Saturday, 1 June 2019

இந்திய இட சாரிக் கட்சிகள்






  1934-இல் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி பிறந்தது. காங்கிரசில் இயங்கிய இட சாரிக் கொள்கையாளர்கள் ஜெயப்ரகாஷ் நாராயணன் தலைமையில் அதை உருவாக்கினார்கள். முக்கியமானவர்கள் ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா, மது லிமாயி, அச்சுத் பட்டவர்த்தன், சந்திரசேகர் (பின்னாளில் பிரதமர் ஆனவர்), ராஜ் நாராயணன் (இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என்று வழக்குத் தொடுத்து வென்றவர்), ஜார்ஜ் பெர்ணாண்டஸ் (அண்மையில் காலமான கடைசி சோஷலிஸ்ட்).

  சுதந்தரம் கிடைத்த பின்பு அது காங்கிரசிலிருந்து வெளியேறித் தனிக் கட்சியாய் இயங்கிற்று.

  இது ஒரு புறம்; மறு புறத்தில் காங்கிரசின் மூத்த தலைவர்கள் ஆச்சார்ய கிருபளானி, ஆச்சார்ய நரேந்திர தேவ் ஆகியோர் பிரதமர் நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டு வெளியேறிப் பிரஜா கட்சியைத் தோற்றுவித்தார்கள்.

  இரு கட்சிகளும் வளர்ச்சி குன்றி சவலைகளாய் இருந்தமையால் ஒன்றுபட்டாலுண்டு வாழ்வு என்றெண்ணி இணைந்து பிரஜா சோஷலிஸ்ட் கட்சியெனப் புதுப் பெயர் சூட்டிக்கொண்டன. இணைப்பை ஏற்காமல் சோஷலிஸ்டுகளில் ஒரு சாரார் தொடர்ந்து கொஞ்ச காலம் செயல்பட்ட பின்பு சேர்வதே நல்லது எனக் கருதி அதில் ஜக்கியமானவுடன் பெயர் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி என்று மாறிற்று.

  இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அமல்படுத்தி எதிர்க் கட்சித் தலைவர்கள் எல்லாரையும் சிறையில் தள்ளி சர்வாதிகாரியாய்க் கோர தாண்டவம் ஆடியமைக்குத் தண்டனையாய்த் தேர்தலில் அவரையும் அடிவருடிகளையும் படுகுழியில் மக்கள் தள்ளிவிடவே ஜனதா கட்சித் தலைவர் மொரார்ஜி தேசாய் தலைமையில் மத்திய அரசு அமைந்தது; அதில் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சியும் அங்கம் வகித்தது; 2½ ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்தது; காரணமாய் இருந்தவர்கள் ராஜ் நாராயணனும் ஜார்ஜ் பெர்ணாண்டசும்.

  மக்களின் ஆதரவைப் பெற இயலாமற் போகவே கூடாரம் காலியாயிற்று; சிலர் காங்கிரசில் சேர்ந்தனர். மற்றவர் வெளியேறினர்.

  கட்சி இறுதி மூச்சை விட்டது. பாஜகவைப் போன்றே அது தமிழகத்தில் வேர் விடவேயில்லை.

  இந்தியாவின் முக்கிய கட்சியாகச் செயல்பட்டது கம்யூனிஸ்ட் கட்சி. தமிழகத்தில் அதுதான் ஆண்ட காங்கிரசுக்கு எதிர்க்கட்சியாய் இயங்கியது. பெரும் பெருந் தலைவர்கள் அதிற் பிரகாசித்தார்கள்: ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, மோகன் குமாரமங்கலம், பால தண்டாயுதம், கே.டி.கே.தங்கமணி, மணலி கந்தசாமி, சீனிவாச ராவ், க.சுப்பு.

  விவசாயக் கூலிகளாய் மிகக் கடினமாய் உழைக்க வேண்டியிருந்த தாழ்த்தப்பட்டவர்கள் மிராசுதாரர்களின் கொத்தடிமைகளாய் உழன்று எதிர்த்துப் பேசவும் திராணியின்றி அல்லற்பட்டு ஆற்றாது காலங்காலமாய் அவதிப் பட்டுக் கொண்டிருந்தார்கள். படிப்பும் பொருளும் இல்லாத அவர்களை ஒன்று திரட்டியும் பண்ணையார்கள் மற்றும் காவல்துறை ஆகிய இரு பெருஞ் சக்திகளின் அடக்குமுறைகளைச் சிரமப்பட்டு சமாளித்தும் சங்கம் அமைத்து அவர்களின் இருண்ட வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த அரும் பெருஞ் சாதனையைப் புரிந்தது கம்யூனிஸ்ட் கட்சிதான்.

  சோவியத் யூனியன் சிதைந்த பின்பு உலகு முழுதுமே கட்சி பின்னடைவை சந்தித்தது. தமிழ்நாட்டில் திமுக தலையெடுத்துக் கட்சியை ஓரந் தள்ளிற்று. வலம் இடம் எனக் கட்சி பிளவுபட்டதும் பலவீனத்துக்குக் காரணமாயிற்று.

  வலக் கம்யூனிஸ்ட் கட்சி நெருக்கடி நிலைக் காலத்தில் இந்திராவின் அட்டூழியங்களுக்குத் துணை போனமையால் மக்களின் வெறுப்புக்கு ஆளாகித் தேய்ந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் ஒரே யோரிடத்தில் மட்டுமே வென்றது.

  இடக் கம்யூனிஸ்ட் கட்சி முந்தைய தேர்தலில் 9 இடமும் அண்மைய தேர்தலில் 3 இடமும் மட்டுமே பெற்றது. ஒரு காலத்தில் அது ஆட்சி புரிந்த வங்காளத்திலும் திரிபுராவிலும் ஓர் இடங்கூடக் கிடைக்கவில்லை.

  இரு கட்சிகளுக்கும் இன்றைய பாராளுமன்றத்தில் மொத்தம் ஐந்தே இடங்கள். எவ்வளவு பெரிய வீழ்ச்சி!

************
(படம் உதவி இணையம்)


8 comments:

  1. ராஜகோபாலாச்சரியாரை விட்டு விட்டீர்களே ஓ அவர் வலது சாரி அல்லவா

    ReplyDelete
  2. இந்திய அரசியலின் ஆரம்பகால இட சாரிக் கட்சிகளின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி ஆகியவற்றை அறியத் தந்தமைக்கு நன்றி. இதுவரை அறிந்திராத பல தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது.

    ReplyDelete
  3. ஆமாம் .உங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.இளைய தலைமுறை அறியாதவர்,னைப் பதியவேண்டியது முதியோர் கடமை.

    ReplyDelete
  5. மிகப்பெரிய வீழ்ச்சி...

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . அரசியலில் இடசாரிகளும் கணிசமாக இருக்கவேண்டும் .

      Delete
  6. மிகப்பெரும் வீழ்ச்சிதான் ஐயா

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நாடாளுமன்றம் , சட்டசபை ஆகியவற்றில் இடசாரிகளும் போதிய எண்ணிக்கையில் இல்லாவிட்டால் மக்களில் ஒரு பகுதியினர்க்குப் ப்ரதிநிதித்வம் இல்லாமற் போகும் .

      Delete