Monday, 9 July 2012

மனசாட்சி
மனம் என்று ஒன்று இருக்கிறதா? அது இதயத்திலா வசிக்கிறது? 

இரு வினாக்களுக்கும் ஆம் என்றே எல்லாரும் விடை சொல்வார்கள். இத்தனைக்கும் இதயம் ஒரு பம்ப் மட்டும் தான். 

சிந்தனை-எண்ணம்-கருத்து முதலியவை மூளையில் உதிப்பது போன்றே மனதில் தோன்றுவதாக நாம் நம்பும் அன்பு-அருள்-இரக்கம் முதலான பண்புகளும் மூளையில் தான் பிறக்கின்றன. ஆயினும் மனம் தனியாக உண்டு எனக் கொள்கிறோம். மனசாட்சி என்றும் ஒன்று இருப்பதாக நினைக்கிறோம். 

பிற்கால வழக்காகிய இந்தச் சொல்லுக்குப் பதிலாகப் பழைய இலக்கியங்கள் நெஞ்சுஎன்பதைப் பயன்படுத்துகின்றன. 

தன் நெஞ்சு அறிவது பொய்யற்க; பொய்த்த பின் தன் நெஞ்சே தன்னைச் சுடும்,’ என்ற குறளின் இரண்டாம் அடிக்குப் பொருள் மனசாட்சியே தன்னை வருத்தும்என்பதாம். இதிலிருந்து நம் முன்னோர்க்கு மனமும் மனசாட்சியும் ஒன்று தான் என்பதை அறிகிறோம்.

ஒருவன் நல்லது செய்யும் போது அமைதி காப்பதும் தீயது செய்ய முயலுகையில் தடுப்பதும் மனசாட்சியின் வேலை என்பது பொதுவான கருத்து.  

மனசாட்சி எப்போது எவ்வாறு உண்டாகிறது? சிறு குழந்தைகளுக்கு அது இருக்க முடியாது. அதனால் தான் அவை மேவன செய்தொழுகின்றன”. பெற்றோர்- உடன்பிறந்தோர்-பாட்டி-தாத்தா ஆகியோரின் அவ்வப்போதைய அறிவுரைகள் குழந்தையின் மூளையில் பதிந்து சிறிது சிறிதாய் மனசாட்சியை உருவாக்கும். கூடி விளையாட வேண்டும். யாரையும் அடிக்கக் கூடாது. மெய் பேச வேண்டும்என்றெல்லாம் பல நெறிமுறைகள் மனசாட்சியில் இடம் பிடிக்கின்றன. 

வயது ஏற ஏறக் கல்வியும் கேள்வியும் பட்டறிவும் புதுப் புதுக் கருத்துக்களை மனசாட்சியில் பதிகின்றன; முந்தைய பதிவுகள் சிலவற்றை நீக்கவும் செய்கின்றன. நல்ல சூழ்நிலையில் வளர வாய்ப்பற்ற குழந்தைகளின் மனசாட்சி தகாத கருத்துக்களைப் பொதிந்து வைக்கும். 

அவரவர் வளர்ந்த, வளர்கிற சூழ்நிலை மட்டுமின்றி கிடைத்த சகவாசம், வாழ்க்கைத் தேவை என்பவற்றுக்கு ஏற்பவும் மனசாட்சியின் இயல்பு ஆளுக்காள் வேறுபடும். சில நேரம் மாறுபடும். அதாவது ஒருவரின் மனசாட்சிக்கு அநியாயமாகத் தெரிவதை, வேறொருவரின் மனசாட்சி நியாயப்படுத்தக்கூடும். 

எல்லாருடைய மனசாட்சியும் ஒரே குரலில் பேசுவதில்லை. ஒரே தீர்ப்பு வழங்குவதில்லை என்பதை எடுத்துக்காட்டு ஒன்றால் விளக்கலாம். ஐம்பெரும் பாதகங்களுள் மிக மிகக் கொடியது கொலை என்பதை மறுப்பவர் யாரும் இருக்க மாட்டார். ஆனால் நடைமுறை என்ன? 

கோயில்களில் விலங்குகளைப் பலிகொடுத்து விழாக் கொண்டாடும் வழக்கம் பரவலாக இருக்கிறது. வெட்டுகிற பூசாரிகளோ, சுற்றி நிற்கிற பக்தர்களோ சிறிதும் பதறுவதில்லை. புலால் உண்பவர்கள் தாங்களே கோழிகளை அறுக்கும் போதும், ஆடுகளை வெட்டும் போதும் பிறர் அறுக்க, வெட்டப் பார்க்கும் போதும் அவர்களது மனசாட்சி செயல்படாது. மீன் கொன்று விற்றுப் பிழைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தொழிலாளர்களின் மனசாட்சி கொல்லாமையைப் போதிக்குமா? பொழுதுபோக்குக்காக வேட்டையாடியும் தூண்டில் போட்டும் களிப்பவர்களின் மனசாட்சி, அந்தச் செயல்களைக் கண்டிப்பதில்லை. 

