Wednesday, 3 July 2019

நூல்களிலிருந்து – 23





(பேராசிரியர் .நெடுஞ்செழியன் எழுதி 2017 நவம்பரில் வெளிவந்த இரண்டாம் பதிப்புசித்தண்ண வாயில்ஓர் ஆராய்ச்சி நூல். பழந்தமிழகத்தில் சமணம் பௌத்தம் போன்றே ஆசீவகம் என்ற மதமும் செல்வாக்குப் பெற்றுத் திகழ்ந்தது. சித்தண்ண வாயிலில் (சித்தன்ன வாசல் என்பது தவறு) காணப்படுங் கற்படுக்கைகளும் கல்வெட்டுகளும் ஆசீவகர்க்கு உரியவை என்று இந்நூல் கூறுகிறது. அதன் ஒரு பகுதியைப் பகிர்கிறேன்.)

  ஆசீவகம் உருவாக்கப்பட்ட தொடக்க காலத்தில் சைனத்திற்கும் பௌத்தத்துக்கும் கடும் போட்டியாகத் திகழ்ந்துள்ளது: எனினும் நாள் செல்லச்செல்ல பௌத்தத்திற்கும் ஆசீவகத்துக்கும் இடையே நல்லுறவு நிலவியது. பௌத்த சமயத்தைப் பரப்பிய அசோகன் ஆசீவகர்களுக்கென்று கற்படுக்கைகளை அமைத்ததில் அவ்வுண்மையைக் காணலாம். அசோகன் பௌத்தத்தைப் பரப்ப மேற்கொண்ட முயற்சியில் தமிழக மூவேந்தர்களும் அவனுக்குத் துணை நின்றுள்ளனர். அசோகனும் அவனால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட அவன் மகனும், தமிழ்நாட்டில் பல பௌத்த நினைவுச் சின்னங்களைத் தோற்றுவித்துள்ளனர். அந்த நாள்களில் தமிழக மூவேந்தர்களும் ஆசீவகத்தின் புரவலர்களாகத் திகழ்ந்தார்கள்; இதனை அவர்கள் வெளியிட்டுள்ள காசுகளில் பொறிக்கப்பட்ட யானைச் சின்னங்கள் உறுதிப்படுத்துகின்றன. யானை ஆசீவகத்தின் குறியீடு. இவ்வாறு தான் சார்ந்த பௌத்த சமயத்துக்குப் புகலிடந் தந்த தமிழ் மூவேந்தர்களுக்கு நன்றி காட்டும் வகையில் அவர்களின் போற்றுதலுக்கு உரிய சமயமாகிய ஆசீவகத்தைச் சிறப்பிக்கும் நோக்கில் அசோகன் அச்சமயத் துறவிகளுக்குச் செயற்கையாகக் குடைந்து கற்படுக்கைகளை உருவாக்கியுள்ளான் எனலாம்.

  மற்கலி கோசாலராகிய அறப்பெயர் சாத்தனார் கைலாயம் வரை சென்று அங்கு ஆதிநாதரிடம் ஆதி உலாவைக் கேட்டு வந்து திருப்பிடவூரில் அரங்கேற்றினார் எனப் பெரிய புராணம் குறிப்பிடுவதால் (வெள்ளானைச் சருக்கம்பாடல் 52) மாசாத்தனாருக்கும் வடபுலத்திற்கும், குறிப்பாக மகதத்துக்கும் இருந்த தொடர்பை உய்த்தறிய முடிகிறது. மற்கலி கோசாலர் மகாவீரருடன் இணைந்து ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக சமயப் பணிகள் ஆற்றினார் என்று கூறப்படுகிறது. இது பெரிய புராணம் குறிப்பிடும் வடபுலப் பயணத்தை உறுதி செய்கிறது. மற்கலியின் இவ் வட நாட்டுப் பயணமே ஆசீவகம் மகதத்தில் பரவுவதற்கும் வட நாட்டார் பலர் தமிழகத்தில் வந்து சமயப் பயிற்சியைபரவலைமேற்கொள்ளவும் காரணமாயிற்று. இதன் விளைவாகவே தமிழில் முதன்முதலாகப் பிறமொழிக் கலப்பு ஏற்படலாயிற்று. தமிழகக் குகைக் கல்வெட்டுகளில் அர்த்தமாகதி, பாகதம் முதலான மொழிகளின் சொற்கள் இடம் பெற்றுள்ளதற்கான காரணம் இதுவே. மணப்பாறையிலுள்ள நல்லாண்டவர் கோயில் என்னும் ஐயனார் கோயிலில் இடம்பெற்றுள்ள லாட முனிவரின் சிலை, அவர் லாட தேசத்திலிருந்து வந்தவர் என்பதன் அடையாளமாகும். லாடதேசம் என்பது இன்றைய குஜராத் மாநிலத்தின் ஒரு பகுதி. இவ்வாறு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் ஆசீவகத்தைத் தழுவவும் பரப்பவும் பலர் தமிழகம் வந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

