1. கோயிலில் இருக்கும்வரை
கடவுள்; கடத்தப்பட்டால் சிலை!
2. விலக்கப்பட்ட கனியை
உண்டதற்காக ஏவாளையும் ஆதாமையும் கடவுள் சபித்து ஏதென் தோட்டத்திலிருந்து விரட்டிவிட்டதாய்
விவிலியம் கூறுகிறது; மன்னித்தருளினார் என்கிறது குர் ஆன்.
3. அடிக்கடி நாம்
ஏடுகளில் வாசிக்கிற பச்சைப் பொய்கள்:
அ) சட்டத்தின்முன் யாவரும் சமம்.
ஆ) சட்டம் தன் கடமையைச் செய்யும்.
4. இலக்கியவுலகில்
புழங்குகிற ஒரு பழமொழி:
“புலவர் அடைப்பக் கவிஞர் திறப்பர்.”
புலவர்கள் கடின சொற்களைப் பெய்து எளிதிற் புரிந்துகொள்ள
முடியாதபடி செய்யுள் இயற்றுவார்கள்; கவிஞர்களோ சாதாரண வார்த்தைகளைக் கொண்டு விளங்கும்படி
பாடல் புனைவார்கள்.
5. உடல் தூய்மையில்
அக்கறை செலுத்துவதை ஒருவர் கைவிட்டால் அவர் schizophrenia என்ற மனநோய்க்கு ஆளாகியிருக்கலாம்
என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
6. திருமால் நம்மைப்
போல் கருப்பர்; கரிய மால், கார் மேனி என்றெல்லாம் வர்ணிக்கப்படுகிறார். அவரது முக்கிய
அவதாரங்களாகிய இராமனும் கிருஷ்ணனும் அதே நிறம்.
கிருஷ்ணன் என்பதற்குக் கருப்பன் என்பதே பொருள்.
சிவனோ சிவப்பு வண்ணம்; செம்மேனியம்மான், பொன்னார்
மேனியன் எனப் போற்றப்படுகிறார். சிவன் என்னும் சொல் 7-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தமிழ்
நூல்களில் காணப்படவில்லை; ஆனால் திருமால் தொல்காப்பியத்திலேயே இடம்பெற்றிருக்கிறார்.
தமிழகத்தின் முல்லை நிலத்துக்கு அவர்தான் தெய்வம்.
“மாயோன் மேய மைவரை யுலகம்” என்பது தொல்காப்பியம்.
இதையெல்லாம் வைத்து யோசித்தால், திருமால் திராவிடர்களின்
கடவுளோ? சிவன் ஆரிய தெய்வமோ? என்ற ஐயம் உதிக்கிறது.
7. உலகில் அதர்மம்
தலைதூக்கி அட்டகாசம் புரியும்போது கடவுள் அவதரித்துத் துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனஞ்
செய்வார் எனப் படுகிறது; ஆனால் எதார்த்தத்தில் அவ்வாறு நடக்கவில்லை.
பரசுராமன் தன் தந்தையைக் கொன்றவர்களைப் பழிவாங்குகிறான்.
இது முழுக்க முழுக்கத் தனிப்பட்ட விவகாரம். இவன் செய்கைக்கும் அதர்மத்துக்கும் தொடர்பு
எதுவுமில்லை; இதே போல் ராமன் தன் மனைவியைக் கடத்தியவனைக் கொன்று அவளை மீட்டான். இதுவும்
அவனது சொந்தப் பிரச்சனைதானே? இதில் தர்மமோ அதர்மமோ எங்கே வந்தது?
இதிலொரு வேடிக்கை! பரசுராமன் தன் பணியை முடிக்கும்
முன்னரே இராமன் தோன்றிவிடுகிறான். ஒரே காலத்தில் இரண்டு அவதாரங்கள்! இருவரும் இணைந்தாவது
அதர்மத்தை அழித்தார்களா என்று பார்த்தால் இல்லையென்பது தெரிகிறது; அது மட்டுமல்ல, இருவர்க்கும்
இடையே மாறுபாடு உண்டாகிறது. பரசுராமன் ஒரு வில்லை இராமனிடங் காட்டி, “அந்த வில்லை முறித்தாயே!
இதை முறி, பார்க்கலாம்” என்று அறைகூவல் விடுக்க, இராமன் முறித்துத் தன் வலிமையை வெளிப்படுத்துகிறான்.
இன்னோர் இரட்டையவதாரம்: கிருஷ்ணன் – பலராமன். பலராமன்
ஒரு waste. இவன் எதையும் சாதித்ததாய்த் தெரியவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு விநோதம் என்னவென்றால்
எந்த அவதாரமும் வெளிநாட்டில் நிகழவில்லை யென்பதே! பழைய நூல்கள் கூறுகிற 56 நாடுகளுள்
காம்போஜம் (கம்போடியா), காந்தாரம் (ஆப்கானிஸ்தான்) முதலான அயல்நாடுகளும் அடக்கம். அங்கெல்லாம்
நிரந்தரமாகத் தர்மம் தழைத்து வளர்ந்தோங்கியிருக்கிறது, ஆதலால் அவதாரம் தேவைப்படவில்லை;
இந்தியாவில் மட்டுந்தான் அதர்மம் அடிக்கடி கோரத் தாண்டவமாடியுள்ளது. இன்னம் பத்தாம்
அவதாரத் தேவையிருக்கிறது: கல்கி யவதாரம்.
