Wednesday 14 August 2019

புதுச்சேரியில் அடிமைகள்



  (Pierre Bourda என்பவர் 2005 அக்டோபரில் L’esclavage a Pondichery (புதுச்சேரியில் அடிமை முறை) எனத் தலைப்பிட்டு எழுதிய ஒரு பிரெஞ்சுக் கட்டுரையின் சுருக்க மொழிபெயர்ப்பு.)

  போர்க் கைதிகளும் அவர்களின் குடும்பத்தாரும் அடிமைகளாக நடத்தப்படுவார்கள்என்றொரு சட்டத்தை முகலாய மன்னர் இயற்றிய காலந்தொட்டு இந்தியா முழுதும் அடிமை முறை வழக்கத்துக்கு வந்தது. அவர்களது எண்ணிக்கை குறைவென்பதும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடற்குரியவை.

  பிரஞ்சிந்தியாவைப் பொருத்தவரை அரசும் நீதித்துறையும் அடிமை முறையை ஏற்றிருந்தன. கீழ்ச் சாதி மக்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகளுள் ஒன்று அடிமை வாழ்வு.

எடுத்துக்காட்டு:

  Manuel Desouza என்ற 15 வயது வேலைக்காரச் சிறுவன் தன் எஜமானனாகிய Chezneau விடம் திருடிய குற்றத்துக்காக அவரிடம் ஆயுட்காலம் முழுதும் அடிமைச் சேவகஞ் செய்யவேண்டும் எனவும் திருட்டில் ஒத்துழைத்த Pedro என்னும் 10 வயது பையன் அதே எஜமானிடம் அடிமையாக விற்கப்பட வேண்டும் என்றும் 1710 ஜனவரியில் ஒரு தீர்ப்பு அளிக்கப்பட்டது.

  பெற்றோர் சிலர் பஞ்சக் காலத்தில் தம் பிள்ளைகளை விற்றிருக்கின்றனர். பிரான்சிலிருந்து 1690 இல் புதுச்சேரிக்கு வந்த Challe என்பவர் அது பற்றிக் கீழ்க்காணுமாறு எழுதி இருக்கிறார்:

  மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்பு இல்லை எனத் தெரிந்த போதிலும் பிள்ளைகளை சர்வ சகஜமாக விற்கிறார்கள். ஒரு கப்பலின் கேப்டன் ஏழு வயது சிறுமியொருத்தியை விலைக்கு வாங்கிக் கிறித்துவ மதத்துக்கு மாற்றி Seraphine எனப் புதுப் பெயர் சூட்டினார்.”

  மொரீஷியஸ் நாட்டில் ஆளுநராய்ப் பதவி வகித்த Labourdonnais 1746 இல் புதுச்சேரிக்கு மாற்றலான போது சில ஆப்ரிக்கர்களை விலைக்கு வாங்கி அழைத்து வந்தார். சென்னை மீது பிரஞ்சியர் படையெடுக்கையில் அவர்கள் மாலுமிகளாயும் ஊழியர்களாயும் உழைத்தார்கள்; பின்பு அவர்களுட் சிறப்பாய்ப் பாடுபட்ட சிலர்க்குக் கைம்மாறாக விடுதலை வழங்கப்பட்டது; மற்றவர்கள் இங்கே தனியார்களால் விலைக்கு வாங்கப்பட்டு அவர்களுக்கு அடிமையானார்கள்.

  Anquetil Duperron என்பவர் எழுதியபடிஅடிமை வாணிகம் இந்தியாவில் நடைபெறவில்லை. வேலை செய்வதற்காகச் சிலரை விலை தந்து வாங்கினார்களே யொழிய பிறர்க்கு விற்பதற்காக அல்ல. இது புதுச்சேரியின் நிலைமை; ஆனால் வங்காளத்தில் பயங்கர வெள்ளங்களும் அவற்றின் விளைவாகப் பஞ்சங்களும் அடிமை வியாபாரத்துக்குச் சாதகமாயின; ஏழைகளை வாங்கி மொரீஷியசில் கரும்புத் தோட்ட முதலாளிகளிடம் விற்றனர்.”

