1 – காப்பித் தோட்டம், தேயிலைத் தோட்டம்
என்கிறோமே! சரியா? தோட்டம்போலவா அவை
இருக்கின்றன?
---- இங்கு, 'தோட்டம்' என்பது மலையாளச் சொல்; estate என்பதைத் 'தோட்டம்' என்கிறது அம்மொழி; அதை நாம் ஏற்றுப் பயன்படுத்துகிறோம்.
அப்படியானால், நம் தோட்டத்தை
அது எப்படி சொல்கிறது? "பூந்தோட்டம்".
தொட்டபெட்டா |
2 -- கர்நாடகத்தில், தொட்டபெட்டா என்றொரு மலைக்குப் பெயர். பெரிய மலை என்பது அதன் பொருள். தொட்ட = பெரிய; பெட்டா = மலை.
3 -- மாஃபா
பாண்டியராஜன் என்பவர் முன்னாள் அமைச்சர்; இந்நாள்
சட்டப் பேரவை உறுப்பினர். அவரைக் குறிப்பிடும்
அடைமொழி இரண்டு பிரஞ்சு சொற்கள்: ma foi;
அதன் சரியான உச்சரிப்பு:
மாஃபுஆ; பொருள்: 'உண்மையாக' (really)
என்பது. இப்பெயரில் அவர் ஏதாவதொரு அமைப்பை
நிறுவியிருக்கலாம்; அதனால் அந்த அடை.
4 -- இத்தாலிய சொல் corriere பிரஞ்சுக்குப்
போய், courier ('குரிஏ') என மாறிற்று.
அஞ்சல் துறை ஏற்படாததற்கு முன்பு, கடிதங்களைக்
கொண்டுபோன ஆளை, ஊர்தியை அது சுட்டியது. அதன் உறவுச் சொற்கள்: குரீர் (courir) ஓடுதல், கூர்சு (course) ஓட்டம். அதை ஆங்கிலம் ஏற்று, 'கூரியர்' ஆக்கிற்று.
தமிழிலும்
கூரியர் என்ற வார்த்தையுண்டு; அறிவுக் கூர்மை உடையவர் என்று அர்த்தம்; இதன் எதிர்ப்
பதம்: மந்தர்.
5 -- போர்த்துகீசிய
சொற்கள் Porto Novo - புதிய
துறைமுகம் என்பது அவற்றின் பொருள்.
கடலூர்த் துறைமுகம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில்
இருந்தபொழுது, போர்த்துகீசியர் தமது
வாணிக வசதிக்காக, அதற்குத்
தெற்கே, 35 கி.மீ. தொலைவில், புதுத் துறைமுகம் தோற்றுவித்து, அதற்குத்
தம் மொழியில் பெயர் சூட்டினர். தமிழர் அதைப் பரங்கிப்பேட்டை என்றனர்; சென்னையில் உள்ள Saint Thomas
Mount ஐப் பரங்கிமலை ஆக்கினர்; பரங்கி என்பது எல்லா நாட்டு வெள்ளையரையும்
சுட்டுகிற பொதுச்சொல்:
வெள்ளைப் பரங்கியை துரையென்னும் காலமும்
போச்சே!
என்று பாடினார் பாரதியார்.
பரங்கிக்காய்க்கும் இச்சொல்லுக்கும் தொடர்புண்டா
என்பதைத் தெரிந்தவர் எழுதுங்கள்.
6 -- திகம்பரம்
என்னும் பிராகிருதச் சொல், நிர்வாணம் எனப் பொருள்படும்; திக் = திசை; அம்பரம் = ஆடை; 'திக்கே உடை' என்பது, ஆடை இல்லை என்பதை
வேறுவிதமாகக் கூறுவது.
---சமணத் துறவிகளுள் ஒருசாரார் அம்மணமாய்
வாழ்ந்தனர்; ஆடையையும் துறப்பதே முழுமையான துறவு என்பது
அவர்தம் கொள்கை; அவர்கள், 'திகம்பரர்'
எனப்பட்டனர். கர்நாடகத்தில், சிரவண பெலகோலா என்னும் இடத்தில், மலைமீது நிற்கிற 57 அடி உயரமுள்ள ஆணின் கற்சிலைக்கு உடையில்லை;
அது பாகுபலி (கோமதீஸ்வரர் என்றும்
சொல்கிறார்கள்) என்ற பெயருடைய
திகம்பரர்க்கு நினைவுச் சின்னம். நம் காலத்திலும் வடநாட்டில் நிர்வாண சாமியார்கள்
இருக்கிறார்கள்.
---மறு சாரார், வெள்ளையாடை
உடுத்தினர்; இவர்கள், 'சுவேதாம்பரர்'
எனப்பட்டார்கள்; வடமொழி சுவேதா =
வெள்ளை. இராமலிங்கர் வெள்ளுடை தரித்த
இந்துத் துறவி.
7 -- வெள்ளிவிழா, பொன்விழா, வைரவிழா
கொண்டாடுகிறோம்; அவை
ஆங்கிலேயரிடமிருந்து நாம் கற்றவை. அவர்களிடம் வேறு
விழாக்களும் உண்டு. அவற்றுள் சில:
இரும்புவிழா 6 ஆம் ஆண்டு;
செம்புவிழா 7 -----;
தகரவிழா
10 ----------;
எஃகுவிழா 11 -----------;
முத்துவிழா 30 --------;
பவளவிழா 35 ----------- .
8 --- பழந்தமிழர்
ஒட்டகம் வளர்த்தனர் என்றால் நம்புவீர்களா? ஆனால் அது உண்மை.
தொல்காப்பியம் மரபியல் நூற்பா 597,
ஒட்டகம் குதிரை கழுதை மரையிவை
பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய.