இதைப் போய்ப் புண்ணிய பூமியென்று புகழ்வது பொருந்துமோ?
8. தமிழில் அற நூல்கள்
ஏராளம். அற இலக்கியம் என அவற்றைச் சுட்டுகிறோம். மேல்நாட்டார் அற நூலை இலக்கிய வகைகளுள்
ஒன்றாகக் கொள்வதில்லை. நல்லதைச் செய், அல்லதைச் செய்யாதே என்று போதிப்பதற்குப் பக்கம்பக்கமாக
எழுதிக் குவிக்க வேண்டுமா? அவை நம் வாழ்க்கை முறையை மேம்படுத்தினவா என்று யோசித்தால்
இல்லையென்று தெரியும். ஆங்கிலம் பிரஞ்சு முதலிய வளர்ந்த மொழிகளில் அற நூல்கள் இல்லை.
அவற்றுக்கு முக்கியத்துவம் தராத வெள்ளையர்களின் ஏதாவதொரு நாட்டில் நாம் போய் ஒரு மாதமாவது
தங்கினோமானால் அவர்கள் பொது இடங்களில் எவ்வளவு சிறந்த ஒழுங்கைக் கடைப்பிடிக்கிறார்கள்,
பிறருடன் எத்தகைய விழுமிய பண்பாட்டுடன் பழகுகிறார்கள், சாலை விதிகளை எப்படிச் செம்மையாக
மதித்துப் பின்பற்றுகிறார்கள் என்பதையெல்லாம் பார்த்து வியப்போம்.
9. நிறைய ஆங்கிலங்
கலந்து நாம் பேசுவதைக் கவனித்துப் பேச்சுத் தமிழ், அழிவை நோக்கி விரைவதாக ஆய்வாளர்
கூறுகின்றனர். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பலவற்றுக்கு ஆங்கிலத் தலைப்பு!
சில சேனல்களுக்குப் பெயரே ஆங்கிலத்தில்! தமிழ் படிக்காதவர்கள் கூட school,
teacher, book, bell, letter, leave, rate, water, night, shop, light, key என்கிறார்கள்.
இவற்றுக்குரிய தமிழ்ச்சொற்கள் கிட்டத்தட்ட அழிந்துவிட்டன.
‘மெல்லத் தமிழினிச் சாகும்’ என்றவனைப் பேதை என்ற
பாரதியார் இன்று இருந்தால், “பேதையல்ல, தொலைநோக்காளன்” என்பார்.
லத்தீன், சமற்கிருதம் முதலிய இலக்கிய வளங் கொழித்த
மொழிகள் இறந்துவிட்டன. எந்த மொழியின் அழிவையும் தடுக்க இயலாது. பிற மொழி மோகந் துறந்து
தாய்மொழிமீது பற்றுக் கொண்டு அதைக் காத்தே தீர்வது என்று கங்கணங் கட்டித் தமிழ் மக்கள்
தீவிரமாக முயல்வார்களானால், தமிழைச் சாவுப் படுக்கையிலிருந்து மீட்கலாம்; அது நடக்கப்
போவதில்லை.
10. வருங்காலத்தில்
அச்சடித்த நூல்கள் உருவாகா எனவும் எல்லாம் மின்னூலாகும் எனவும் சொல்லப்படுகிறது. அதற்கு
முன்பே நாளேடுகள் காலமாகிவிடும். முதல், நடு, இறுதியென எல்லாப் பக்கங்களையும் ஆக்ரமித்துக்
கொண்டுள்ள விளம்பரங்களுக்கிடையே செய்திகள் எங்கே யென்று தேடிப்பிடித்து வாசிக்க வேண்டியிருப்பது
எவ்வளவு எரிச்சல் தருகிறது! காசு கொடுத்து விளம்பரங்களை வாங்கி வாசித்துக் கொண்டேயிருக்க
மக்கள் அவ்வளவு முட்டாள்களா?
(படங்கள் உதவி - இணையம்)
சிந்திக்க வேண்டிய / வைக்கிற தகவல்கள் ஐயா...
ReplyDeleteநன்றி...
ஊக்கந் தரும் உங்கள் பின்னூட்டத்துக்கு என் மனமார்ந்த நன்றி .
Deleteமிகவும் ஆணித்தரமாக எழுதியது நமது வலைப்பதிவர்கள் பலருக்கும் ஒவ்வாததாகும் உண்மைகள் உரக்கப் பேசப்படுதல் பாராட்டத்தக்கது இறை இலக்கியங்கள் கூறுவதை ஒப்பவேண்டும்
ReplyDeleteபாராட்டி எழுதிய உங்களின் மேலான கருத்துரைக்கு மிக்க நன்றி .
Delete