  சிலப்பதிகாரத்தில் ஆசீவகத்தின் செல்வாக்கு மிகப்பெரிய அளவில் இருந்துள்ளதுடன் ஐயனாராகிய பாசாண்ட சாத்தன் முழுமுதற் கடவுள்களுக்கும் மேலான ஆற்றல் பெற்ற தெய்வமாகக் காட்டப்படுவதும் இங்கு எண்ணத்தகும். ஆசீவகத் துறவிகளின் கடுந்தவமும் தூய ஒழுக்கமும் வாய்மையும் அம்மதத்தின் பெருமைக்கும் உயர்விற்குங் காரணங்களாயின. இன்றும் பல ஐயனார் கோயில்களில்பொய் சொல்லா மெய் ஐயனாரின்சிலைகள் அவர்களின் பெருமைக்குக் கட்டியங் கூறுகின்றன. இவ்வாறு தமிழர் வாழ்வியலின் அனைத்துக் கூறுகளிலும் பிரிக்க முடியா அங்கமாகத் திகழ்ந்தனர் ஆசீவகத் துறவிகள். இச்சூழலில்தான் கருநாடகத்திலிருந்து வந்த களப்பிரர்கள் சைன சமயத்தினராக இருந்த காரணத்தாலும் சைனம் இயல்பிலேயே ஆசீவக எதிர்ப்பில் ஊறித் திளைத்திருந்ததாலும் ஆசீவகம் கடும் பாதிப்புக்கு உள்ளாகத் தொடங்கியது. பல ஆசீவகப் பாழிகள் சைனப் பள்ளிகளாக உருமாற்றம் பெற்றன; பல சைன அறிஞர்கள் தங்களைஆசீவகர்கள் என்னும் யானையை வீழ்த்திய அரிமாப் போத்துகள்எனப் பெருமை பாராட்டிக்கொண்டனர்.

  களப்பிரர்களின் அரசியல் அதிகாரத்தால் பாதிக்கப்பட்ட ஆசீவகமும் ஐயனார் வழிபாடும், வன்முறைகளை மட்டுமே கருவிகளாகக் கொண்டவர்களும் மனித ஊனைத் தின்பதும் சுடுகாட்டுச் சாம்பலைப் பூசிக் கொள்வதும் தங்களின் சமய அடையாளங்களாய்க் கொண்டவர்களும் ஆகிய கபாலிக காளாமுகத்தவர்களால் நிலைகுலைந்து போயின. இந்த வன்கொடுமையை முதன்முதலாய்க் கட்டவிழ்த்துவிட்டவர் திருநாவுக்கரசரே யாவார்; இவர் பழையாறையில் இருந்த ஆயிரம் ஆசீவகர்களை யானைகளையிட்டுக் கொன்றழிக்கச் செய்தார்; இதனை

ஆனை இனத்தில் துகைப்புண்ட
அமணா யிரமும் மாய்ந்ததற்பின்

எனும் பெரிய புராணம்திருநாவுக்கரசர் – 249 ஆம் பாடலால் அறியலாம்.

  அப்பர் சைன சமயத்திலிருந்து சைவ சமயத்தின் உட்பிரிவான கபாலிகத்திற் சேர்ந்த பின்பு சைன எதிர்ப்போடு ஆசீவக எதிர்ப்பும் கூர்மைப் படுத்தப்பட்டது என்பதைப்

பாடலிபுத் திரத்தில் அமண் பள்ளியொடு பாழிகளும்
கூட இடித்துக் கொணர்ந்து குணபர வீச்சுரமெடுத்தான்

என்னும் 145-ஆம் பாடல் உறுதி செய்யும். இங்கே பாழி எனக் குறிக்கப்படுவது ஆசீவகர்க்குரிய இடம். பாடலிபுத்திரம்இன்றைய கடலூர்.

  ஞான சம்பந்தரும் வைதிக நெறிக்கு மாறான சமயங்களாகிய சைனம் பௌத்தம் ஆகியவற்றோடு ஆசீவகத்தையும் அழித்தொழிப்பதில் முன்னின்றார். ஆசீவகர்களின் பாழிகள் சைன பௌத்தர்களின் பள்ளிகள் ஆகிய அனைத்தையும் இடித்துத் தரைமட்டம் ஆக்கிவிட்டு அவ்விடங்களில் எல்லாம் சைவக் கோயில்களை எடுத்தார். இதனைப் பெரிய புராணம்

    பூழியன் மதுரை யுள்ளார்
       புறத்துளர் அமணர் சேரும்
    பாழியும் அருகர் மேவும்
       பள்ளியும் ஆன எல்லாம்
    கீழுறப் பறித்துப் போக்கிக்
       கிளரொளித் தூய்மை செய்தே
    வாழிஅப் பதிகள் எல்லாம்
       மங்கலம் பொலியச் செய்தார்.
              (பா. 589)

எனக் குறிக்கக் காணலாம். 

  ஆசீவக சமயத்துச் செல்வாக்கின் அடையாளமே ஐயனார் வழிபாடாகும்.   
  ஐயனார்க்கு சாத்தன் என்றும் பெயருண்டு.



8 comments:

  1. ஊமைக்கன்வுகளின் தளத்தில் ஆசிவகம் பற்றிப்படித்த நினைவு உணர்ச்சிகளை அடக்க ஆசீவகர்கள் தாழியில் தங்களை அமர்த்திக் கொண்டு வருத்திக்கொள்வர்களாம்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? எனக்குத் தெரியாததை அறிவித்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. Replies
    1. கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  3. தகவல்கள் சிறப்பு ஐயா... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டியமைக்கு மிக்க நன்றி .

      Delete
  4. கடந்த ஒரு வருடமாகத்தான் ஆசீவகம் என்ற சொல்லையும் அது குறித்தும் அறிகிறேன். சமணம்தான் ஆசீவகமோ என்று கூட முதலில் ஐயம் எழுந்தது. ஆசீகவம் குறித்து நிறைய அறிந்துகொள்ள வேண்டியுள்ளது. நூலறிமுகத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . சமணரை அருகர் எனவும் ஆசிவகரை அமணர் எனவும் நூலாசிரியர் பிரித்துக் காட்டியுள்ளார் .

      Delete