Sunday 4 August 2019

பிரஞ்சிந்தியாவில் தேர்தல்





  இப்போதைய புதுச்சேரி யூனியன் பிரதேசம் பிரஞ்சியரின் ஆட்சிக்காலத்தில் பிரஞ்சிந்தியா என அழைக்கப்பட்டது.

  அப்போது இங்குக் காங்கிரஸ், பொதுவுடைமைக் கட்சி என்றெல்லாம் கொள்கையடிப்படையில் கட்சிகள் தோன்றவில்லை. தனிப்பட்ட பிரமுகர்கள் கட்சி நடத்தினார்கள்; புதுச்சேரியில் கெப்ளே கட்சி, ஷண்முக வேலாயுத முதலியார் கட்சி, காரைக்காலில் தோமாஸ் பிள்ளை கட்சி, சவரிப் பிள்ளை கட்சி ஆகியவை குறிப்பிடற்குரியவை.

  பிரான்சின் நாடாளுமன்றத்துக்கான தேர்தல் இங்கு நடந்த விதம் விசித்திரமானது.

  பிரான்சிலிருந்து சில வெள்ளையர் தேர்தலுக்காகவே இங்கு வந்து வேட்பாளராய்ப் போட்டியிடுவார்கள். வெல்பவர் யாரோ அவரே ஐந்தாண்டுக்குப் பிரஞ்சிந்திய மக்களின் பிரதிநிதி. தேர்தல் முடிந்தவுடன் தாய்நாட்டுக்குத் திரும்பிவிடுகிற அவரை மறுபடி காணமுடியாது என்பதைச் சொல்ல வேண்டுமா?

  பிரஞ்சு அரசியலமைப்புப்படி தேர்தல்களை அரசு நடத்தக்கூடாது, மக்களே நடத்துவார்கள்; அதுவே ஜனநாயகம். படித்தவர்கள் பண்பாடு மிக்கவர்கள் நிறைந்த பிரான்சில் அவை அமைதியாய் ஒழுங்காய் சிறப்பாய் நடக்கலாம்; இங்கு எதிர்பார்க்க முடியுமோ?

  தேர்தல் தேதியை அரசு அறிவிக்கும், வாக்குச் சாவடிகளையும் அமைக்கும்.

  ஒரு வாரத்துக்கு முன்பே, தமிழக ரௌடிகள் பலரை இரு தரப்பும் வரவழைத்துத் தங்க வைத்துக் கறியுணவும் சாராயமும் தாராளமாய்த் தந்து பராமரிக்கும்.

  தேர்தல் நாளன்று அவர்கள் வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றுவார்கள், சில சாவடிகள் ஒரு கட்சியின் வசமாகும், மற்றவை எதிர்க் கட்சியிடம் சிக்கும்.

  அந்தந்தப் பகுதி பிரமுகர்கள் தங்களைத் தாங்களே தேர்தல் அதிகாரிகள் எனப் பிரகடனப்படுத்திக் கொள்வார்கள். தெருக்களில் உருட்டுக் கட்டைகளுடன் சுற்றித் திரிகிற ரௌடிகள் வாக்களிக்க ஒருவரும் வராமல் விரட்டிவிடுவார்கள். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிற காலம் போல் பொதுமக்கள் வீட்டுக்குள் பத்திரமாய்த் தங்கி உயிரைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

  வாக்களிப்பு நேரம் முடிந்ததும் தேர்தல் அதிகாரிகள் ஓர் அறிக்கை தயாரிப்பார்கள்; எதிர்க் கட்சிக்கு ஒரு வோட், தங்கள் கட்சிக்கு பாக்கி எல்லா வோட்டும் என்று எழுதி வாக்குப் பெட்டிக்குள் போட்டு சீல் வைத்துத் தூக்கிக்கொண்டு கும்பலாய்ப் போய் அரசிடம் ஒப்படைப்பார்கள். எதிர்க் கட்சி ரௌடிகள் வழியில் தாக்குதல் நடத்திப் பெட்டியைப் பிடுங்கிப் போய் வேறு அறிக்கையுடன் அரசிடம் தருவதுமுண்டு. வல்லான் வகுத்ததே வாய்க்கால்!

  அயலூர்களுக்கு நிரந்தரமாயப் போய்விட்டவர்களும் காலமானவர்களும் கூட வோட் போட்டவர்களுள் அடங்குவர். வாக்குச் சீட்டுகளைச் சாவடிகளிலேயே எரித்துவிடவேண்டும் என்பது சட்டமாதலால் சரிபார்ப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.

  தேர்தல் முடிவை அரசு அறிவிக்கும். அதிக வலுவுள்ள ரௌடிகளின் ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெறும்.

