ஆண்டுதோறும்
ஆனி மாதத்தில் நிகழும் காரைக்கால் மாங்கனித் திருவிழா காரைக்காலம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கிறது.
முதல்
நாளில் இரு முக்கிய நிகழ்ச்சிகள் நடக்கும். முற்பகலில் புனிதவதி – பரமதத்தன் திருமணம்; மாலையில் பூப்பல்லக்கில் மணமக்கள் ஊர்வலம்.
இரண்டாம்
நாள் காலை முதல் நள்ளிரவு வரை நடைபெறுகிற பல நிகழ்வுகளில் மிக மிக முக்கியமானது இறைவன் பிச்சைப் பாத்திரம் ஏந்தி ஊர்வலமாய் வந்து புனிதவதியின் இல்லம் நோக்கிச் செல்வது. அவருக்குப் பிச்சையாண்டவர் என்று பெயர். அவரது சப்பரத்தைத் திரளான பக்தர் கூட்டம் சூழ்ந்து நடக்கையில் அங்கங்கு மாடிகளிலிருந்து மக்கள் அவர்களை நோக்கி மாம்பழங்களை எறிவார்கள்; அவற்றைப் போட்டி போட்டு இடித்துத் தள்ளித் தாவிப் பிடித்து பக்தர்கள் உண்பார்கள்; அது ஆண்டவன் பிரசாதம்!
புனிதவதியின் வாழ்க்கை வரலாறு பெரிய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது:
காரைக்காலில்
புனிதவதி யென்றொரு சிவ பக்தை வாழ்ந்துவந்தார். சிவனடியார்களைப் போற்றுவதும் அவர்களுக்கு உணவு அளித்துப் பேணுவதும் அவரது விருப்பமான வழக்கம்.
அவருக்கும்
நாகப்பட்டினத்தைச்
சேர்ந்த பரமதத்தனுக்கும் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை காரைக்காலிலேயே தங்கி வாணிகம் செய்துவந்தார். ஒரு நாள் அவர் இரு மாங்கனிகளை ஆள்மூலம் வீட்டுக்கு அனுப்பினார்.
புனிதவதியின்
மகிமையை உலகுக்கு உணர்த்த வேண்டி சிவபெருமான் ஓர் இரவலன் கோலத்தில் அவரில்லஞ் சார்ந்து யாசித்தபோது அவர் அன்புடன் அன்னமிட்டு ஒரு மாங்கனியைக் கறியாக வைத்தார்.
பின்பு
பரமதத்தன் வந்து சாப்பிட்ட போது தமக்குப் பரிமாறப்பட்ட பழத்தையுண்டு அதன் சுவையில் சொக்கி மற்ற கனியையும் தின்ன ஆசையுற்ற அதைக் கேட்டார். அதை எதிர்பார்க்காத புனிதவதி என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து உள்ளே போய் இக்கட்டிலிருந்து காப்பாற்றும்படி கடவுளை வேண்டக் கையில் ஒரு கனி விழுந்தது; அதைக் கணவர்க்குக் கொடுத்தார். தின்ற அவர், “அதைக் காட்டிலும் இது மிக அற்புதச் சுவையுடையதாக இருக்கிறதே! இது வேறு ரகப் பழம்; இது ஏது? சொல்” என்று கட்டளையிட்டதும் மனைவி நிகழ்ந்தவற்றைக் கூறினார். அவர் நம்பாமல் “எங்கே? என் எதிரில் வேறு கனி வரவழைத்துக் காட்டு” என்றதும் மீண்டும் அற்புதம் நிகழ்ந்தது.
தம்
மனைவி தெய்விக ஆற்றல் உள்ளவர் என்பதை யறிந்துகொண்ட பரமதத்தன் அவருக்குக் கணவனாய் இருக்கத் தனக்குத் தகுதியில்லை என முடிவு செய்து வேற்றூர்க்குப் போய்விட்டார்.
இனிமேல்
தாம் வாழ்வதில் அர்த்தமில்லை எனக் கருதிய புனிதவதி, தமது சதையை உதிர்த்துவிட்டு எலும்பு உருவாகிக் கடவுளைத் தரிசிப்பதற்காகக் கைலை மலையில் தலைகீழாய் நடந்து ஏறினார், கண்டார். அவரால் “அம்மை” என்று சுட்டப்பட்டார். ஆதலால் ‘அம்மையார்’ என்ற பட்டப்பெயர் பெற்றார்.
கதையைச்
சுருக்கமாகக் கூறினேன்.
காரைக்காலில்
கு. மலைப் பெருமாள் பிள்ளை என்ற பெருஞ் செல்வர் வாழ்ந்தார். எண்பது வேலி நன்செயும் பத்து வீடுகளும் அவரது சொத்து. அவர் வள்ளலாகவும் திகழ்ந்தார். நாள்தோறும் ஐந்து ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய அவர் ஏற்பாடு பண்ணியிருந்தார். ஊரில் இயங்கும் அரசு தாய்சேய் மருத்துவமனை அவர் தமது செலவில் எழுப்பியளித்ததுதான்.
அவர்தான்
காரைக்காலம்மையார்க்கு
ஒரு சிறு கோவில் கட்டிக் குளமும் வெட்டி மாங்கனித் திருவிழா நடப்பதற்கு ஆவன செய்தவர். 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து விழா நிகழ்கிறது.
அவர்
1932-இல் காலமானார்.
*******
(குறிப்பு – இந்த ஆண்டிலிருந்து மூன்று நாள் விழாவாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 14-7 இல் திருமணமும் ஒரு நாள் விட்டு 16-7 இல் பிச்சையாண்டவர் ஊர்வலமும் நிகழும்.)
(படங்கள் உதவி - இணையம்)
அருமையான நிகழ்வு... சிறப்பான விளக்கம்... நன்றி ஐயா...
ReplyDeleteஉங்களின் மேலான பாராட்டுக்கு மிகுந்த நன்றி .
ReplyDeleteதக்காளி எறிந்து விழாமாதிரிஅய்ல் நாடு ஒன்றில் கொண்டாடுவார்கள் நாடு பெயர் நினைவுக்கு வரவில்லை நம்பமுடியாத கதைகள் நம்நாட்டில் அதிகம்
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நீங்கள் சொன்னதுபோல் நம்ப முடியாத கதைகள் அதிகம் அவற்றை நம்புவோரும் அதிகம் . அவை உண்மையல்ல என்று கூறுவோரிடம் சண்டைக்கு வருவார்கள் , சிந்திக்க மாட்டார்கள் .
ReplyDelete28 வருடங்களுக்கு முன்பு ஒரே ஒரு முறை இம்மாங்கனித் திருவிழாவைக் கண்டுகளிக்கும் வாய்ப்பு கிட்டியது. அப்போது திருவிழா குறித்த அதிகத் தகவல்கள் தெரிந்திருக்கவில்லை. இத்திருவிழா மக்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்பது, மூன்று நாள் விழாவாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளதிலிருந்தே அறிந்துகொள்ள முடிகிறது. தோற்றுவித்தவர் குறித்த தகவல்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteநாகப்பட்டினத்திலிருந்து வடக்கே தரங்கம்பாடிவரையும் மேற்கே 30 கி. மீ.வரையும் உள்ள பிரதேசத்துக்கு ஆண்டுதோறும் நிகழும் ஒரே விழா என்பதால் திரளான மக்கள் கூடுகிறார்கள் . தோற்றுவித்தவர் என் அன்னையின் பெரியப்பா.பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .
Deleteசிறப்பான விளக்கம் ஐயா
ReplyDeleteநன்றி
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
Delete