Wednesday, 25 July 2012

என் ஊர் காரைக்கால் (தொடர்ச்சி)

காரைக்காலில் 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் காரைக்காலம்மையார். அவர் திருவந்தாதி, இரட்டை மணி மாலை, திருவாலங்காட்டுத் திருப்பதிகம் என்ற மூன்று செய்யுள் நூல்களை இயற்றுமளவுக்குத் தமிழ்ப் புலமை உடையவர். அவரது கதையைப் பெரியபுராணம் விவரிக்கிறது. அதன்படி  அவரது வரலாறு மாங்கனித் திருவிழா என்னும் பெயரில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

ஆனிப் பௌர்ணமியன்று முற்பகலில் அம்மையார்க்குத் திருமணம் நிகழ்ந்து இரவில் முத்துப் பல்லக்கில் மணமக்கள் ஊர்வலம் செல்வார்கள். மறு நாள் விழாதான் முக்கியமானது; அன்று மதியம் பரமசிவன் யாசகர் கோலத்தில் (பிச்சையாண்டவர் என்று பெயர்) அம்மையாரின் இல்லத்துக்கு உணவுண்ணப் போவார். சாமியைச் சூழ்ந்து தெருவை அடைத்துக்கொண்டு, நகரும் பக்தர் கூட்டத்தை நோக்கி, சிற்சில மாடிகளிலிருந்து மாங்கனிகள் வீசப்படும்; பழத்தைத் தாவிப் பிடிக்க முடிந்தவர்கள் பரவசத்துடன் தின்பார்கள். இரு வாரத்துக்குப் பின் விழா முடியும். 

முஸ்லிம்களுக்கு முக்கிய விழா காரைக்கால் மஸ்தான் சாஹிப் தர்காவின் கந்தூரி. முதல் நாள் மாலை கண்ணாடித் தேர் ஊர்வலமும் பத்தாம் நாளிரவு சந்தனக் கூடு ஊர்வலமும் நடைபெறும். இந்த விழாவின் தேதிகள் ஆண்டுதோறும் மாறும்; பல ஆண்டுக்கொரு முறை இதுவும் ஆனி மாதத்தில் நடக்கும் . இப்போது அப்படித் தான் கந்துரி 30 / 6 இலும் மாங்கனி விழா 2 /7 இலும் தொடங்கி நிகழ்ந்தன. 

சுதந்தர விழா கொண்டாட்டத்துக்கு இரண்டு நாள் விடுமுறை கிடைக்கிறது: 

ஆகஸ்ட் 15 : இந்திய விடுதலை;

ஆகஸ்ட் 16 : பிரஞ்சியரிடமிருந்து விடுமுறை. 

1962 இல் பிரஞ்சுக்காரர் வெளியேறியபோது, விருப்பம் உள்ளவர் பிரஞ்சுக் குடியுரிமை பெறலாம் என்று வாய்ப்புத் தரப்பட்டது ; அதன்படி , பொதுமக்களுள் ஒரு பகுதியினரும் பிரஞ்சு ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருந்த முன்னாள் பட்டாளத்தாரும், முன்னாள் அரசு அலுவலர்களுமாகச் சுமார் 500 காரைக்கால்வாசிகள் பிரஞ்சுக் குடிகளானார்கள். இவர்களும் சந்ததியினரும் 

1 - இந்திய அரசியலில் ஈடுபடக்கூடாது; 

2 - நம் நாட்டு அரசு அலுவல்குடும்ப அட்டை, அரசு சலுகைகள் பெற இயலாது.  

மற்றெல்லா உரிமைகளும் உண்டு: நிரந்தரமாய் வசிக்கலாம், வாணிகமும் தொழிலும் செய்யலாம், சொத்துகள் வாங்கலாம், விற்கலாம். 

இவர்களின் பிள்ளைகள் கல்வி கற்கக் காரைக்காலில் ஒரு பிரஞ்சு இடைநிலைப் பள்ளி நடத்தப்படுகிறது. மேல் கல்விக்குப் புதுச்சேரி போகவேண்டும். வேலை வாய்ப்புகளைப் பிரான்சில் தேடவேண்டும். 