  1910 இல் அச்சிடப்பட்ட சிறு நூலொன்று எங்கள் வீட்டில் இருந்தது; அதன் தலைப்பு:

பொலித்தீக் பூர்வோத்தரமும் போல்புளூசேன் எலக்சியமும்

(பொலித்தீக் = அரசியல்; போல்புளூசேன் = வெள்ளைக்கார வேட்பாளரின் பெயர்; எலக்சியம் = தேர்தல்)

  அந்நூலின் விவரப்படி இந்த வேட்பாளரை இந்துக்களும் இவரை யெதிர்த்துப் போட்டியிட்ட லெமேர் என்ற பிரஞ்சுக்காரரை முஸ்லீம்களும் ஆதரித்துள்ளார்கள்; அதன் விளைவாய் நடந்த மதக் கலவரத்தை அந்த நூல் செய்யுள் நடையில் விவரிக்கிறது.
  சில அடிகள் மட்டுமே நினைவில் நிற்கின்றன:

  அறுபது வயது கிழவரையா லாஆஷ் துரைதானும்
   அய்யோ பாவம் அவரேன் வந்தார் அந்தக் கலகத்திலே?

(லாஆஷ் ஏன்ற வெள்ளையர் தாக்கப்பட்டார்.)

  இந்துக்களின் தலைவராய்ச் செயல்பட்டவர் சி.மு. சாமிநாத பிள்ளை என்பவர்; அவரைச்சிங்கம் சாமிநாதன்என நூல் புகழ்கிறது. அவர் கூறியதாக இரு அடிகள்!

  அண்ணா வாடா தம்பி வாடா
     மிட்டாய் நடேசா
   ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு
     என்றன் தோழரே.

தேர்தலில் புளூசேன் வென்றார்.

  என் பாட்டனார் இரவில் திண்ணையில் படுத்து உறங்குவது வழக்கம். கலகம் உச்சக் கட்டத்தில் இருந்தபோது அவரை வற்புறுத்தி உள்ளே தூங்க வைத்திருந்தார்களாம். நள்ளிரவில் வெளியே மடார் மடார் என்ற சத்தமும் அய்யோ அய்யோ என்ற அலறல் குரலும் கேட்டிருக்கின்றன. காலையில் விஷயம் விளங்கிற்றாம்.

  யாரோ ஒருவர் திண்ணையில் படுத்துத் தூங்கியிருக்கிறார்; என் பாட்டனார் எனத் தவறாய் நினைத்து முஸ்லிம்கள் சிலர் அடித்துள்ளார்கள்.

  மின்சாரம் இல்லாக் காலம்!

8 comments:

  1. குடவோலச் சீட்டு மூலம் தேர்ந்தெடுப்பு இந்தியாவில்தான் தேர்தல் முறைகள்வெகுவகவே மாறி விட்டது

    ReplyDelete
  2. ஆமாம்; குடவோலச்சீட்டு முறை பாராட்டுக்குரியது. கிரேக்கத்தில் இதைவிடச் சிறப்பான முறை இருந்ததாம்.பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. அறியாத தகவல்கள்... நன்றி ஐயா...

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து பாராட்டிப் பின்னூட்டம் தரும் உங்களுக்கு என் உள்ளமார்ந்த நன்றி .

      Delete
  4. பிரஞ்சிந்தியத் தேர்தலின் அந்நாளைய விசித்திரமான நடைமுறை வியப்பளிக்கிறது. தேர்தலுக்குப் பிறகு வெற்றி பெற்ற வேட்பாளர் தொகுதிப்பக்கம் தலைகாட்டா தன்மையும் கட்சிகள், தேர்தல் நேரத்தில் ரௌடிகளை வரவழைத்து கறியுணவு அளித்து உபசரித்து, கலவரத்துக்குத் தயார் செய்யும் வழக்கமும் அப்போதே இருந்திருக்கின்றன என்பதை அறியும்போது ஆச்சர்யமாக உள்ளது. வாக்குச்சீட்டுகளை வாக்குச்சாவடியிலேயே எரித்துவிடும் நடைமுறை இன்னொரு ஆச்சர்யம்.

    தங்களிடமிருந்து அறிந்துகொள்ள எவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன. சொல்லித்தீராத அனுபவக்கதைகள் அநேகம் உள்ளன. அந்நாளைய பல நிகழ்வுகளையும் நினைவிலிருந்து மீட்டிக்கொணர்ந்து எம்மோடு பகிர்வதற்கும் ஆவணப்படுத்துவதற்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வீரசங்கிலி என்பவரும்வலை கோவிந்தன் என்பவரும் “புகழ்” பெற்ற உள்ளூர் குண்டர்கள்; இரு எதிரணித் தலைவர்கள்.
      முன்னவரை நான் பார்த்திருக்கிறேன். பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

      Delete
  5. அறியாத தகவல் ஐயா
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.

      Delete