Monday 4 November 2019

ஏதேதோ – 4



  1. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் அமெரிக்காவின் தென் மாநிலங்களில் நிலவிய இனப் பிரிவினை பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்ததை விட அதிக மோசமாய் இருந்தது. 1958 இல் மிசிசிப்பி பல்கலைக் கழகத்தில் படிக்க விண்ணப்பித்த ஒரு கருப்பு மாணவனான கிளெனன் வலுக்கட்டாயமாக ஒரு மனநல விடுதியில் சேர்க்கப்பட்டான். அந்தப் பல்கலைக் கழகத்தில் தனக்கு இடம் கிடைக்கும் என்று நினைத்த ஒரு கருப்பன் நிச்சயமாக ஒரு பைத்தியக்காரனாகத்தான் இருக்க வேண்டும் என வழக்கை விசாரித்த நீதிபதி தீர்ப்பு வழங்கினார்!

(நூல் : சேப்பியன்ஸ்; ஆசிரியர் யுவால் நோவா ஹராரி; தமிழில் நாகலட்சுமி சண்முகம். பக்.171)

  2. எதிலோ எப்போதோ வாசித்தவை:

  a) பெண் நல்லவளோ கெட்டவளோ மணந்துகொள்.
  நல்லவளாயின், உன் இல்லறம் இன்ப மயமாகத் திகழும்; கெட்டவளானால், நீ ஞானியாவாய்.

  b) மண வாழ்க்கை என்பது ஒரு விசித்திரமான வட்டம்.
  வெளியே இருப்பவர்கள் உள்ளே நுழையத் துடிக்கிறார்கள்; உள்ளிருப்பவர்களோ புறத்தில் வர வழி தெரியாமல் தவிக்கிறார்கள்.

  3. மதுரையை அடுத்துள்ள பசுமலையில் நாட்டில் சுதந்தரத்துக்காகப் பாடுபட்டு வந்த ஜார்ஜ் ஜோசப் என்ற பாரிஸ்டர் இருந்தார்; கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்; வசதியான குடும்பத்திற் பிறந்தவர்; ரோஜா நிறமாய் இருந்த அவரை மக்கள் ரோஜா தலைவர் என அழைத்தனராம். பிரமலைக் கள்ளர்கள் தங்கள் குழந்தைகட்கு ரோஜா எனப் பெயர் சூட்டுவது இன்றுவரை நீடிக்கிறது. இன்றைய சந்ததி ரோஜாப்பூ என நினைத்து அந்தப் பெயரை வைக்கிறது.

  காந்தியடிகள் மதுரை வந்தபோது அவரை சந்தித்து அவரது பணியைப் பாராட்டினார்; பின்னர் தாம் நடத்திய பத்திரிகைக்கு ஆசிரியராக இருக்க அவரை அழைத்துக்கொண்டு போய்விட்டார்.

  ஜார்ஜ் ஜோசப்புக்கு மதுரையில் ஒரு சிலை வைக்கப்பட்டுள்ளது; தூசி படிந்து அடையாளம் தெரியாமல் நிற்கிறது.

(நூல்: தா. பாண்டியன் இயற்றிய “ஜீவாவும் நானும்”. பக். 92-93)

 4. திருக்குறள் ஒரு சமண நூல் என்பது கல்விப் புலத்தில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகிற கருத்து. குறளின் ஒரு பகுதியை முதன்முதலில் மொழிபெயர்த்த E.W. எல்லீஸ் அது ஒரு சமண நூல் என்பதை உணர்ந்து வள்ளுவருக்கு ஒரு தங்க நாணயம் வெளியிட்டார். அவர் ஆங்கில அரசில் பணிபுரிந்து கொண்டிருந்ததால் இதைச் செய்ய முடிந்தது. அந்த நாணயத்தில் திருவள்ளுவர் முக்குடையுடன் ஒரு தீர்த்தங்கரர் போல் சித்திரிக்கப்படிருந்தார்.

