Wednesday 15 March 2017

சிறுமி ரோக்கு - 2





  ஊரிலே யாவரையும் அந்தக் கொலை அசாதாரணமான முறையில் பாதித்துவிட்டது. எந்தத் தடயத்தையும் கண்டுபிடிக்க முடியாமையால் மட்டுமல்ல, வீட்டின் கதவுக்கு எதிரே காலணிகள் வந்து சேர்ந்த மாயத்தாலும் மக்களின் உள்ளங்களில் கவலை, இனம் தெரியா அச்சம், மர்மத் திகிலுணர்வு ஆகியவை ஆழமாய் இடம் பிடித்துவிட்டன. கொலையாளி பிணத்தின் அருகில், கூட்டத்தோடு சேர்ந்து நின்றிருக்கிறான், அவன் நிச்சயமாகத் தங்களிடையேதான் வசிக்கிறான் என்னும் நினைப்புகள் அவர்களின் மூளையில் அழுத்தமாய்ப் பதிந்து அவர்களைப் பீதிக்குள்ளாக்கின, கிராமத்துக்கு ஒரு நிரந்தர அச்சுறுத்தலாகிவிட்டன.

  அந்தத் தோப்பு, ஆவி உலவும் பயங்கர இடம், என நம்பிய மக்கள் அங்கே போக அஞ்சினார்கள். முன்னெல்லாம் ஞாயிறுதோறும் பிற்பகலில் உலாவுவார்கள்; உயர்ந்து பருத்த மரங்களின் அடியில் புல்மீது அமர்ந்தோ ஆற்றோரமாய் நடந்தோ பொழுது போக்குவார்கள்; சிறுவர்கள் பந்து, கோலி முதலிய விளையாட்டுகளில் ஈடுபடுவார்கள்; சிறுமிகள் சிறுசிறு குழுவாய்க் கூடி, கைகோத்தபடி உலாவுவதும் உரத்த குரலில் பாடுவதுமாகக் காலத்தை உல்லாசமாகக் கழிப்பார்கள். இப்போதோ? ஏதாவது பிணம் கிடப்பதைக் காண நேரலாம் என்ற பயத்தில் யாருமே தோப்பைத் திரும்பிக்கூடப் பார்ப்பதில்லை.

  ரெனார்தே, விசாரணைக் காலம் முழுதும் காவல் துறைக்கு வழி காட்டவேண்டியிருந்தது. என்றைக்கு விசாரணை கைவிடப்பட்டதோ அன்றுமுதல் சிறிதுசிறிதாய் மனத்தளர்ச்சிக்கு ஆளானார். அவரையும் மீறி, நினைப்பு கொலை நிகழ்ந்த நாளுக்குத் தாவிற்று; எல்லாத் துல்லிய விவரங்களும் நினைவுக்கு வந்தன.

   அன்று மாலை, குளிப்பதற்காக ஆற்றை நெருங்கியபோது மெல்லிய ஒலியொன்று கேட்டது; இலைகளை அகற்றிப் பார்த்தார்: வெள்ளை வெளேர் என்று ஒரு நிர்வாணச் சிறுமி கைகளால் நீரை எற்றிக் குளித்துக்கொண்டிருந்தாள்; சற்று நேரத்தில் கரையேறி உடைகளை எடுப்பதற்காக, அவர்  இருப்பதை அறியாமல், அருகில் வந்தாள்; தவிர்க்க இயலாத சக்தியொன்று அவளை நோக்கித் தம்மைத் தள்ளுவதாய் அவர் உணர்ந்து அவள்மேல் பாய்ந்தார்; அவள் விழுந்தாள். உதவிக்குக் குரல் எழுப்ப முடியா அளவு பெரும் பீதி.