பிரான்சில் நடைபெறும் தேர்தல்களில் இவர்கள் வாக்களிக்கக் காரைக்காலில் ஒரு வாக்குச்சாவடியைப் பிரான்சு அரசு அமைக்கும். 

காரைக்காலின் கல்வி வளர்ச்சியில் பிரஞ்சு ஆட்சி அக்கறை செலுத்தவில்லை. பிரஞ்சு ஒன்றே பயிற்றுமொழி; ஏழாம் வகுப்புவரை நாள்தோறும் ஒரு பாடவேளை மட்டும் தமிழ்  கற்பித்தார்கள்; அதற்குமேல் பிரஞ்சு மாத்திரமே. உயர்நிலைக்குப் பின்பு படிக்கப் புதுச்சேரி போகவேண்டும். அங்குக் கல்லுரி இருந்தது; ஆனால் விடுதி (ஆஸ்டல்) இன்மையால் உறவினர் இருப்பின் அவர்கள் இல்லத்தில் தங்கிப் பயிலலாம். எத்தனை பேருக்கு இந்த வசதி இருக்கும்? ஆகவே உயர்கல்வி கற்ற காரைக்கால்வாசிகள் கொஞ்சம் பேர்தான் இருந்தனர்.  

இந்தியாவுடன் இணைந்த பின்பு , மகளிர் கலைக் கல்லூரி, ஆடவர் கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி , மருத்துவக் கல்லூரி, வேளாண் கல்லூரி எனக் கல்விக்கூடங்கள் பெருகியுள்ளன; ஆனால் மற்ற துறைகளில் சொல்லிக்கொள்ளும்படியான வளர்ச்சி இல்லை. மத்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் தனி யூனியன் பகுதியாக ஆகிவிட்டால்தான் வளர்ச்சி சாத்தியம் என்றெண்ணி அந்தக் கோரிக்கையைக் காரைக்கால் மக்கள் சில ஆண்டுகளாக எழுப்பிவருகிறார்கள்; போராட்டக் குழு ஒன்று அமைத்துப் பலவித நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள். 

24 ஆண்டுகள் (கால் நூற்றாண்டு) பறந்துவிட்டன என் ஊரைவிட்டு நான் நீங்கி. இறுதியாய் 2003 இல் சென்றிருந்தேன்: எங்கள் வீதி கடை தெருவாகியுள்ளது; எங்கள் வீடு உட்படப் பெரும்பாலான வீடுகள் இடிக்கப்பட்டுப் புத்துருவம் பெற்றுக் கடைகளாகவும் கிடங்குகளாகவும் பயன்படுகின்றன. 

நண்பர்கள், சக ஆசிரியர்கள், உறவினர்களுள் என் வயது உடையோர் ஆகியவர்களுள் கிட்டத்தட்ட யாரும் உயிரோடில்லை. 

காட்சி மாறிக் கலந்து பழகியோரும் காலமாகிவிட சோகத்தைச் சுமந்து ஊர் திரும்பினேன். 

குறிப்பு - விடுகதையின் விடை : குன்றிமணி (குண்டுமணி)

(படம் உதவி: இணையம்)

3 comments:

 1. அடடா! நான் பிறக்குமுன் பாரிசில் இருந்துள்ளீர்கள்.
  எங்கள் ஈழத்திலும் யாழ் நல்லூர்க் கந்தசாமி கோவிலில்
  மாம்பழத் திருவிழா என ஒன்று உண்டு.
  அது முருகன் மாம்பழத்துக்கு உலகைச் சுற்றிய புராண
  க் கதையை ஒட்டியது.
  காரைக்காலென்ன எல்லா ஊருமே நிறைய மாற்றத்தை
  உள்வாங்கியுள்ளது.

  ReplyDelete
 2. அறியாத பல சிறப்பான தகவல்கள். வாழ்த்துக்கள்

  நன்றி சார். (த.ம. 1)

  ReplyDelete
 3. 2014 ஆம் ஆண்டிலிருந்து ஆகஸ்ட் 16 க்குப் பதிலாக நவம்பர் 1 ஆம் தேதி விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்திருக்கிறது.

  ReplyDelete