Saturday 4 April 2020

பழங்காலச் செய்திகள் – 1



1. வரலாற்றுப் பாட நூலின் தொடக்கத்தில் ராமாயணமும் அதையடுத்து மகாபாரதமும் இடம்பெற்றிருந்தன.

2. பாடநூல்களின் பெயர்கள் யாவும் வடமொழியில் இருந்தன: சரித்திரம், பூகோளம், கணிதம், விஞ்ஞானம், ரசாயனம், பௌதிகம், வாசகம்.

தனித் தமிழ்ப் பரப்புரை வலிவடைந்த பின் அவை மாற்றப்பட்டன: வரலாறு, புவியியல், கணக்கு, அறிவியல், வேதியியல், இயற்பியல், பாட நூல்.

3. பள்ளியிறுதித் தேர்வு (SSLC) எழுதுவதற்கான தகுதியைப் பெற வேண்டுமானால் அதற்கு முன்னதாக வகுப்பில் நடத்தப்படும் ஒரு தேர்வில் மாணவர்கள் தேறவேண்டும் என்ற நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டது; தேர்வின் பெயர் selection. பிற்படுத்தப்பட்டவர்களையும் பிடிக்காதவர்களையும் முன்னேற வொட்டாமல் தடுத்து நிறுத்துவதற்கு அது பயன்பட்டது. நாடு விடுதலை பெற்ற பின்பு மாணவர்கள், “பன்னாடை முறை” என அதற்குப் பெயர் சூட்டி அதை எதிர்த்துப் போராடி ஒழித்தார்கள்.

4. மழை பெய்கையில் பலமாக இடி இடித்தால் எல்லாரும் “அர்ச்சுனா! அர்ச்சுனா!” என்று முணுமுணுப்பது வழக்கம். வானுலகில் அவனது தேர் ஓடுகிற ஒலிதான் அப்படிக் கேட்கிறதாம்! அவனது பேரை உச்சரித்தால் நம் தலை தப்பிக்கும்!

5. ஆண்களிற் பெரும்பாலோர் குடுமி வைத்திருந்தார்கள். “சோழியன் குடுமி சும்மா ஆடாது!” என்றொரு பழமொழி யுண்டு. சிலர் கொண்டை போட்டிருந்தார்கள். “கொண்டைக்கார சபாபதி” என்று ஒரு சண்டியர் இருந்தார். மனைவியோ மகளோ குடும்பத் தலைவரின் தலையில் அவ்வப்போது பேன் பார்க்க வேண்டியிருந்தது. திருமணத்தின்போது மாப்பிள்ளையின் கொண்டையிற் பூமாலை சுற்றி அலங்கரிப்பார்கள்.

  ஆண்கள் பூவும் பொட்டுமாய் வாழ்ந்த காலம்!

&&&&&

6 comments:

  1. 4. சில மூட நம்பிக்கைகள் பரவிய காலம்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ; இப்போதும் பற்பல மூட நம்பிக்கைகள் வாழ்கின்றன. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  2. என் அப்பாவின் தாத்தா குடுமி வைத்திருப்பதை போட்டோவில் பார்த்ததுண்டு. வித்தியாசமான சிகை அலங்காரம். அப்பளா குடுமி என்பார்கள்.

    ReplyDelete
  3. ஆமாம் ; குடுமி சங்க காலத்திலிருந்து தொடர்ந்த வழக்கம் . " பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி " - புறா நானூறு .உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  4. புற நானூறு எனத் திருத்திக்கொள்க.

    ReplyDelete
  5. ஆண்கள் பூவும் பொட்டுமாய் வாழ்ந்த காலம் - நகைச்சுவையைப் பெரிதும் ரசித்தேன். பெண்களுக்கு இருக்கிற வேலை போதாதென்று குடுமியைச் சீவி, பேன் பார்க்கும் வேலை வேறு. நல்ல வேளை, வெள்ளைக் காரர் வருகையால் கிராப் வந்தது.
    அப்போதிருந்த பன்னாடை முறை போன்று இப்போது 3, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வை நுழைக்க நினைக்கிறார்கள். இது நம் பிள்ளைகளை மேலே படிக்க விடாமல் வடிகட்டுவதற்கான சூழ்ச்சியே.

    ReplyDelete