விலங்குக் கொலை விடுத்து மனிதக் கொலைக்குப் போவோம்: 

கொலைவெறிக்கு ஆட்படும் மனநோயாளிகளை விடுவோம். அதிகம் பேரைக் கொன்ற பட்டாளத்தார் விருது பெற்றுப் பெருமிதத்தால் பூரிக்கிறார். கொலையே அவர்களின் கடமையாதலின் விட்டுவிடுவோம். 

ஜாலியன்வாலிபாக்கில் அமைதியாய்க் கூடியிருந்த ஏராளமான பொதுமக்களைக் கொன்று குவித்தான் ஓர் ஆங்கிலேயன்; முழு இனத்தையுஞ் கருவறுக்கக் கங்கணங் கட்டி லட்சக்கணக்கான யூதர்களைக் கொல்லச் செய்தான் ஹிட்லர்; அவனைப் போன்றே கோரக் கொலைத் தாண்டவமாடிய இடி அமீன், போல்போட் என வரலாற்றின் பக்கங்களைக் குருதிமயமாக்கியவர்கள் எத்தனையோ பேர். 

இந்திரா காந்தியின் கொலையை அடுத்து ஒரு பாவமும் அறியாத நூற்றுக்கணக்கான சீக்கியர்களின் உயிர் பறித்தவர்கள், ரயில்களில் வெடிகுண்டு வைத்துப் பயணிகளைப் பலியாக்குவோர், பதவி உயர்வும் பரிசும் பெறுவதற்காக உள்நாட்டு அப்பாவிகள் மீது அயல்நாட்டுத் தீவிரவாதிகள் என முத்திரை குத்திச் சுட்டுத் தள்ளிய காஷ்மீர் ராணுவத்தினர், போலி மோதல்களில் மனித வேட்டையாடுகிற காவல்துறையினர் இவர்களின் மனசாட்சி, கொலையைப் பாதகச் செயல் எனக் கருதுவதில்லை.

மத வெறியர்கள் அக்கம்பக்கம் வாழ்கிறவர்களையே வெட்டியும் குத்தியும் கழுத்தையறுத்தும் உயிரோடு கொளுத்தியும் உவக்கிறார்களே! அவர்களது மனசாட்சி இடித்துரைக்கவும் இல்லை. காரணம் என்ன? அந்தக் கொலைகள் தங்கள் மதத்தைக் காப்பாற்றுவதற்கு இன்றியமையாதவை என்னும் கருத்து அந்த மனசாட்சியில் ஆழமாக வேரூன்றியுள்ளது. 

ரெளடிகள், கூலிப்படையினருக்கு மனிதக் கொலை சர்வ சாதாரணம். பட்டப்பகலில் கூடப் படுகொலை புரியும் அளவு துணிச்சல் மிக்கவர்கள் அவர்கள். ஒரு ரெளடி பகைவராலோ காவலராலோ கொல்லப்பட்ட செய்தியைத் தாங்கி வரும் நாளேடு அவன் மீது எத்தனை கொலைகள் நிலுவையில் உள்ளன என்னும் கூடுதல் தகவலையும் தெரிவிக்கிறது அல்லவா? மனசாட்சியின் உறுத்தல் இல்லாமையால் தானே முதல் கொலையோடு அவன் நிறுத்திக் கொள்வதில்லை? 

தீமையைத் தீமையாக அடையாளங் கண்டு எதிர்ப்புக் குரல் எழுப்புகிற மனசாட்சியை உருவாக்கிக் கொள்வது நல்வாழ்வுக்கு அடிப்படைத் தேவை. சிறு வயதிலிருந்தே அறத்துக்கும் சட்டத்துக்கும் உடன்பாடான கருத்துக்களை மட்டுமே ஏற்று வளர்பவர்களின் மனசாட்சி விழுமிய ஆசானாக விளங்கித் தீதொரீஇ நன்றின்பால் உய்த்துச் சீரிய நண்பனாகவும் திகழ்ந்து மிகுதிக்கண் மேற்சென்று இடிக்கும். 

வளர்ச்சிச் சூழ்நிலை எல்லார்க்கும் நல்லதாக அமைவதில்லை என்பது தான் சோகம். இருந்தாலும் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் கடின முயற்சி செய்து மனசாட்சியைத் திருத்திக் கொள்வது சாத்தியமே.


(21/05/2007 ல் தினமணியில் எழுதி வெளிவந்தது)

1 comment:

  1. நம் வாழ்க்கையை நிர்ணயிப்பதில் மனசாட்சியின் பங்கை அழகாக எடுத்தியம்பும் கட்டுரை. இலக்கிய மேற்கோள்களுக்கும், நடைமுறைத் தகவல்களூடான பகிர்வுக்கும் நன்றியும் பாராட்டும்.

    ReplyDelete