Saturday 21 September 2019

ஏதேதோ – 3



1. தொட்ட பெட்ட என்பது கர்நாடகத்திலுள்ள ஒரு மலை: பெரிய மலை என்பது பொருள்.

2. திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்த வீரமாமுனிவர் காமத்துப்பாலை விட்டுவிட்டார்; தாம் துறவி ஆதலால் அதைப் புறக்கணித்தார்.

3. பார்வையற்றவர் யானை கண்ட கதை நமக்குத் தெரியும். அதை முதன் முதலில் கவிதையாய் இயற்றியவர் ஆங்கிலக் கவிஞர் John Godfrey Saxe (19 ஆம் நூ.) தலைப்பு: The blindmen and the elephant.

4. ஆவின் பால், தயிர், நெய், சாணி, சிறுநீர் ஆகிய ஐந்தன் கலவை வட மொழியில் பஞ்ச கவ்யம் எனவும் தமிழில் ஆனஞ்சு எனவுஞ் சொல்லப்படுகின்றன. (ஆன்+அஞ்சு)

சிவன்: “ஆனஞ்சு ஆடும் மெய்யன்
(அப்பர் தேவாரம் திருமுறை 6:10)

திருமால்: “ஆனின் மேய ஐந்தும் நீ
(திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தம் 94)

5. இதழகல் பா என்பது உதடுகள் அசையாமல் பாடக்கூடிய பாட்டு. வடமொழியில் நிரோட்டகம்.

திருக்குறளில் 489 மட்டுமே இதழகல் பா:
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.

வாய்விட்டு சொல்லிப் பாருங்கள். உதடுகளுக்கு வேலையே இல்லை!

6. சில ஆறுகளுக்கு ராசிகள் பொருத்தப்பட்டுள்ளன:

  கங்கைக்கு மேஷம், யமுனைக்குக் கடகம், காவேரிக்குத் துலா.

  குரு என்னுங் கோள் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு தங்கும். அது ஒரு ராசியை விட்டு அடுத்த ராசியில் நுழையும்போது (குருபெயர்ச்சி) இந்த ராசிக்குரிய ஆற்றில் குளித்தால் புண்ணியஞ் சேரும் என்பது நம்பிக்கை. அந்தக் குளியலுக்குப் பெயர் புஷ்கரம். மயிலாடுதுறைக் காவேரியில் துலா முழுக்கு (துலாஸ்நானம்) பேர் பெற்றது.

7. முதன்முதலாக உலகப் படத்தை (world map) வரைந்தவர் Gerardus Mercator என்ற டச்சுப் புவியலறிஞர் (1569 இல்). அதை Atlas க்குக் காணிக்கை ஆக்கினார்.

  கிரேக்கத் தலைமைக் கடவுளை எதிர்த்து Titans என்னுந் தேவர்கள் போரிட்டுத் தோற்றார்கள். Atlas ஒரு Titan. வானத்தைத் தோள்களில் சுமக்கும்படி அவனுக்கு Zeus தண்டனை வழங்கினார்; இக்கதை பிற்காலத்தில் சிறிது மாறி Atlas உலகத்தைச் சுமப்பதாய்க் கூறப்பட்டது. இதை மனத்திற் கொண்டுதான் Mercator தம் படத்துக்கு அப்பெயரைச் சூட்டினார். நாளடைவில் தேசப் படங்களின் தொகுப்பு atlas என அழைக்கப்படலாயிற்று.

8. கணபதியை முழுமுதற் கடவுளாய்க் கொண்ட மதம் காணாபத்யம். அது மகாராட்டிரத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது; அங்கிருந்து 7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்துள் நுழைந்தது.

  மராட்டியரின் நம்பிக்கைப்படி விநாயகரின் ஊர்தி மயில்; அவர்களது மொழியில் “மோர்”; ஆகவே பிள்ளையார்க்கு மோரேயா, மோரேஸ்வர், மயூரேஸ்வர் என்ற பெயர்கள் உண்டு. புனே நகருக்கு 60 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் புகழ் வாய்ந்த மோரேஸ்வர் கோயில் உள்ளது; அதனால் அவ்வூர் மோரேகான் எனப்படுகிறது.

  பிற்காலத்தில் தம்பிக்குத் தம் ஊர்தியை அண்ணன் அன்பளித்துவிட்டார்.

  புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சுதைச் சிற்பத்தில் பிள்ளையார் மயில் வாகனத்தில் காட்சி தருகிறார்.

9. நாட்டை அரசன் காக்காவிடில் என்னென்ன நேரும்?

  சட்டம் ஒழுங்கு சீர்குலையும், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்றாகி ஏழை எளியவர்கள் சொல்லொணாத் துன்பங்களிற் சிக்கி ஆற்றாது அழுது புலம்புவார்கள் என்று நாம் விடையளிப்போம்; ஆனால் பழங்காலத்துச் சிந்தனை வேறு.

