Saturday, 21 July 2012

என் ஊர் காரைக்கால் (1)
வங்கக் கடலுடன் அரசலாறு கலக்குமிடத்தில் அமைந்துள்ள சிறு நகரமாகிய காரைக்கால் நான் பிறந்து வளர்ந்து கல்வி கற்று அரசு பணியாற்றி ஓய்வு பெற்ற ஊர். சுமார் ஒரு இலட்சம் மக்கள் தொகை உடைய இதன் எல்லைகள்: கிழக்கே கடல், மேற்கில் வாஞ்சியாறு, தெற்கே அரசலாறு, வடக்கில் கோயில்பத்து என்னும் சிற்றூர். தெற்கு வடக்காக 2 1/2 கி. மீ. அகலமும் கிழக்கு மேற்காக 3 1/2 கி. மீ. நீளமும் கொண்ட காரைக்காலும் இதை முப்புறமும் சூழ்ந்துள்ள பகுதிகளும் சேர்ந்த 160 ச. கி. மீ. பரப்பானது புதுச்சேரி மானிலத்தின் ஒரு மாவட்டமாக விளங்குகிறது. 

இந்த மாவட்டத்தின் வடக்கே தரங்கம்பாடியும், தெற்கில் முஸ்லிம்களின் புனிதத் தலமான நாகூரும் இருக்கின்றன; நாகூருக்கும் அதற்குச் சற்றுத் தெற்கிலுள்ள நாகப்பட்டினத்துக்கும் இடையே உள்ள காடம்பாடி மறைமலையடிகளை ஈன்ற பெருமையுடையது. 

( காரைக்கால் மாவட்டம் புதுச்சேரிக்குத் தெற்கில் 150 கி. மீ. தொலைவில் இருக்கிறது என்பதும் இடைப்பட்ட பிரதேசம் தமிழகத்தைச் சேர்ந்தது என்பதும் குறிப்பிடற்குரியது) 

புதுச்சேரியில் போன்றே காரைக்கால் தெருக்கள் கோணல்மாணல் இன்றி, நூல் பிடித்தாற்போல் நேர்நேராய் அமைந்து எழிற்கோலம் காட்டுவதால், "காரைக்கால் வீதியழகு" என வெளியூர்க்காரர்களால் புகழப்படுகிறது "காரைக்கால் கருப்பு, சென்னைப்பட்டினம் சிவப்பு" என்று விடுகதையிலும் என் ஊர் இடம்பெற்றுள்ளது. இதன் விடை உங்களுக்குத் தெரியுமா? (இறுதியில் சொல்வேன் ) 

என் ஊரின் சிறப்பு மூன்று மத மக்களும் பெரிய எண்ணிக்கையில் கலந்து ஒற்றுமையாய் வாழ்வது: கைலாசநாதர் கோயில் தெரு, பெரமசாமி பிள்ளை தெரு, சின்னக்கண்ணு செட்டித் தெரு, மெய்தீன் பள்ளி வீதி, மாமாத்தம்பி மரைக்காயர் தெரு, காதர் சுல்தான் வீதி, மாதாகோயில் தெரு, தோமாஸ் அருள் வீதி, தாவீது பிள்ளை தெரு எனத் தெருப் பெயர்களில் மும்மத மணம் கமழ்வதை உணரலாம்.

பெரும்பாலான இந்துக்கள் வேளாளர்கள்; சோழ நாட்டுக்காரர் ஆகையால் சோழிய வேளாளர் எனப்படுகின்றனர். இவர்களின் சாதிப் பட்டம் பிள்ளை (இச் சொல்லுக்குப் பலசாலி என்று பொருளுண்டு ) 

முஸ்லிம்கள் மரைக்காயர் எனப்படுதற்குக் காரணம் ஒரு காலத்தில் மரக்கலம் செலுத்தி வாணிகம் செய்தமை. இவர்கள் ஊனுணவு விரும்பிகள். திருமணம் முதலிய இன்ப நிகழ்ச்சியானாலும் சாவு முதலான துக்க நிகழ்வு ஆனாலும் ஆட்டுக் கறி பிரியாணி பரிமாறப்படும். முஸ்லிம் மாதர்கள் உடல் முழுதும் வெள்ளைத் துப்பட்டாவால் போர்த்துக்கொண்டுதான் வெளி இடங்களுக்கு வருவார்கள். முஸ்லிம் தமிழ் சிறிது வேறுபடும். அப்பா - வாப்பா; அம்மா - உம்மா; அக்கா - லாத்தா; அண்ணன் - நானா; கொழம்பு - ஆணம்; நின்னான் - நிண்டான்; எழுதுனான் - எளுவினான்; வாங்கித் தா - வேங்கித் தா; அவங்க சொன்னாங்க - அக சொன்னாக. 

தமிழகத்தில் பார்ப்பன ஆதிக்கம் நிலவியது போலக் காரைக்காலில் கிறித்துவ ஆதிக்கம் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்தது. இந்துக்கள் உழவில் ஈடுபட, முஸ்லிம்கள் திரவியம் தேடுவதற்குத் திரைகடல் ஓட, கிறித்துவர்கள் கல்வி கற்று, வேலை வாய்ப்புகளும் பட்டம் பதவிகளும் அரசியல் தலைமையும் போட்டி இல்லாமல் பெற்று உயர்ந்தார்கள். இவர்களும் ஆட்சி புரிந்த வெள்ளையரும் ஒரே மதம் என்பதும் ஏற்றத்துக்கு உதவியது. 

மும்மதத்தாரையும் பற்றி என் ஊரில் வழங்கும் ஒரு கருத்து: "முஸ்லிம் உண்டு கெட்டார், கிறித்துவர் உடுத்துக் கெட்டார், இந்து வைத்துக் கெட்டார்."

( தொடரும் )

9 comments:

 1. காரைக்கால் எனக்குப் பிடித்த மற்றுமொரு ஊர் !!! நல்ல தகவல்கள் தொடருங்கள் ஐயா !

  ReplyDelete
  Replies
  1. உங்களின் பாராட்டுரைக்கு மிக்க நன்றி .

   Delete
 2. காரைக்கால் பற்றி இதுவரை அறியாத பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடிந்தது உங்கள் பதிவால். மிகவும் நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பாராட்டியதற்கு மிக்க நன்றி .

   Delete
 3. காரைக்காலென்றதும்- இளமையில் படித்த காரைக்கால் அம்மையாரே நினைவு வருவார். பிரான்சு வந்தபின்பே இவர்கள் ஆதிக்கத்தில் இருந்த செய்தி தெரியவந்தது.பிரபஞ்சன் அவர் நாவலொன்றில் புதுச்சேரியுடன் காரைக்கால் பற்றியும் குறிப்பிடுகிறார்.
  உங்கள் தகவல்களும் சுவையாகவுள்ளன.

  ReplyDelete
  Replies
  1. கட்டுரையைச் சுவைத்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி . நான் பாரிசில் 1949 முதல் 1952 வரை , 5 ஆம் வார்டில் வசித்தேன் .

   Delete
 4. காரைக்கால்க்காரருக்கு வணக்கம்,

  ReplyDelete
 5. காரைக்கால்-பற்றி முழுமையாக தெரிந்து கொண்டேன்... நன்றி சார்...
  உங்கள் தளத்திற்கு முதல் வருகை என்று நினைக்கிறேன்...
  இனி உங்களின் அடுத்த பதிவை தொடர்கிறேன்... நன்றி

  ReplyDelete