  இந்த வாதத்துக்குத் திருக்குறளில் பல கோட்பாட்டுத் தடயங்கள் உள்ளன. முதல் அதிகாரத்தில் உள்ள பத்துக் குறள்களில், “பொறிவாயில் ஐந்தவித்தான்” போன்ற சொற்றொடர்களே சமண நூல் என்று நிறுவப்பட்ட மேருமந்திரப் புராணம் சீவக சிந்தாமணி முதலிய நூல்களில் பத்து வெவ்வேறு தீர்த்தங்கரர்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சமணச் சமயச் சடங்குகள் ஒழுங்குகள் பற்றிய குறிப்புகள் திருக்குறளில் ஆங்காங்கே விரவிக் கிடப்பதையும் காணலாம்; ஆனால் இந்தத் தடயங்கள் எல்லாமே அண்மையில் வந்த உரைகளில் கொச்சைப்படுத்தப்பட்டுவிட்டதுதான் அவலம்.

  தமிழகத்தில் யாருக்காவது பொழுது போகவில்லை என்றால் திருக்குறளுக்கு உரை எழுத ஆரம்பித்துவிடுகிறார்கள். எவ்வாறு பழந்தமிழகத்தில் சமண நூல்கள் வெள்ளத்தில் எறியப்பட்டும் தீக்கிரையாக்கப்பட்டும் அழிக்கப்பட்டனவோ அது போலவே உரை என்ற பெயரில் திருக்குறளில் பொதிந்திருந்திருக்கும் சமணக் கருத்துகள் இன்று அழிக்கப்படுகின்றன; புதுப்புது அர்த்தங்கள் கொடுக்கப்பட்டு மைய அடையாளம் சிதைக்கப்படுகிறது.

  திருக்குறள் போன்ற ஒரு நூலை ஆராயும்போது அது தோன்றிய கால கட்டத்தின் வரலாற்றுப் பின்னணியில், அன்றைய சிந்தனைச் சூழலில் வைத்துப் பார்த்தால்தான் அதில் பொதிந்திருக்கும் கோட்பாடுகள் உருத்துலங்க ஆரம்பிக்கும்; அன்றைய மக்களிடம் வேரூன்றி இருந்த சமயங்களின் சித்தாந்தங்கள் எவை எவை என்று கண்டு அவற்றின் அடிப்படையில் நூலை ஆராயவேண்டும்.

  மதராஸ் ராஜதானி கல்லூரியில் பேராசிரியராய்ப் பணியாற்றிய சக்ரவர்த்தி நயினார் (காண்க அவரது திருக்குறள் வழங்கும் செய்தி), பின்னர் ஜீவபந்து டி.எஸ். ஸ்ரீபால் (திருவள்ளுவர் வாழ்த்தும் ஆதிபகவன்) போன்ற பலர் இந்தப் பொருளை விளக்கி எழுதியிருக்கின்றனர். தஞ்சை சரசுவதி மகாலில் காகிதச் சுவடி வடிவில் இருந்த திருக்குறள் ஜைன உரை 1991 இல் பதிப்பிக்கப்பட்டுள்ளது; ஆனால் வேறு சில ஜைன உரைகள் (கவிராஜ பண்டிதர் உரை உட்பட) இருந்த சுவடு தெரியவில்லை.

(சு.தியடோர் பாஸ்கரன் இயற்றிய நூல்: கல்மேல் நடந்த காலம். பக். 7,8. ஆண்டு 2016)

7 comments:

  1. திருக்குறள் பற்றிய இன்றைய தகவல்கள், மனதை வேதனை அடைய செய்கின்றன ஐயா...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். உங்கள் பின்னூட்டத்திற்கு என் அகம் நிறை நன்றி.

      Delete
  2. அமெரிக்கா வாழ் கறுப்பர்கள் பற்றி படிக்க அன்கிள் டாம்ஸ் கேபின் பரிந்துரைக்கிறேன் வெகுஜனவிருப்பத்துக்கு மீறி ஏதாவது சொன்னால் விரும்பப்படுவதில்லை

    ReplyDelete
    Replies
    1. பரிந்துரைக்கு நன்றி. வாங்கி வாசிப்பேன்.

      Delete
  3. வலைச் சித்தரை வழிமொழிகின்றேன் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றி.

      Delete
  4. கறுப்பு மாணவனை மனநலவிடுதியில் சேர்த்தது அறிந்து அதிர்ச்சியடைந்தேன். அதைவிட அதிர்ச்சி நீதிபதியளித்த தீர்ப்பு. திருக்குறளுக்குப் புது உரை எழுதி மையக்கருத்தை அழிப்பது கண்டனத்துக்குரியது.

    ReplyDelete