“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.”
(குறள் 560)

  பசும்பாலின் உற்பத்தி குறையும்; பார்ப்பனர் மறையோதார். இவையே திருவள்ளுவர் காலத்துக் கவலை.

  ஆப்பால் இல்லாவிடில் எருமைப்பால் உண்டே? வேதம் ஓதாமையால் என்ன கெட்டுவிடப் போகிறது? என்றெல்லாம் நமக்குத் தோன்றும்.

  மறை யோதுவதால்தான் உலகம் நிலைபெற்றிருக்கிறது என்று முன்காலத்தார் நம்பியுள்ளனர்; அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கிற இக்காலத்திலும் யாகம் நடத்தினால் உலக அமைதி ஏற்படும் என்றெண்ணுவோர் இருக்கிறார்களே!

  வேதம் ஓதுகிறவர்களுக்குப் புனிதமான பசும்பால்தான் தேவை.

10. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.

என்னும் அடிகளை மேற்கோளாகக் காட்டி “உலகின் மூத்த குடி தமிழ்க்குடி” என ஆணித்தரமாக முழங்குவோர் உண்டு.

  அவை புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் இடம்பெற்றுள்ள ஒரு வெண்பாவின் ஈற்றடிகள்.

  நூலின் ஆசிரியர் பற்பல ஆய்வுகளைச் செய்து அந்த முடிவுக்கு வந்து அதை எடுத்துரைத்திருக்கிறாரா? இல்லையில்லை. அது ஓர் எடுத்துக்காட்டுச் செய்யுள் (example):

  போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு வீரன் தன் பகைவனை நோக்கித் தன் குடும்பப் பெருமையை இவ்வாறு சொல்கிறான். “நெடுங்காலத்துக்கு முன்பே என் குடும்பம் முதன் முதலாக வாள் போரிட்டு அனுபவப்பட்டது” என்கிறான். யாரிடம்? இன்னொரு தமிழனிடம். இருவருந் தமிழ்க் குடியே. செய்யுளில் மூத்த குடி என்பது ஒரு மறவனின் சொந்தக் குடியைக் குறிக்கிறது.

  இக்காலத்திலும் தகராறு செய்கிற இருவரில் ஒருவர் மற்றவரைப் பார்த்து “என்னை யார்னு நெனச்சே? என் தாத்தா தாசில்தார்; அப்பா காவல் ஆய்வாளர்; என் கிட்டே மோதினா அதோகதி ஆய்டுவே!” என்று எச்சரிக்கக் கேட்கிறோம் அல்லவா?

இதைக் "குடிநிலையுரைத்தல்” என்று இலக்கணங் கூறுகிறது.

இலக்கண விதி:
மண்டிணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறரறியும் குடியுரைத்தன்று.

பொருள்: ஞாலத்து – உலகில், தொன்மை – பழைமை, மறன் – வீரம், பிறரறியும் குடியுரைத்தன்று – பிறர்க்குத் தெரியும்படி எடுத்துக் கூறல்.

  இதற்கு எடுத்துக்காட்டாக அந்த அடிகள் வந்தன.

  இது போல எத்தனையோ விதமாகக் குடிப்பெருமை கூறலாம்.

&&&&&&&&&&


6 comments:

  1. ஒவ்வொரு விளக்கமும் சிறப்பு ஐயா...

    நன்றி... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி .

      Delete
  2. தொட்ட பெட்டா நீலகிரி மலையில் ஒரு சிகரம் கர்நாடகத்தில் அல்ல தெரியா த பலசெய்திகள் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நீலகிரி என்று தெரிவித்தமைக்கு மிகுந்த நன்றி ; ஒரு நூலில் கர்நாடகம் என எழுதியிருந்தது ; பின்னூட்டத்துக்கு நன்றி .

      Delete
  3. ஆனஞ்சு, துலாமுழுக்கு போன்றவற்றின் பெயர்க்காரணமும், அட்லஸ் பெயர்க்காரணமும் அறிந்தேன். குடிநிலையுரைத்தலுக்கான எடுத்துக்காட்டு பாடலை எப்படியெல்லாம் நம் வசதிக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்று அறிந்து வியப்பு.பலவும் இதுவரை அறிந்திராத தகவல்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    தொட்ட பெட்ட என்பதற்கு கன்னட மொழியில் பெரிய மலை என்பது சரியே. தமிழ்நாட்டிலிருக்கும் அதற்கு ஏன் கன்னடத்தில் பெயரிடப்பட்டுள்ளது என்பதுதான் புரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . தென் தமிழ் நாட்டில் 300 ஆண்டுக்காலம் கன்னடியர் (களப்பிரர்)ஆட்சி நடைபெற்றபோது பெயர் சூட்டல் நிகழ்ந்திருக்கலாம் . ஹொகனக்கல் , தாராபடவேடு முதலிய வேறு கன்னடப் பெயர்களும் தமிழகத்தில் உண்டு .

      Delete