Saturday, 14 April 2012

ஜூலியஸ் சீசர்




ரோம் வரலாற்றில் ஜூலியஸ் சீசருக்கு முக்கிய இடமுண்டு. 

அவர் மாவீரர் மட்டுமல்ல , எழுத்தாளருங்கூட . பிரான்சைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்ற அவர் , அதற்காகத் தாம்  நிகழ்த்திய போர்களை விவரித்து நூல் இயற்றியுள்ளார்;  அதன் தலைப்பு தே பெல்லோ கல்லிக்கோ (De Bello Gallico ) . 

உலகு முழுதும் பயன்படுகிற காலண்டரை உருவாக்கியவர் அவர்தான்;  12 மாதம் , 365 1/4 நாள் கொண்ட அது ஜூலியன்  காலண்டர் எனப்படுகிறது;  அதில் ஒரு மாதத்துக்குத் தமது பெயரை அவர் சூட்டினார்: அதுவே ஜூலை. 

4 ஆண்டுக்கு ஒரு லீப் ஆண்டு அதில் உண்டு.  

அந்தக் காலண்டர் நெடுங்காலத்துக்குப் பின்பு சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது  கிரிகோரியன் காலண்டர் என்றழைக்கப்படுகிறது. 

தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுப்பதற்குச் செய்யும் அறுவையை ஏன் சிசேரியன் என்கிறோம்? 

அவ்வாறு பிறந்த முதல் குழந்தை சீசர்தானாம் ; அதனால் அந்தப் பெயர். 

(Caesar - caesarian )


Tuesday, 10 April 2012

லத்தினின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்



(கொலோசியத்தில் காணப்படும் லத்தீன் கல்வெட்டு.
படம் உதவி : இணையம்)


பழங்காலத்திலேயே லத்தினுக்கு எழுத்து கிடைத்துவிட்டது. செய்யுள் இயற்றத் தேவையான அடி ஒன்றும் இருந்தது 

உரைநடையிலும் செய்யுளிலும் சிற் சில சிறு படைப்புகள் பிறந்தன; ஆனால் சொல்லிக்கொள்ளும்படியான சிறந்த இலக்கியம் உருவாகவில்லை. 

காரணம், ரோமானியர்க்குக் கற்பனை வளம் இல்லாமை. கிரேக்கரது தொடர்பு ஏற்பட்ட பின்பு அவர்களுடைய  இலக்கியங்களிலிருந்து உந்துதல் (Inspiration ) பெற்றுப் பலப்பல சொந்தப் படைப்புகளை எழுத்தாளர்கள் தோற்றுவித்தார்கள். 

அவற்றை அப்படியே மொழிபெயர்க்காமல் அல்லது தழுவாமல் ஒரு புது உத்தியைப் பயன்படுத்தினர். 

வெவ்வேறு மூலங்களிலிருந்து அங்கே கொஞ்சம் , இங்கே கொஞ்சம் என எடுத்து இணைத்துச் சொந்தச் சரக்கும் சேர்த்து  நூல் எழுதினர். பல்வேறு இலக்கிய வகைகள் அறிமுகமாகிச் சிறந்த புத்தகங்கள் வெளியாகி மொழிக்குச் செழுமை சேர்த்தன. 

முக்கிய படைப்பாளிகளைத் தெரிந்துகொள்வோமா? 

நாடகம்: என்னியுஸ்பிளவுத்துஸ். 

கவிதை: ஹொராசியுஸ்,  ஒவிதியுஸ். 

அங்கதக் கவிதை: யுவெனாலிஸ், லுசிலியுஸ். 

இதிகாசம்: வெர்ஜிலியுஸ். 

தத்துவம்: சிசரோ. 

வரலாறு: ஜூலியஸ் சீசர், சலுஸ்த்தியுஸ், தித்துஸ் லிவியுஸ். 

இலக்கணம்: வர்ரோ. 

ரோம் பேரரசு தென் ஐரோப்பா முழுதையும் அடிப்படுத்தியதால் பலவேறு மொழி பேசும் மக்களின் தொடர்பு ஏற்பட்டுப் பிறமொழி, சிறப்பாய் கிரேக்க மொழிச் சொற்கள் வரம்பின்றிக் கலந்து லத்தினின் தூய்மையைக் கெடுத்தன. சில எழுத்தாளர் இரு மொழியிலும் எழுதினர்வேறு சிலர், தாய்மொழியைப் புறக்கணித்துக் கிரேக்க மொழி மட்டும் பயன்படுத்தினர். 

இவ்வாறு லத்தின் சிறிது சிறிதாய்ப் புழக்கம் குறைந்து பின்பு மறைந்தே போயிற்று.

Thursday, 5 April 2012

நிபந்தனை




சில உடன்படிக்கைகளில் ஒரு மாத முன்னறிவிப்பு தரவேண்டும் என்னும் நிபந்தனை இடம் பெறுகிறது. 

இது ஆங்கில ஆட்சியால் தான் புகுத்தப்பட்டிருக்கும்; ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது வியப்பு தருகிறது. 

அசோக வனத்தில் சீதை தன்னிடம் விடை பெற்ற அனுமனிடம் கெடு விதித்தாள்:

இன்னும் ஒரு மாதம் காத்திருப்பேன்; அதற்குள் இராமன் வந்து என்னை மீட்காவிடில் உயிர் துறப்பேன் என அவனிடம் கூறு என்பது அவள் கட்டளை. 

" இன்னம் ஈண்டுஒரு திங்கள் இருப்பல்யான்
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் ......." 

( இன்னம் இங்கு ஒரு மாதம் இருப்பேன் நான். பின்பு உயிர் தரிக்கமாட்டேன்) 

கம்பர் - யுத்த காண்டம் - சூடாமணிப் படலம்.

Monday, 2 April 2012

தெள்ளாற்றுப் போர்கள்




வட இந்தியாவில் பானிப்பட் என்ற ஒரே இடத்தில் 3 போர்கள் நடந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.



தமிழகத்தில் அவ்வாறு ஓரிடத்தில் முப் போர் நிகழவில்லை ;  ஆனால் இரு போர் நிகழ்ந்துள்ளன.



அவை நடந்த இடம் தெள்ளாறு ; திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியின் அருகில் இருக்கிறது.



முதற் போர் :



854 இல் , மதுரையிலிருந்து படை எடுத்துவந்த பாண்டியன் சீமாற சீவல்லபனைப் பல்லவ மன்னன் நந்திவர்மன் iii தடுத்து நிறுத்திப் போரிட்டு வென்று துரத்தினான்.



இரண்டாம் போர் :



கோப்பெருஞ்சிங்கன் என்னும் சிற்றரசனிடம் 3 ஆம் ராசேந்திர சோழன் தோற்றுச் சிறைப்பட்டான். ( 1231 )



பல்லவர் குலத்தில் பிறந்த ஏழிசை மோகன் காடவராயன் என்பவன் இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சியில் ( 1133 - 1150 ) காவல் அதிகாரியாய்ப் பணி ஆற்றினான். தன் வலிமையைப் படிப் படியாய்ப் பெருக்கிக்கொண்டு நாளடைவில் சிற்றரசன் ஆகிவிட்டான்.



அவனது வமிசத்தில் தோன்றிய கோப்பெருஞ்சிங்கன் ( 1229 - 1278 ) சேந்தமங்கலத்திலிருந்து ( கடலூர் மாவட்டம் ) ஆட்சி புரிந்தான் . இவன் தன் படையுடன் வந்து போரிட்டு 3ஆம் ராசராச சோழனை வென்று சிறைசெய்தான்.



செய்தி அறிந்த ராசராசனின் நண்பனும் கன்னட ஓய்சல நாட்டு மன்னனும் ஆகிய வீரநரசிம்மன் அனுப்பிய சேனை சேந்தமங்கலத்தை முற்றுகையிட முற்பட்டபோது கோப்பெருஞ்சிங்கன் சோழனை விடுவித்துவிட்டான்.



இவை தெள்ளாற்றுப் போர்கள் எனப்படுகின்றன.