Wednesday 12 April 2017

சில பிழைச்சொற்கள்


நம் மொழியில் யார் வேண்டுமானாலும் எவ்வாறேனும் எழுதலாம் என்னும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. நாளேடுகள், வார இதழ்கள், நூல்கள் எனப் பலவற்றிலும் பிழையான சொற்கள் இடம்பெறுகின்றனதொலைக்காட்சிகளும் திரைப்படங்களும் தங்கள் பங்குக்குத் தவறான சொற்களைப் பரப்புகின்றன. சிகப்பு ரோஜாக்கள்நான் சிகப்பு மனிதன் என்று படங்கள் வந்தன. 'என் இனிய தமிழ் மக்களே' என்று அன்புடன் விளிக்கும் பாரதிராஜாஅந்த இனிய மக்களுக்கு வழங்கினார்சிகப்பு எனத்  தப்புத் தலைப்பிட்ட படத்தைஎத்தனையாயிரம் மாணவர்களின் மூளையில் அந்தப் பிழையான வார்த்தை பதிந்திருக்கும்? பாலச்சந்தரைப் போற்றலாம்: வறுமையின் நிறம் சிவப்பு என்று சரியாய்ச் சொன்னாரே!



  
பிழை தவிர்க்க எண்ணுபவர்களுக்குப் பயன்படக்கூடும் எனக் கருதிசிலவற்றை இங்கு எடுத்துக்காட்டுகிறேன்:

  1  -- ஏலகிரிமலைYelakiri Hills  என்பதன் மொழிபெயர்ப்பாக இப்படி எழுதுகின்றனர். கிரி எனினும் மலை எனினும் ஒன்றுதான் என்பதுகூடவா தெரியவில்லைகிரிமலை என்பது கேட்கதவுநடுசெண்டர்சோஅதனாலே என்பன போன்றது. ஏலமலை என்பதே சரி.

  2 --  போலீஸார் --- ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழின் ஆர் விகுதி சேர்த்துப்  புழங்குவதை என்னென்பது?   காவலர் என்பது தெரியாதா?

   3  செல்வந்தர் --- தனவந்தர் என்னும் சமற்கிருத வார்த்தையின் தாக்கங் காரணமாய் உருவான சொல் இதுவிருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில்நாடன்,   தம் 'திவாகரம்' என்னும் நூலில் பல இடங்களில் அப்படி  எழுதியிருக்கிறார்.

    செல்வர் எனல் வேண்டும்:

          எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
          செல்வர்க்கே செல்வம் தகைத்து. (குறள் 125)

  4  -- அரசினர் மேல்நிலைப்பள்ளி என்று பெரிய எழுத்துகள் தாங்கிய பெயர்ப்பலகையைக் காண்கிறோம்;   அஃறிணைச் சொல்லுடன் அர் விகுதி சேர்த்தால் கிடைப்பது மனிதரைக் குறிக்க வேண்டும்:

அலுவல் + அர் = அலுவலர்;  
அரசு + அர் = அரசர்
ஆட்சி + அர் =  ஆட்சியர்.

நடுவில் 'இன்' என்னும் இடைச்சொல் போட்டும் புது வார்த்தை உண்டாக்கலாம்: மாணிக்கவாசகரின் 'திருப்பள்ளி எழுச்சி'   4-ஆம் பாடலில் வருகிற 'யாழினர்,   கையினர்' அவ்வாறு தோன்றியவை;

யாழ் + இன் + அர் = யாழினர்: யாழ் வாசிப்பவர்;   
கை + இன் + அர் = கையினர்: கையை உடையவர்.

 இவை மக்களைச் சுட்டுவதுபோல், 'அரசினர்யாரையாவது குறிக்கிறதா? இல்லை; ஆகவே அது பிழைச்சொல்.

  அரசு என்னும் எளிய சிறிய சொல் இருக்கிறதே! அரசு ஆணை, அரசு இயல், அரசு பள்ளி, அரசு வேலை என்றெல்லாம் எழுதலாம்.

             இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த 
             வகுத்தலும் வல்லது அரசு. (குறள் 305)

    ராஜாங்கம் என்னும்  வட சொல்லை மனத்துட்கொண்டு அரசாங்கம் என்றெழுதுவது தேவையற்றது.

 5 --  நேர்மறைச் சிந்தனை என்ற  சொற்றொடர் அண்மைக் காலத்தில்  தோன்றியுள்ளது; எதிர்மறைச் சிந்தனை  என்பதற்கு எதிர்ச்சொல்லாக   இதைப் பயன்படுத்துகின்றனர்.

  நேர் என்பதும் மறை என்பதும் எதிர்ப்பதங்கள்.

  எட்டு வகை விடைகளை விவரிக்கும் நன்னூலின் 386-ஆம் பா,  இப்படித் தொடங்குகிறது: ' சுட்டு மறை நேர்'

  மறை = மறுத்தல்;  
  நேர் = ஒப்புக்கொள்ளல்.

  'போவாயா?'   என்ற வினாவுக்கு,  'மாட்டேன்'   என்பது மறை விடை;  'போவேன்' என்றால் நேர் விடைஆதலால்நேர்மறைச் சிந்தனை என்பது, 'ஒப்புக்கொள்கிற மறுக்கிற சிந்தனை' எனப் பொருள்பட்டு அபத்தம் ஆகிறது;  'ஏற்றமான தாழ்வுஎன்பதுபோல; சுடுதண்ணீர் எனச் சிலர் சொல்வதுண்டு: எவ்வளவு தவறு! சுடுகிற குளிர்ந்தநீர் என்பது உளறல் அல்லவா?   வெந்நீர் இருக்கிறதே!

