Wednesday, 11 September 2019

குற்றப் பரம்பரைச் சட்டம்


நூல்களிலிருந்து – 24




(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவராகிய தா.பாண்டியன் “ஜீவாவும் நானும்” என்னுந் தலைப்பில் இயற்றிய நூல் 2015 இல் வெளிவந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி இது.)

குற்றப் பரம்பரைச் சட்டம்

  இந்தச் சட்டம் ஆங்கிலத்தில் சுருக்கமாக C.T.Act எனவும் Criminal Tribes Act விரிவாக எனவும் அழைக்கப்பட்டது. Criminal Tribes என்றால் குற்றம் புரிவதையே இயல்பாகக் கொண்ட பரம்பரையினர் என்று அர்த்தம். குற்றம் இழைப்பது அவர்களது குலக் குணம் என்று பட்டஞ் சூட்டினான் வெள்ளையன். செக்காணுராணி முதல் கூடலூர் வரையுள்ள பிரமலைக் கள்ளர்களுக்கு மட்டுந்தான் இந்தச் சட்டம் இடியாக விழுந்தது. சாதியின் பெயரே கள்ளர் என அமைந்துவிட்டதே! விடுவானா வெள்ளையன்? இவர்களை ஒடுக்கக் கடுமையான சட்டத்தைப் போட்டுவிட்டான்.

  மதுரை மாவட்டத்தில் பிறந்த பிரமலைக் கள்ளர் யாராக இருந்தாலும் 16 வயது முடிந்தவுடன் காவல் நிலையத்தில் கைவிரல்கள் அனைத்தின் ரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். பெயரும் ரேகையும் ஒரு பெரிய ரிஜிஸ்தரில் வைத்திருப்பார்கள்.

  மாலை 6 மணிக்கு மேல் எந்த நேரத்திலும், நள்ளிரவோ அதிகாலையோ, ஒரு அரிக்கேன் விளக்கோடு ஒரு ஏட்டும் ஒரு போலீசும் துப்பாக்கியுடன் வந்து விசிலடிப்பார்கள். ஆண்கள் பூராவும் திரண்டு வரிசையாகக் காலை மடக்கி உட்காரவேண்டும்.

  ரேகை பதித்த ரிஜிஸ்தர்படி பெயர்களைக் கூப்பிடுகையில், “ஆஜர் ஏட்டையா” எனச் சொல்லவேண்டும்.

  வெளியூர்க்குப் போவதானால் கிராம அதிகாரியிடம் அனுமதிச் சீட்டு எழுதி வாங்கிச் செல்லவேண்டும்; இது ராதாரிச் சீட்டு எனப்பட்டது; அனுமதிச் சீட்டுப் பெற்றுத்தான் திரும்பவேண்டும். இரண்டு அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டியிருந்தது. லஞ்ச ரேட் அரைக்கால் ரூபாய், அதாவது இப்போதைய 12 காசு. இந்தப் பணத்துக்கும் கோழியை விற்றுத்தான் சமாளிக்கவேண்டும்.

  ராதாரிச் சீட்டு இல்லாமல் எங்காவது காணப்பட்டால் சந்தேகக் கேஸ் போட்டு ஆறு மாதத் தண்டனை தருவார்கள்.

  பல தீய விளைவுகள் ஏற்பட்டன. போலீசின் வேட்டையால் விவசாய வேலை கெட்டு வறுமை வளர்ந்த்து. பொய் வழக்குகளால் கோர்ட்டுக்கு அலைந்து இருந்த சொற்ப நிலங்களையும் பலர் இழந்தனர். கிராம அதிகாரிகளாகப் பெரும்பாலும் வேறு சாதிக்காரர்கள்தான் இருந்தனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதும் தங்களது நிலத்தில் காசு தராமல் வேலை வாங்கியதும் பகைமையை வளர்த்துவிட்டது. இது பிரமலைக் கள்ளர்கள் பிற சாதியினர்மீது வெறுப்புக் கொள்ளக் காரணமாயிற்று.

  இன்னொரு தவற்றையும் வேண்டுமென்றே போலீஸ் செய்தது. சிலரைத் தண்டிப்பதற்காக ஊரில் உள்ள முக்கியமான ஓரிருவர் முதுகில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஏற்றிச் சுமக்க வைப்பார்கள். ஏற மறுப்பவர்களை அடிப்பார்கள்; ஏறினால் அடுத்த நாள் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. கள்ளர்கள் மகா ரோசக்காரர்கள். இவற்றை எதிர்த்துப் போராடிப் போலீசை வெட்டி வீழ்த்தியதும் உண்டு. ஊரையே வளைத்துப் போலீஸ் சுட்டபோது பெருங்காமநல்லூரில் 12 பேர் இறந்தனர்; கல் எறிந்தே பெரும் போலீஸ் படையைத் துரத்தியடித்தனர்.

  இந்த நிகழ்ச்சிகள் மாறாத பெரும் வடுவைப் பதித்துவிட்டன. தாழ்த்தப்பட்டோர் இயற்கையில் எதிரிகள் அல்லர்; சேர்ந்து வாழ வேண்டியவர்கள்; ஆனால் வெள்ளையர்க்கு ஏவல் புரிந்த காவல்துறை இந்தச் சட்ட அமலின்போது பகைமையை விதைத்துவிட்டது. அதன் விளைவுதான் தேவர் – தாழ்த்தப்பட்டோர் பகைமையாக இன்றும் நீடிப்பது.

  இந்தச் சட்டத்தை எதிர்த்து பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், முத்துராமலிங்கத் தேவர், கம்யூனிஸ்ட் தலைவர்களாகிய ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி முதலியோர் இயக்கம் நடத்தினர். மக்களிடம் பரப்புரை செய்ய சாலையே இல்லாத வயல்களிலும் வரப்புகளிலும் நடந்து சென்று கூட்டம் போட்டுப் பேசினார்கள்.

  கொடுமையான இந்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று 1937 தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. வென்று ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைந்தது. பல மாதங்களாகியும் சட்டம் ரத்து ஆகாமையால் தேவர் போராட்டம் தொடங்கிக் கைதானார்; காங்கிரஸ் ஆட்சியில் கைதான முதல் காங்கிரஸ் தலைவர் தேவர்தான்; அவரது விடுதலைக்காக ராமமூர்த்தியும் ஜீவாவும் தொடர்ந்து போராடினார்கள்.

  நாட்டுக்கு சுதந்தரம் கிடைத்த பின்பு சட்டம் காலாவதி ஆனது.

**************************
(படம் உதவி இணையம்)


4 comments:

  1. சட்டம்காலாவதி ஆனாலும்மனித ம்னம்மாறவில்லையே இன்னும் கள்ளர்களென்றே அழைக்கப்படுகிறார்கள் இல்லையா

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் . தாழ்த்தப்பட்டவர்கள் தங்களைத் தலித் என்று குறிப்பிடுவதுபோல இவர்களும் தங்கள் சாதிப் பெயரை மாற்றிக்கொள்ள சட்ட வழிமுறையை நாடவேண்டும் . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .

      Delete
  2. என்றும் மனிதம் வளர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. சரியான கருத்தைத் தெரிவித்தீர்கள் .மனிதம் வளர நம்மால் இயன்றதைச் செய்யவேண்டும் .பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete