Monday 13 April 2020

பழங்காலச் செய்திகள் – 2




  எனக்கு வினாத் தெரியாக் காலத்திலிருந்தே இந்தியாவில் ரயில் பயணம் நடந்துகொண்டிருந்தது. காரைக்காலையும் மேற்கில் 25 கி.மீட்டர் தொலைவிலுள்ள பேரளத்தையும் இணைக்கிற தொடர்வண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு இரு தடவை மட்டும் வரும், போகும். மயிலாடுதுறைக்கோ திருவாரூர்க்கோ செல்பவர்கள் பேரளத்தில் ரயில் மாறுவார்கள்.

  மற்றபடி எல்லாரும் நடந்தே பயணித்தனர்.

  காரைக்காலிருந்து தெற்கே பத்துக் கி.மீ. தூரமுள்ள நாகூரில் ஆண்டவர் தர்கா பிரசித்தி பெற்றது; ஏராள இந்து பக்தர்கள் வியாழன் மாலையில் நடைப்பயணமாய்ப் போய் அங்குப் படுத்திருந்து வைகறையில் திரும்புவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்கள்.

  புண்ணியத் தலங்களைத் தரிசிக்கப் பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து பயணித்தனர்: அது பாத யாத்திரை எனப்பட்டது. ஒருவர்க் கொருவர் உதவிக் கொள்ளவும் வழிப்பறிக் கொள்ளையரை எதிர்த்து சமாளிக்கவும் கூட்டமாக இருப்பது அவசியம் அல்லவா? உரையாடியவாறும் பக்திப் பாக்களைப் பாடியபடியும் நடத்தலால் களைப்புத் தெரியாதென்பது கூடுதல் நன்மை.

  வழியில் உணவு அளிப்பதற்கு சத்திரங்களும் இரவில் பாதுகாப்பாய்த் தங்குவதற்கு சாவடிகளும் இலவச சேவை செய்தன. அவை யிருந்த இடங்கள் பின்னாளில் ஊர்ப் பெயர்களாய் மாறின: ஒட்டன் சத்திரம், அம்மாள் சத்திரம், சுங்குவார் சத்திரம், குயவன் சாவடி, மானம்பு சாவடி…

  விரைவூர்திகள் காலத்திலும் பாத யாத்திரைகள் தொடர்கின்றன. கஷ்டப்பட்டு வருகிற பக்தர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு பகவான் கண்திறப்பான் என்பது நம்பிக்கை.

  அந்தக் காலத்தில் மிதி வண்டிகளே அபூர்வம்; இரு வீலரோ அரிதினுமரிது. எப்போதாவது ஏதோவொரு புல்லட் வெளியூரிலிருந்து வந்து எங்கள் தெருவில் ஓடும். “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பது போலக் கிடுகிடுப் பேரொலி முன்னாடி முழங்கிவந்து வண்டியின் வருகைக்குக் கட்டியங்கூறும்; ஒலி கேட்டதுதான் தாமதம்: அனைவரும், கிடுகிடு மோட்டார்! கிடுகிடு மோட்டார்! எனக் கூவிக்கொண்டு வெளியில் ஓடிவந்து ஊர்தி விரைவதை அகன்ற விழிகளாற் கண்டு ஆனந்த முறுவர்.

  செல்வர்கள் இரட்டை மாட்டுவண்டி வைத்திருந்தார்கள். “மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார், மாட்டு வண்டியிலே” என்ற பாட்டுக் கேட்டிருப்பீர்கள்.

  அக்கம்பக்க ஊர்களுக்கு செல்லக் குதிரை வண்டிகள் அல்லது ஒற்றை மாட்டு வண்டிகள் அல்லது கை ரிக்ஷா வாடகைக்குக் கிடைத்தன.

  நெல் மூட்டைகளைப் பார வண்டிகள் ஏற்றிச் சென்றன.

  காரைக்காலையும் நாகூரையும் இணைத்த முதல் பேருந்த 1940 இல் தோன்றிற்று; ராமலிங்கம் என்பது பெயர்; ஒரே யொரு வண்டிதான். சில ஆண்டுகளில் பொறையாற்றைத் தலைமை யிடமாய்க் கொண்டு சத்திவிலாஸ் பஸ் சர்வீசை வீரப்பிள்ளை என்பவர் தொடங்கிப் பொறையாறு – நாகப்பட்டினம் (வழி காரைக்கால், நாகூர்), காரைக்கால் – கும்பகோணம் தடங்களில் வண்டிகளைக் காலக் கிரமப்படி ஓட்டினார். ராமலிங்கம் காணாமற் போனார்.

  தொடக்கக் காலங்களில் பயணிகள் அதிகமில்லாமையால் (வெளியூர்களில் ஜோலியில்லாக் காலம்!) நிறுத்தத்தை விட்டுக் கிளம்பிய பேருந்து சிறிது தொலைவுக் கொரு தடவை நிற்கும்; நடத்துநர் ஊர்ப் பெயர்களை உரத்துக் கூவிக் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்ப்பார். காலி யிருக்கைகளே மிகுதி என்ற நிலையில் விசிலூதுவார்!
&&&&&
(படம் உதவி இணையம்)

4 comments:

  1. செய்திகள் வியப்பையும் அளிக்கிறது ஐயா...

    ReplyDelete
  2. முன்பெல்லாம் ரயில்சேவை தனியாரிடம் தானே இருந்தது

    ReplyDelete
  3. அந்நாளைய போக்குவரத்து குறித்த தங்கள் அனுபவங்கள் ரசிக்கவைக்கின்றன. எங்கள் சிறுவயதிலும் பெரும்பாலானோர் சைக்கிள் மட்டுமே வைத்திருந்தார்கள். புல்லட் சத்தம் கேட்டால் இன்னார் போகிறார் என்று வீட்டுக்குள்ளிருந்தே பெரியவர்கள் சொல்வார்கள்.

    ReplyDelete
  4. இலவச உணவு அளிப்பது சத்திரம், தங்குமிடம் தருவது சாவடி - சத்திரம் சாவடி என்று கேள்விப்பட்டிருக்கிறேனேயொழிய இரண்டுக்கும் தனிப்பெயர் என்று இன்று தான் அறிந்து கொண்டேன். அவையே ஊர்ப்பெயர்களாக மாறின என்பதும் எனக்குப் புதுச்செய்தி. போக்குவரத்து குறித்த செய்திகளும் அறிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி. காரைக்காலில் சக்திவிலாஸ் பஸ் பெயர் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    ReplyDelete