Monday, 24 June 2019

கற்பனை மன்னர்  வடமொழி யிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள திருதராட்டிரன், அரிச்சந்திரன் முதலியோர் அல்லாமல் வேறு சில மன்னர்களைப் பற்றியுங் கதைகள் உண்டு; தமிழிலும் உள்ளன.

  அவர்களுட் சிலரைப் பற்றி ஆராயலாம்:

1. சிபி என்ற அரசனின் கதை மகாபாரதம் வனபர்வம் அத்தியாயம் 200-இல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

  உசீநர நாட்டை யாண்ட அவன், ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காக அதைத் துரத்தி வந்த பருந்துக்குத் தன் தொடைச் சதையை அறுத்துத் தர முன்வந்தான். எவ்வளவு சதையை நிறுத்தாலும் அது புறாவின் எடைக்குச் சமமாகாததால் தானே தராசு தட்டில் ஏறினான்.

  இந்திரனும் அக்கினியுந்தான் அவனது கருணையைச் சோதிப்பதற்காகப் பருந்தும் புறாவுமாய் வந்தனர். சோதனையில் வென்ற சிபி, தேவர்களின் பாராட்டைப் பெற்று மகிழ்ந்தான்.

  இது கற்பனைக் கதையென்பது வாசிக்கும்போதே தெரிகிறது.

  அவன் தசரதனின் முன்னோர்களுள் ஒருவன் என வால்மீகி இராமாயணங் கூற அதைக் கம்பர் வழிமொழிகிறார்:

  பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்

     புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க
     பெருந்தகை தன் புகழில் பூத்த
     அறனொன்றுந் திருமனத்தான்; அமரர்க்கு
     இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
     திறன் உண்ட வடிவேலான்; தசரதன்
     - - - - - - - - - 

     (அருஞ்சொற்பொருள்: 
     புற ஒன்றின் – புறா ஒன்றினுடைய; 
     துலை – தராசு; 
     பெருந்தகை – சிபி; 
     புகழில் பூத்த – புகழ் பெற்ற குலத்தில் தோன்றிய; 
     திறன் உண்ட – வலிமையை அழித்த)

  சிபியின் கதை அப்படிப் போகையில் சங்க காலத் தமிழ்ப் புலவர் சிலர் அவன் ஒரு சோழன் எனக்கொண்டு, “சீரை புக்க செம்பியன்” என்று அவனுக்குப் பெயர் சூட்டியிருக்கின்றனர்; (தராசில் ஏறிய செம்பியன் என்ற தமிழன் என்று பொருள்) அவனது மரபில் தோன்றியவர்கள் எனச் சில வேந்தர்களைப் புகழ்ந்திருக்கிறார்கள்.

புறம் 37: 5,6

     புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேற்
     சினங்கெழு தானைச்செம்பியன் மருக.

     (புள் உறு புன்கண் – பறவை அடைந்த துன்பம்; 
     மருக – மரபில் வந்தவனே!)

புறம் 39: 1-3

     புறவின் அல்லல் சொல்லிய கறையடி
     யானை வான்மருப்பு எறிந்த வெண்கடை
     கோனிறை துலாஅம் புக்கோன் மருக!

     (புறவின் – புறாவினுடைய, 
     அல்லல் சொல்லிய – துன்பத்தை நீக்குவதற்காக, 
     வான்மருப்பு – வெள்ளைத் தந்தத்தால், 
     எறிந்த – செய்த, 
     துலாஅம் – தராசு)

இரு பாடல்களும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் புகழ்ந்து பாடியவை.

புறம் 46: 1,2

  அதே மன்னனைக் கோவூர் கிழார் பாடியது:

     நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
     இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை

     (பிறவும் – பிற பறவைகளினுடைய)

  அவனை ஐயூர் முடவனாரும் “செம்பியன் மருக!” என்று விளிக்கிறார். (புறம் 228, அடி 9)

 தாமப்பல் கண்ணனார் சோழன் மாவளத்தானை அதே போலப் பாராட்டியுள்ளார்.

புறம் 43: 5-8

     கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
     தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
     தபுதி அஞ்சிச் சீரை புக்க
     வரையா ஈகை உரவோன் மருக!

     (கூர் உகிர் – கூர்மையான நகங்களையுடைய, 
     ஏறுகுறித்து ஒரீஇ – தாக்குதலுக்குத் தப்பி, 
     தன் அகம் புக்க – தன்னிடம் அடைக்கலம் புகுந்த, 
     தபுதி அஞ்சி – சாவுக்குப் பயந்து, 
     உரவோன் – வலிமையுடையவனுடைய)

  இப்படி ஒரு வடநாட்டு வேந்தனைச் சோழனாக்கியிருக்கின்றனர்.

