Tuesday, 26 December 2017

நாள்காட்டி
  காலம் என ஒன்று இல்லை; இல்லாத ஒன்றைக் கணக்கிட வேண்டும் என்ற எண்ணம் முதன்முதலாய்ப் பழங்காலத்தில் சிலர்க்குத் தோன்றியதென்றால் அவர்கள் எவ்வளவு நுண்ணறிவாளராய் இருந்திருக்க வேண்டும்! பல்வேறு சமயங்களில் நடக்கிற நிகழ்ச்சிகளை நிரல்படுத்தவும் நினைவிற் கொள்ளவும் எதிர்காலத் திட்டங்கள் தீட்டவும் அப்படியொரு தேவையிருப்பதை யுணர்ந்து காலமானியை உருவாக்கிய அந்த அறிவாளிகள், இன்றைய ஈராக் நாட்டில் 5000 ஆண்டுக்கு முன்பு வாழ்ந்த சுமேரியர்கள்; அக்கால நியூட்டன்கள்!

   பிறை தோன்றும் வேளையைத் தொடக்கமாய் வைத்து, இரவும் பகலும் சேர்ந்தது ஒரு நாள், முப்பது நாள் கொண்டது ஒரு மாதம், பன்னிரண்டு மாதம் ஓர் ஆண்டு என்று அவர்கள் நிர்ணயித்து நாள்காட்டி தயாரித்தார்கள். 60 நிமிஷம் 60 நொடி என்னும் அளவுகளும் உலகுக்கு அவர்களின் கொடைதான்.

   சுமேரிய நாகரிகம் வீழ்ந்தபோது அவர்களது தயாரிப்பும் வழக்கொழிந்தது. அதை யடிப்படையாய்க் கொண்டு பிற்காலத்தில் எகிப்தியர் உண்டாக்கிய நாள்காட்டி சூரியோதயத்தைத் தொடக்கமாய் மாற்றியது. ஆண்டுக்கு 365¼ நாள் எனத் துல்லியமாய்க் கணக்கிட்ட பெருமை அவர்களைச் சாரும். அவர்களின் காலண்டரில் காணப்பட்ட குறையோன்றைப் போக்குவதற்குப் பொ.யு.மு.3-ஆம் நூற்றாண்டில் கோலோச்சிய எகிப்திய மன்னர் Ptolemy II நான்காண்டுக்கு ஒரு முறை, “ஆண்டுக்கு 366 நாள்என்று திருத்தஞ்செய்தார்; leap year இன்று வரை நீடிக்கிறது.

   எத்திசையும் புகழ் மணக்கச் செம்மாந்திருந்த எகிப்திய நாகரிகத்துக்கும் முடிவு வந்தது.

   அதன் பின்னர் ரோமானியர் காலங் கணக்கிட்டனர்; ஆனால் அதற்கான உரிமை மதத் தலைவர்களின் கையிற் சிக்கியமையால், அவர்கள் லஞ்சம் தந்தவர்களுக்குப் பதவிக் காலத்தை நீட்டித்தல், வரி வசூல் அதிகாரிகளுக்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ தவணைகளைக் கூட்டல் அல்லது குறைத்தல் முதலிய முறைகேடுகளில் ஈடுபட்டுக் கொழுத்தார்கள். (ஊழலுங் கடவுள்தான்: ஆதி யந்தம் இல்லை). எல்லை மீறிய தகிடுதத்தங்களால் வசந்த விழாவை மழைக் காலத்திலும் கோடை அறுவடை விழாவைக் குளிர்பருவத்திலுங் கொண்டாட நேர்ந்தது. தில்லுமுல்லுகளை ஒழித்துக்கட்டக் கருதிய ஜூலியஸ் சீசர், அந்த உரிமையைப் பறித்ததோடு வானியல் வல்லுநரின் உதவியால் 365 நாள் அடங்கிய ஆண்டு கொண்ட காலண்டரை (லத்தீனில் Kalendae), பொ.யு.மு.46-இல் உருவாக்கி, லீப் ஆண்டையும் பின்பற்றச் செய்தார்.

   இதிலும் சில குறைகள் இருந்தமை காலப்போக்கில் தெரியவந்தது. அவற்றை நீக்குவதற்குப் போப்பாண்டவர் Gregory XIII (1502 – 1585), 1582-ஆம் ஆண்டில், இரு திருத்தங்கள் செய்தார்.