 அவள் அழத் தொடங்கியபோது, 'அழாதே, பணந் தாரேன்' என்று சமாதானப்படுத்த முயன்றார்; அவள் கதறிக்கொண்டு ஓடுவதற்கு முற்பட்டபொழுது, 'ஆகா! மோசம்!' என நினைத்து அலறலை நிறுத்தத் தொண்டையைப் பற்றினார். கொலையிலிருந்து தப்ப முயலும் எவரும் பிரயோகிக்கும் அதிகபட்ச பலத்துடன் அவள் போராடவே, கைகளை இறுக்கினார், கொல்வதற்காக அல்ல, சத்தம் வெளிவராமல் தடுக்க. பிஞ்சுக் கழுத்து பலசாலியின் பிடியை சமாளிக்குமா? சில கணங்களில் உயிர் பிரிந்தது. பயத்தில் உறைந்த ரெனார்தே, கலவரமடைந்து,  செய்வதறியாமல், துணிகளை எடுத்துப் பொட்டலமாய் மடித்து ஆற்றின் ஆழப் பொந்தொன்றில் திணித்தார்.

  நாளடைவில், மனநோய்க்கு ஆளாகி, உருவெளித்தோற்றங்களால், இரவில் தூங்க இயலாமலும் பகலெல்லாம் இரவை நினைத்து அஞ்சியும் துன்புற்றார்; மேன்மேலும் சித்திரவதைப் படுவதைவிட சாவதே நல்லது என்று முடிவு செய்தார். எப்படி இறப்பது? இயல்பான, எளிய மற்றும் தற்கொலை என்று கண்டுபிடிக்க முடியாத வழியொன்று தேவை. அவரது புகழ், முன்னோர் சம்பாதித்துள்ள நற்பெயர் ஆகியவற்றுக்குக் களங்கம் வந்துவிடக் கூடாதே! சாவில் மக்களுக்கு ஐயம் ஏற்பட்டால், துப்புத் துலங்காத கொலைக்கும் சிக்கிக் கொள்ளாத சண்டாளனுக்கும் முடிச்சு போட்டு, அவர்தான் கொலையாளி என்று கண்டுபிடிக்கக் கால தாமதம் நேராது.

  தம் ரகசியத்தை இறுதிவரை காப்பாற்றவல்ல, நம்பிக்கைக்கு உரிய ஒரு நண்பரிடம் தம் மன நிலையை விளக்கித் தம் பாதக செயலை ஒப்புக்கொண்டு,  நிம்மதியடைந்து, அதன்பின் தற்கொலை செய்துகொண்டால்?  யாரிடம் தெரிவிப்பது? சரேலென நினைவு வந்தது: ஆம், தாம் நெருக்கமாய் அறிந்துள்ள காவல்துறை அதிகாரி! அவருக்குக் கடிதம் எழுதலாம். ஒளிவு மறைவு இன்றி யாவற்றையும் விவரமாக எழுதவேண்டும்: கொலை நடந்த சூழ்நிலை, தாம் அனுபவிக்கும் வேதனை, சாக முடிவு செய்தமை, இப்படி ஒன்றுவிடாமல் எழுதிவிடுவது. குற்றவாளி தண்டனையைத் தாமே கொடுத்துக்கொண்டார் என்று அறிந்ததும் கடிதத்தைக் கிழித்துவிடும்படி வேண்டிக்கொள்ளலாம்; அவர் நீண்ட நெடுங்கால நண்பர், சூசகமாகக்கூட செய்தியை வெளியிடமாட்டார்.