2. மனுநீதிச் சோழன்

  ஒரு பசுவுக்கு நீதி வழங்குவதற்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற நியாயவான் இவன்.

  “இது ஆராய்ச்சி மணி, இதை யடித்தால் நமக்கு நீதி கிடைக்கும்” என்று சிந்தித்துச் செயல்பட்ட அபூர்வ மாடொன்றை இக்கதையில் சந்தித்து வியக்கிறோம்.

  கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்தபோது, செம்பியனையும் மனுநீதிச் சோழனையும் பற்றிப் பெருமையுடன் பேசியதாய்ச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

வழக்குரை காதை: 52 – 55

     புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
     வாயிற் கடைமணி நடுநா நடுங்க
     ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
     அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

     (வாயில் கடைமணி – வாசலில் கட்டிய மணி, 
     ஆவின் கடைமணி – பசுவின் கடைக்கண்ணிலிருந்து, 
     உகுநீர் – ஒழுகிய நீர், 
     ஆழியின் – தேர்க்காலில்)

3. பொற்கைப் பாண்டியன்

 இவனைப் பற்றிய கதையில், தான் செய்த தவறுக்குத் தண்டனையாய்த் தனது கையை வெட்டிக்கொண்டான் எனவும் அது பொன் கையாய் வளர்ந்தது எனவும் அறிகிறோம். பொன் + கை = பொற்கை.

  கையைத் துணித்தால், குருதிச் சேதம் ஏற்பட்டு மரணம் சம்பவிப்பது இயற்கை. இவனுக்கோ பொன் கை கிடைத்துள்ளது!

4. அரிமர்த்தன பாண்டியன்

  இறைவனைப் பிரம்பால் இவன் அடித்தான் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

  இவ்வாறு பல தகவல்கள் உண்மை வரலாறு போல இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. கற்பனைகள் எல்லா மொழிப் படைப்புகளிலும் இருக்கும். அவற்றைச் சுவைக்கலாம், அப்படியே நம்பிவிடக் கூடாது. எதைப் படித்தாலும் “இது நம்பக்கூடியது, இது கற்பனை” எனப் பிரித்தறிய வேண்டும்.

  எழுத்தாளர் சிலர் தம் கருத்துகளுக்குக் கற்பனைக் கதைகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இது தவறு.  

“கலை உரைத்த கற்பனையை
நிலை எனக் கொண்டாடும்
கண்மூடி வழக்க மெல்லாம்
மண்மூடிப் போக!”
             -    இராமலிங்க அடிகள்.  

11 comments:

 1. முடிவில் அருமையான கருத்து ஐயா...

  ReplyDelete
  Replies
  1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு என் மனங் கனிந்த நன்றி .

   Delete
 2. நல்ல பகிர்வு ஐயா...

  இறுதி வரிகள் சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் உள்ளமார்ந்த நன்றி.

   Delete
 3. வரலாறு வேறு கற்பனை இலக்கியங்கள்வேறு ஆனால் கற்பனைக் கதைகளை நடந்து பார்த்ததாக நல்ல இலக்கிய வளங்களுடன் இருப்பவை நம்கடவுளரின் கதைகள்

  ReplyDelete
 4. ஆமாம். சுவையான புராணக் கதைகள் உண்டு. உங்கள் பின்னூட்டத்திற்கு என் அகம் நிறை நன்றி.

  ReplyDelete
 5. சுவாரஸ்ய தகவல்கள் ...மிக அருமை ஐயா...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி .

   Delete
 6. சிபி மன்னின் கதை இராமாயணம், மகாபாரதம் இரண்டிலும் இடம்பெறுகிறது என்பதோடு சங்ககாலப் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளது என்றறிந்து வியப்பாக உள்ளது. கற்பனை மன்னர்களைப் பற்றி உண்மை வரலாறு போலவே பாடியிருக்கும் புலவர்களின் கற்பனைத்திறம் அபாரம். மெய்யுணர்த்தும் ஆய்வுப் பகிர்வுக்கு மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. விரிவான கருத்துக்கு என் இதயம் நிறை நன்றி கற்பனைகள் இல்லாவிடில் இலக்கியம் சுவைக்காது .

   Delete
 7. கலை உரைத்த கற்பனையை
  நிலை எனக் கொண்டாடும்
  கண்மூடி வழக்க மெல்லாம்
  மண்மூடிப் போக!”

  இராமலிங்க அடிகளாரின் கருத்து
  அருமை

  ReplyDelete