  ஆனந்தரங்கப் பிள்ளையின் 25.6.1743 தேதியிட்ட நாட்குறிப்பு கீழ்க்காணுந் தகவலைத் தெரிவிக்கிறது;

  வணிகர் Soude தம் இல்லத்தில் சில ஆடவரையும் பெண்டிரையும் சங்கிலியாற் பிணைத்து ரகசியமாய் வைத்திருந்தார். இந்திய அடிமை வர்த்தகர் ஒருவர் அவரிடம் அவர்களை அடைக்கலப் படுத்திப் பின்பு கப்பலில் ஏற்றி மொரீஷியசுக்கு அனுப்பினார். அது கண்டுபிடிக்கப் பட்டது. பெத்தோ கனகராயன் என்ற பிரமுகரிடமும் ரங்கப் பிள்ளையிடமும் Soude தம்மைக் காப்பாற்றும்படி வேண்டினார். அவர்களோ ஆளுநர் துய்ப்ளேக்சுக்குத் தகவல் தெரிவித்தார்கள்: அவர் அந்த வியாபாரியைச் சிறையிலடைத்து அடிமைகளுக்கு விடுதலை யளித்தார்.”

  பிரஞ்சு மன்னர் 16 ஆம் லூய் 22.2.1792 இல் ஓர் உத்தரவு பிறப்பித்தார்;

  இந்தியச் சிறுவர்களைக் கடத்தியோ பணத்துக்கு வாங்கியோ அடிமையாக்குவதும் வெளிநாட்டில் வாங்கிப் புதுச்சேரிக்குக் கொண்டுவருவதும் இந்தத் தேதியிலிருந்து சட்ட விரோதம். அண்மையில் அப்படி யழைத்துவரப்பட்டு இன்னம் விற்கப்படாமல் உள்ளவர்களை மூன்று நாளுக்குள் கப்பலில் ஏற்றித் திருப்பி அனுப்பிவிட வேண்டும், அல்லது புதுச்சேரியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும்.”

  அது முதல் அடிமை முறை ஒழிந்தது.

9 comments:

  1. என்னவெல்லாம் கொடுமை நடந்திருக்கிறது ஐயா...

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் வருந்துவது நியாயம் ; வெளிச்சத்துக்கு வாராமல் ஆயிரக்கணக்கான கொடுமைகள் நிகழ்ந்திருக்கும் . பாதிக்கப்பட்டவர்களைப் பற்றிய குறள் : "அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் ." உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. திரு அப்பாதுரை தன் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்த
    அடிமைத்தனம் என்பது.. ஏன் செய்கிறோம் என்றச் சிந்தனையில்லாமல் ஒரு செயலில் திரும்பத் திரும்ப ஈடுபடுவது.."

    "எதையும் ஆராயாமல் கேளாமல் இன்னொருவர் சொற்படி ஏற்று நடப்பதாகும்"

    "ஏனென்று கேட்டால் தண்டிக்கப்படலாம் என்ற ஒரு வித அச்சம் கலந்த எதிர்பார்ப்புடன் உடன்படுவதாகும்"

    "ஒரு விருப்பத்தை நிறைவேற்றினால் அதிகாரமுள்ளவர் மனமிரங்கி ஏதாவது பலன் வழங்குவார்கள் என்றக் கீழ்த்தட்டு எதிர்பார்ப்பே அடிமைத்தனமாகும்"

    "விருப்பத்துக்கு மாறாக நடந்தால் தண்டனை கிடைக்கும் என்றத் தீராத பயம்.."

    "தன்னிச்சையான எண்ணம் செயல் போன்ற சுதந்திர வெளிப்பாடுகளை இனம்புரியாத காரணங்களுக்காக அடக்கியோ ஒடுக்கியோ வைக்கும் மனநிலை.."

    "பயனில்லை என்று தெரிந்தும் ஒன்றை மீண்டும் மீண்டும் நாடும் மனப்பாங்கு"

    "மரபு.. வழக்கம் என்ற ஒரு விளங்காத விளக்கமுடியாத முறைக்குட்பட்டு நடப்பது.."

    "அறியாமல் செய்த தவறை, அறிந்தே தொடர்ந்து செய்வது.. செய்யத்தூண்டுவது.."

    நாளை சுதந்திர தினம் அரசியல் சுதந்திரம்வேறு உண்மையான சுதந்திரம் வேறு அங்கிள் டாம்ஸ் கேபின் என்னும் நூலில் அமெரிக்காவில் நிலவி வந்த கருப்பினரின் அடிமைவாழ்வுபற்றி விளக்கமாக எழுதி இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. உங்கள் விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  3. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . முன்காலத்திலிருந்து நம் காலம்வரை வேறு வகை கொடுமைகள் தொடருகின்றன .

    ReplyDelete
  4. Replies
    1. வருக , வருக , உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  5. வருக , வருக ! உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி .

    ReplyDelete