகத்தில் இப்படியும் நடக்கக்கூடும் என்ற யதார்த்தம் உணர்த்தி மனந்தொட்ட கதை.. தேர்ந்த மொழிபெயர்ப்பு. மஞ்சரியில் வெளியானமைக்குப் பாராட்டு.
விரிவான விமர்சனத்துக்கு மிக்க நன்றி .முதுமைக் காலத்தில் உதவுவான் என்ற நம்பிக்கையோடு பெற்றோர் வளர்க்கின்றனர் .அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கித் தன்னலம் தேடும் பிள்ளையும் உண்டு .
Deleteஅருமை ஐயா...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .
Delete