நேர்சிந்தனை எனலாம்ஆக்கச் சிந்தனை என்றுஞ் சொல்லலாம்.


                                           -------------------------------------------

16 comments:

  1. மிகவும் பயனுள்ள எளிமையான பாடம். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றி .

      Delete
  2. பொதுவாக இலக்கணம் படித்து எழுதுவதில்லை பழக்கத்தில் வருவதே எழுத்து. பிழை இவை எனக் கூறிய உங்கள் பதிவின் மூலம் தெளிகிறேன்

    ReplyDelete
    Replies
    1. பழக்கத்தில் வருவதே எழுத்து என்றால் மனம்போனபடி எழுதலாம் என்றாகிவிடும் ; ஆங்கிலத்தில் ( ஏடுகளாயினும் நூல்களாயினும் ) இலக்கணப்படி எல்லாரும் எழுதுகிறார்கள் . ஏன் அப்படி? உங்கள் பின்னூட்டத்திற்கு மனமார்ந்த நன்றி .

      Delete
  3. அருமையான விளக்கங்களுக்கு நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு உள்ளமார்ந்த நன்றி .

      Delete
  4. மிகவும் பயனுள்ள பதிவு ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு அகமார்ந்த நன்றி .

      Delete
  5. நடைமுறையில் நாம் செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்தும் பயனுள்ள பதிவு. தவறு என்று தெரியாமலே இப்படித்தான் பல சொற்களைப் பயன்படுத்துகிறோம். நேர்மறைச் சிந்தனை என்பது குறித்து எனக்கும் சந்தேகம் இருந்தது. உங்களிடம் கேட்கவேண்டும் என நினைத்திருந்தேன். இன்று தெரிந்து கொண்டேன். மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நடைமுறைப் பிழைகளை எடுத்துக்காட்டித் திருத்துகிற நூல்களைப் பலர் இயற்றியிருக்கிறார்கள் . இலக்கணம் கற்க முடியாவிட்டாலும் அப்படிப்பட்ட புத்தகங்களை வாசித்துப் பிழை தவிர்க்கலாம் .விவரமாகக் கருத்து தெரிவித்தமைக்கு நெஞ்சார்ந்த நன்றி .

      Delete
  6. பயனுள்ள பாடம்.நன்றி

    ReplyDelete
    Replies
    1. பயனுள்ளது எனப் பாராட்டியமைக்கு என் அகம்நிறை நன்றி .

      Delete
  7. தாங்கள் இங்கு குறிப்பிட்டிருக்கும் பிழைச்சொற்களுள் சிலவற்றை நானும் பயன்படுத்தியிருக்கிறேன். இனி திருத்திக்கொள்வேன். சுட்டிக்காட்டும் பதிவுக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பிழை செய்தல் யார்க்கும் இயல்பு ; திருத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் பிழையின்றி எழுத முயலலும் முக்கியம் .பாராட்டுகிறேன் ; பின்னூட்டத்துக்கு நன்றி .

      Delete
  8. “நம் மொழியில் யார் வேண்டுமானாலும் எவ்வாறேனும் எழுதலாம் என்னும் போக்கு பரவலாகக் காணப்படுகிறது. நாளேடுகள், வார இதழ்கள், நூல்கள் எனப் பலவற்றிலும் பிழையான சொற்கள் இடம்பெறுகின்றன; தொலைக்காட்சிகளும் திரைப்படங்களும் தங்கள் பங்குக்குத் தவறான சொற்களைப் பரப்புகின்றன. ”

    நானும் பெரிதும் வருந்தும் விடயம் இது.

    நம் மாணாக்கருக்குத் தமிழில் நல்ல முன்மாதிரி இல்லை.

    மொழியில் செய்யும் தவறுகள் குறித்து அறியாத, அறிந்தாலும் அது பற்றிச் சற்றும் கவலைகொள்ளாத சமுதாயத்திடம் சிக்கிக் கொண்ட மொழியின் நிலை என்னவாகும் என்று சொல்ல வேண்டியதில்லை.

    ஒரு புறம் மொழி வளர்ச்சி குறித்துச் சற்றும் சிந்தையில்லைாமல் தமிழைப் போற்றும் வெற்றுத் துதிபாடிகள்.
    இன்னொருபுறம், தமிழில் என்ன இருக்கிறது என்பதோடல்லாமல் தம்தாய்மொழியிற் பேசத் தமிழரிடையே உள்ள தாழ்வுணர்ச்சி.

    தமிழை எளிதில் கற்க, பிழையின்றிப் பேச எழுத என எவ்வளவு முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்? அதை நம்மாணவர்களிடம் எவ்விதம் கொண்டு சேர்க்க வேண்டும்?

    இது பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு சமூகத்தில், தங்களைப் போன்றோரின் முயற்சிகளைக் காணும் போது வாழ்த்தி வணங்கத் தோன்றுகிறது.

    வணங்குகிறேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வருக, வருக .உங்கள் கருத்துகள் முழுதும் சரியானவை ; துதிபாடிகள் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைகள் ;மொழிப் பற்று இல்லாதோர் கணிசமான எண்ணிக்கையினர் . தமிழின் வளர்ச்சிக்கு உங்கள் வலைத்தளம் பாடுபடுகிறது என்பதை அறிவேன் ; பாராட்டுகிறேன் .பின்னூட்டத்துக்கு மனம்நிறை நன்றி .உங்கள் ஆதங்கம் அதில் வெளிப்படுகிறது .

      Delete