என்கிறது; பெண் ஒட்டகத்தைப்
பெட்டை என்று சொல்லவேண்டுமாம். 562 ஆவது பா, "ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலவும்",
ஒட்டகத்தின் பிள்ளையைக்
கன்று எனல் மரபு என்கிறது: அதாவது, ஒட்டகக் குட்டி என்னாமல், ஒட்டகக் கன்று
என்பதே சரி.
சங்க இலக்கியத்திலும் ஒட்டகம் வருகிறது:
கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்
என்று அகநானூறு 245 ஆம் பாட்டில் காண்கிறோம்.
தமிழகக் கால்நடையுள் ஒட்டகம் இருந்ததால்தானே, அது இலக்கிய இலக்கணங்களில் இடம் பெற்றுள்ளது?
9 -- மனிதர்க்கு மட்டும் ஆறறிவு என்று சொல்லிப்
பெருமிதம் கொள்கிறோம்; சில விலங்குகளும்
ஆறாம் அறிவைப் பெற்றுள்ளன என்கிறார் தொல்காப்பியர்:
'ஒருசார் விலங்கும் உளவென மொழிப' ( பா 578) .
எந்தெந்த விலங்கு என்பதை அவர் குறிப்பிடவில்லை; உரையாசிரியர்
இளம்பூரணர் தெரிவிக்கிறார்: கிளி, குரங்கு, யானை.
10 -- 'ஒன்றுக்கு மேற்பட்டது பல' என்று தமிழ்
இலக்கணத்தில் கற்றிருக்கிறோம்; ஒன்றைக்
குறிப்பது ஒருமை, ஒன்றைவிட அதிகமானது பன்மை; 'ஒன்று பல ஆயிடினும்' என்று தமிழ் வாழ்த்துப் பாடலில் பாடுகிறோம்.
சமற்கிருதத்தில் ஒருமை, இருமை, பன்மை என மூன்று எண் உண்டு; இதைத் தொல்காப்பியர் ஏற்றிருக்கிறார் என்பது பின்வரும்
பாட்டால் தெரிகிறது:
ஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி
இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி. (பா
45).
பொருள்: ஓரெழுத்தாலாகிய சொல் (பூ, தீ), இரண்டு எழுத்தாலாகிய சொல் (புலி, குடை), இரண்டுக்கு
அதிகமாகிய எழுத்தாலாகிய சொல் (மரம், இடுக்கண்) என்று மூன்று
வகை சொற்கள் இருக்கின்றன.
ஒருமை, இருமை, பன்மை என்னும் வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி
சிலர் பாடல் புனைந்துள்ளனர்:
1 -- ஒருநாள் செல்லலம்
இருநாள் செல்லலம்
பலநாள் சென்று .................. (புறம் 101 )
2 -- ஒன்று இரண்டு அல பல கடந்து ... (பதிற்.4)
இது நம் காலத்திலும் வழக்கத்தில் உள்ளது:
--- ஒரு தடவை சொல்லலாம், இரு தடவை சொல்லலாம், ஆயிரந் தடவையா சொல்ல முடியும்?
--- ஒரு பொண்ணா
ரெண்டு பொண்ணா எத்தினியோ பொண்ணு பாத்தோம்.
என எழுதுகிறோம், பேசுகிறோம் அல்லவா? இந்த அளவுக்கு
வடமொழி நம்மீது ஆழமான, நீண்டநெடுங்காலம் நிலைத்து நிற்கிற, தாக்கத்தினை
அழுத்தமாக ஆணியடித்து ஊன்றியுள்ளது.
----------------------------------------------------
எத்தனை எத்தனை மொழிகள் + சொற்கள் ஆராய்ச்சிகள் !!!!!
ReplyDeleteஅனைத்தும் அருமையோ அருமை.
ஒவ்வொன்றையும் மீண்டும் பொறுமையாக வாசித்து மகிழ நினைத்துள்ளேன்.
பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
தொடர்ந்து வாசித்துப் பாராட்டிக் கருத்து தெரிவிப்பதற்கு அகங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன் .
Deleteஒரே பதிவில் எத்தனை புதிய தகவல்கள். கூரியருக்கான தமிழ் ஆங்கில விளக்கங்கள் அருமை. பகிர்வுக்கு மிகவும் நன்றி.
ReplyDeleteபாராட்டியமைக்கும் பின்னூட்டந் தந்தமைக்கும் மிக்க நன்றி .
Deleteபுதிய செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். பொன்விழா, பவள விழா போல் தக்ர விழா,செம்பு விழா ஆகியவையும் இருக்கின்றன என அறிந்து வியந்தேன். வெள்ளையர்க்கும், பறங்கிக்காய்க்கும் என்ன தொடர்பு என்று தான் புரியவில்லை.ஒருமை, இருமை, பன்மை என்பது வடமொழியின் தாக்கம் என்பதும் எனக்குப் புதுச்செய்தி தான். மிகவும் நன்றி!
ReplyDeleteபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . என் பதிவு பயன்பட்டமை யறிந்து மகிழ்கிறேன் .
Deleteநல்ல தகவல்கள். இளைய தலைமுறைக்கு மிகவும் உதவும்.
ReplyDeleteஇராய செல்லப்பா நியூஜெர்சி
வருக , வருக .நல்ல தகவல்கள் எனப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி .
Deleteபத்துத் தகவல்கள் என்பது தானே சரி? தட்டச்சுப் பிழையா?
ReplyDeleteஆம் , பழைய இலக்கணப்படி த் போடுவதுதான் சரி . ஆனால் இக்கால விதிப்படி ஒற்று மிகாமலும் எழுதலாம் . இது குறித்து மாறும் இலக்கணம் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுவேன் .
Delete