Sunday 1 March 2020

ஊஞ்சல்




  
  எண்பது ஆண்டுக்கு முன்பு வரை திருமணத்தன்று மாலையில் ஊஞ்சல் என்றொரு நிகழ்ச்சி நடந்தது.

  இணையர் இருவரையும் ஊஞ்சலில் அமர்த்தி மாப்பிள்ளையைப் பழித்துக் கொழுந்தியும் பெண்ணைக் கிண்டலடித்து நாத்தியும் கேலிப் பாட்டுப் பாடக் குடும்பத்தாரும் உறவினரும் கேட்டு விமர்சித்துக் களித்தார்கள்.

  என் நினைவில் படிந்துள்ள சில அடிகள்:

அ) மாப்பிள்ளை சமர்த்தரடி
    சாப்பிடுவதில்
    மாப்பிள்ளை சமர்த்தரடி
    யானைமேல் ஏறென்றால்
    பானைமேல் ஏறுவார்.

ஆ) எலுமிச்சம்பழம் போல
    எங்க பொண்ணு அழகு
    எலி மூஞ்சி மாப்பிள்ளைக்கு

இ) மாமியார் வீடு போக
   எங்க அண்ணனுக்குப் பிடிக்காது
   மாமியார் வீடு போனால்
   மானங்கூடக் கெட்டுப் போகும்
   முதல் நாள் வாழையிலை
   ரெண்டாம் நாள் தையல் இலை
   மூணாம் நாள் கையிலே

ஈ) கோண மூஞ்சி மாப்பிள்ளைக்குக்
   கோட்டு சூட்டு வேணுமா
   சொர்ணத் தங்கம் போல ஒரு
   பொண்ணு கூட வேணுமா

  சிரித்து மகிழ்வதன்றிக் கோபம் யாருங் கொள்ளார். காரணம்: ஒண்ணுக்குள்ளே ஒண்ணு! அதாவது முறைப்பிள்ளைகள். சிறு வயதிலிருந்தே அடிக்கடி சந்தித்து அளவளாவிப் பரிகசித்து இன்புற்று வளர்ந்தவர்கள்.

  முறைப்பிள்ளை மணம் சிறிது சிறிதாய் வழக்கொழிந்தது.

&&&&&
(படம் உதவி இணையம்)

6 comments:

  1. முறை மாப்பிள்ளை திரு மணத்தில் சொத்து பத்துகுடும்பம் விட்டுப் போகாது இப்போதும் ஊஞ்சல் பாட்டுகளுண்டு கேட்டிருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. மெய்தான் . சொத்து வெளியில் போகாது . அவரவரின் குணம் குறை முன்னமே தெரியும் என்பதாலும் நெருங்கிய உறவு என்பதாலும் சண்டை சச்சரவுகளுக்கு அதிக வாய்ப்பில்லை . ஆனால் பிறக்கிற குழந்தைகள் மந்தமாகவோ உடற்குறையுடனோ இருக்குமாம் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  2. சில இடங்களில் ஊஞ்சல் உண்டு... பாடுவது கிடையாது...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  3. கிண்டலும் கேலியும் வாசிக்கச் சுவையாய் உள்ளன. வரிகளை நினைவில் வைத்திருப்பது வியப்புக்குரியது.

    ReplyDelete
    Replies
    1. மறந்து போனதே மிகுதி . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

      Delete