Monday, 30 July 2012

இறையனும் இறைவனும்
காதலியின் எழிலைக் காதலன் மிகையாகப் பாராட்டுவது உயர்வு நவிற்சி அணியின்பாற்படும். தமிழில் மட்டுமல்ல, பிற மொழிகளிலும் இவ்வழக்கம் உண்டு.


சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா
சூரிய சந்திரரோ? 


என்று பாரதியார் அவளுடைய ஒளி படைத்த கண்களைச் சூரிய சந்திரருடன் ஒப்பிட்டு வியந்து புகழ்ந்தார்.


பிரெஞ்சுத் தலைவன் தன் மனங்கவர்ந்தாளின் நயனங்கள் விண்ணில் ஒளிரும் வெள்ளியைவிடப் பிரகாசமானவை என உறுதிபட மொழிந்தான்.


"அந்திவெள்ளிக் கோளினும் அவள்விழிகள் மிகச்சுடரும்"


பால்கனியில் ஜூலியட்டின் முகந்தெரிந்ததும் ஆங்கிலக் காதலன்,


"எந்த ஒளி அந்தச் சன்னல்வழி பாய்கிறது?
அது கிழக்கு. ஜூலியட் சூரியன்" 

எனப் போற்றினான்.


சங்ககாலக் காதலன் தன் விருப்புக்குரியாளின் கூந்தல் எவ்வளவு அதிகமான மணங்கமழும் மலரையும் மிஞ்சக்கூடிய வாசனையை வீசுவது என்று புகழ விழைந்தான். அதை எவ்வாறு நயம்பட உரைப்பது என்று யோசித்தான். தானே சொன்னால் மதிப்பு இருக்குமா? நடுநிலையாளர் ஒருவர் கூறினால் உலகம் ஏற்கும். யாரிடங் கேட்கலாம்? 

பளிச்செனப் புலப்பட்டது ஓர் உண்மை. பூ மணத்தைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கக் கூடியது வண்டைக் காட்டிலும் வேறெதுவும் இல்லை என்ற உண்மைதான் அது. 

மதுவை (ஒயினை)க் கண்ணால் நோக்கியும் மோந்து பார்த்தும் நாவில் ஊற்றிச் சுவைத்தும் அதன் நிறம், தரம், சுவை ஆகியவற்றை நிர்ணயிக்கும் வல்லுநர்கள் மேலைநாடுகளில் உண்டு. அவர்கள் சரி(ஓ.கே.) சொன்ன பின்புதான் உயர்வான சரக்கு விற்பனைக்கு வரும். அவர்களைப் போல மலர்களின் நறுமணத் தராதரத்தைச் சீர்தூக்கிப் பார்த்துக் கருத்து சொல்லவல்ல நிபுணர் வண்டு. அதன் தீர்ப்புக்கு அப்பீல் இல்லை.


ஆகவே வண்டிடங் கேட்டுவிட வேண்டியதுதான். ஆனால் எந்த வண்டிடம்? 

இதோ, ஒன்று அவளின் குழலில் மொய்த்துவிட்டுப் பூவை நாடிப் பறந்து வருகிறது. இரண்டையும் ஒப்பிட்டுச் சொல்லத் தகுதி வாய்ந்த நீதிபதி இதுவே.  

கேட்டுவிட்டான். 

பூந்தாதைத் தேர்ந்து உண்பதையே வாழ்க்கையாகக் கொண்டுள்ள வண்டே, எனக்காகச் செப்பாமல் நீ அனுபவத்திற் கண்டதை மொழி. நெடுநாள் பழகிய நட்பும் மயில் சாயலும் செறிவான பல்வரிசையும் உடைய என் தலைவியின் கூந்தலைப் பார்க்கிலும் அதிக நறுமணங் கொண்ட பூக்களும் உண்டோ, நீ அறிந்தவரைக்கும்?


(இல்லையென வண்டு விடையிறுத்ததாய்க் கொள்ளல் இலக்கிய இன்பத்துக்கேற்றது.) 

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ.
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே?


இது சங்க நூலான குறுந்தொகையில் உள்ள பாட்டு. இயற்றியவர் இறையன் (மரியாதை ஆர் சேர்த்தால் இறையனார்.) 

இறையனும், இறைவனும் வெவ்வேறு. தலையனும் தலைவனும் ஒன்றா?


தலையன் - தலையை உடையவன் (மொட்டைத் தலையன்)

தலைவன் - வழி நடத்துபவன்.....


அதுபோல,
இறைவன் - கடவுள்

இறையன் - மனிதர் பெயர் (செழியன், செம்பியன், பாண்டியன் போல)


ஒரு புலவர் எழுதியதைக் கடவுள் எழுதியதாய் யாரோ ஒருவர் கற்பனை செய்து கட்டிய கதைதான் தருமி கதை. 

8 ஆம் நுற்றாண்டிலும் ஓர் இறையன் வாழ்ந்தார். அவரது இலக்கண நூல் "இறையனார் களவியல்" என்று அவர் பெயரால் சுட்டப்படுகிறது. (பட்டினத்தார் பாடல் என்பது போல) 

இந்த இறையனையும் அந்தக் கற்பனையாளர் ஒதுக்கித் தள்ளிக் களவியலை இறைவன் இயற்றியதாய்க் கதை விட்டார். தன் செயல் கடவுளுக்குக் கெட்ட பெயர் உண்டாக்குமே என்று அவர் சிறிதும் யோசிக்கவில்லை. 

களவியலில் பல நூற்பாக்கள், ஓர் எழுத்துக் கூட மாறாமல் தொல்காப்பியத்திலிருந்து எடுத்துச் சேர்க்கப் பட்டுள்ளன. முன்னோர் சொன்னதைப் பொன்னே போல் போற்றிப் பின்னோர் தம் நூலில் சேர்ப்பது முற்கால வழக்கந்தான். மனிதர்க்குப் பொருந்துகிற இது கடவுளுக்குப் பொருந்துமோ? 

இறைவன் தொல்காப்பியரைக் காப்பியடித்தான் என்றல்லவா ஆகிவிட்டது?

2 comments:

 1. ஒன்றன்பின் ஒன்றாக கேள்வி எழுப்பி, விளக்கமாக பதில் எழுதியதை ரசித்தேன்... அருமை.
  நன்றி சார்.
  (த.ம. 1)

  பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

  ReplyDelete
  Replies
  1. என் எழுத்தை வாசித்து , ரசித்து விமர்சனம் செய்தமைக்கு மிக்க நன்றி .

   Delete