1.   அந்த ஆண்டில் 10 நாளைக் குறைத்தார். அக்டோபர் 4-ஆம் தேதி வியாழனுக்கு அடுத்த நாள் 15-ஆம் தேதி வெள்ளி ஆயிற்று.

2.   Kalendae–யில் இரு சுழிகளால் முடிகிற எல்லா ஆண்டுகளும் லீப் ஆண்டாய் இருந்தன. புது ஏற்பாட்டின்படி சுழிகளுக்கு முன்னால் உள்ள எண் 4-ஆல் மீதியின்றி வகுபட்டால்தான் லீப் ஆண்டு; ஆதலால் 1800,1900 முதலானவை லீப் ஆண்டல்ல.


  அவரது பெயரைத் தாங்கிய கிரிகோரியன் காலண்டர் இன்றைக்கு உலகு முழுதும் பயன்படுகிறது; ஆயினும் எங்கும் ஒரே காலத்தில் அமலுக்கு வரவில்லை. கத்தோலிக்க நாடுகள் விரைவில் ஏற்றன; புரோட்டஸ்டண்ட் நாடுகள் தயங்கின; ஒரு கத்தோலிக்கரின் கணக்கை எப்படி ஒப்புக்கொள்வது?

   வேறு வழியில்லாமையால் ஒவ்வொன்றாய்த் திருந்தின:

-    ஹாலந்து, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து 1700-இல் மாறின;

-    இங்கிலாந்தும் ஸ்வீடனும் 1752 வரை காலங் கடத்தியதால் 11 நாள் குறைக்க வேண்டியதாயிற்று; 1700-ஐ அவை லீப் ஆண்டாய்க் (366 நாள்) கடைப்பிடித்திருந்தன. இங்கிலாந்தில் 2-9-1752-க்கு அடுத்த தேதி 14-9-1752 என்று அரசு அறிவித்தபோது, அதிருப்தியாளர் கூட்டமொன்று தெருக்களில் கண்டன ஊர்வலம் நடத்திற்று, “எங்கள் 11 நாளைத் திருப்பித் தா!” என முழங்கியவாறு.

-    இருபதாம் நாற்றாண்டு வரைக்கும் தாக்குப் பிடித்த கிரேக்கம், பல்கேரியா, யுகோஸ்லேவியா, ரஷ்யா 13 நாள் குறைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாயின. 26-10-1917-இல் வெடித்த ரஷ்யப் புரட்சி ‘அக்டோபர் புரட்சி’ என வரலாற்றில் பதிவாயிற்று. அடுத்த ஆண்டு முதல் அதை நவம்பர் 7-இல் நினைவு கூர்கின்றனர். 24-10-1918-க்கு அடுத்த நாள் 7-11-1918 ஆகிவிட்டது!
  
 (ஆதாரம்: பிரெஞ்சு நூல் Le calendaier , ஆசிரியர் Paul Couderc)
 (படம் - நன்றி இணையம்)

   

8 comments:

 1. எனக்கு நம் முன்னோர்களின் பஞ்சாங்கம் ஆச்சரியமளிப்பது கோள்களின் செயல்பாட்டை துல்லியமாகக் கணக்கிடிருக்கிறார்கள் அல்லவா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் , விண்மீன்களுக்குப் பெயரிட்டடமை முதலிய செய்திகள் நம் முன்னோர்களும் வானாராய்ச்சியில் சிறந்தவர்கள் எனத் தெரிவிக்கின்றன . உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete
 2. அறியாத செய்திகள் அறிந்தேன் ஐயா
  நன்றி

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பின்ன்னூட்டத்திற்கு மிக்க நன்றி .

   Delete
 3. காலண்டர் வரலாற்றுச் செய்திகள் சுவையாக உள்ளன. அறியாதன அறிந்தேன். மிகவும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete
 4. இன்றைக்கு நாம் புழங்கும் நாள்காட்டிக்கு இவ்வளவு நெடிய வரலாறு உள்ளது என்பதை அறிய ஆச்சர்யமாக உள்ளது. அறியாத பல தகவல்கள் அறிந்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

   Delete