  எழுதத் திட்டமிட்ட உடனேயே இதயத்தில் ஒரு விசித்திர மகிழ்ச்சி நிறைந்தது; நிம்மதி திரும்பிற்று. அவசரப்படாமல் எழுதுவார்; மறு நாள், கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள பெட்டியுள் போடுவார்; கோபுரத்தின் மேல் நின்று அஞ்சல்காரர் வருகையை எதிர்பார்ப்பார். அவர் வந்து போனதும் தலை குப்புறக் கீழே குதித்துவிடுவார். வெளியில் வேலை செய்துகொண்டிருக்கும் தொழிலாளர்களின் பார்வையில் முதலில் படவேண்டும்; அதற்காக விழா நாளில் கொடி ஏற்றும் மரக் கம்பம் நட்டிருக்கும் பால்கனியில் நிற்கவேண்டும்; பின்பு உரிய சமயத்தில்  அதைத் திடீரென முறித்துக்கொண்டு அதனோடு சேர்ந்து குதிக்கவேண்டும்: விபத்தென்பதில் ஐயம் ஏற்படாது; கோபுர உயரமும் உடல் கனமும் உடனடி சாவை அளித்துவிடும்.

                            (அடுத்த பதிவில் முடியும்)
                          ++++++++++++++++++++++
                     
 (படம் உதவி - இணையம்)


12 comments:

  1. ஆவலுடன் அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஆவலுடன் வாசித்துக் கருத்து தெரிவித்தற்கு என் நன்றி .

      Delete
  2. பகுதி-1 இல் நான் சந்தேகப்பட்ட நபரே குற்றவாளி என்று இங்கு பகுதி-2 இல் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து என்ன நடக்க உள்ளதோ .... படிக்கும் ஆவலுடன் உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. முதற் பகுதியிலேயே குற்றவாளியை அடையாளங் கண்ட உங்கள் நுண்ணறிவிற்குப் பாராட்டு . கதை படைப்பாளி யல்லவா ? அதுதான் கண்டுபிடித்துவிட்டோமே என்று விட்டுவிடாமல் மேலும் படிக்க ஆர்வம் உடைமைக்கு என் நன்றி . நீங்கள் சொன்னதுபோல் கொலை புரியும் நோக்கமில்லை.

      Delete
  3. //தவிர்க்க இயலாத சக்தியொன்று அவளை நோக்கித் தம்மைத் தள்ளுவதாய் அவர் உணர்ந்து அவள்மேல் பாய்ந்தார்;//

    //கைகளை இறுக்கினார், கொல்வதற்காக அல்ல, சத்தம் வெளிவராமல் தடுக்க. பிஞ்சுக் கழுத்து பலசாலியின் பிடியை சமாளிக்குமா? சில கணங்களில் உயிர் பிரிந்தது.//

    எனவே இது திட்டமிட்ட கொலை அல்ல எனத் தெரிகிறது. காமமும் மோகமும் சேர்ந்த கட்டுப்படுத்த முடியாத உணர்ச்சிகளின் செயல்பாடுகள் மட்டுமே அவர் அவளைக் கொலை செய்யும் அளவுக்குக் கொண்டு போய் உள்ளது.

    இருப்பினும், இதற்கிடையில் அவரின் மனசாட்சி அவரைக் கொன்று தின்று கொண்டு தண்டித்து வருகிறது.

    அடுத்த பகுதியில்தான் எல்லா முடிச்சுகளும் அவிழும் என நினைக்கிறேன். பார்ப்போம்.

    ReplyDelete
  4. ஒரு நொடி நேர சலனம் எப்படி வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிடுகிறது. ரெனார்தே இந்த மன உளைச்சலிலிருந்து தப்பித்தாரா.. முடிவறியும் ஆவலோடு தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு நன்றி . எவ்வளவு நல்லவராய் இருப்பவரும் சூழ்நிலையும் ஒரு கண அளவு கட்டுப்பாட்டை மீறிவிடுகிற மனமும் ஏற்பட்டால் தகாத செயலை செய்வார் .

      Delete
  5. எத்தனை எத்தனை வித மனிதர்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. தொடர்வதற்கு நன்றி . உங்கள் கருத்துக்கும் நன்றி .

      Delete
  6. கதை சுவாரசியமாய்ச் செல்கிறது. ரெனார்தே தற்கொலை செய்து கொண்டாரா? முடிவு என்ன என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete