Wednesday, 31 July 2013

கருமி


( இது  17 ஆம்  நூற்றாண்டு  பிரஞ்சு  நகைச்  சுவை  நாடக  ஆசிரியர்  மொலிஏரின் - Moliere - புகழ் பெற்ற  படைப்பு. இதன்  கதை  தமிழ்த்  திரைப்படமாய்கஞ்சன்  என்னும்  தலைப்பில்  சுமார்  65  ஆண்டுக்குமுன்பு  வெளிவந்தது. 

இரு  காட்சிகளை  மூலத்திலிருந்து  மொழிபெயர்த்துள்ளேன்)
                            
பாத்திரங்கள்:
                                                
அர்ப்பாகோன் ---  பெருஞ்  செல்வர், கடைந்தெடுத்த  கருமி.  தோட்டத்தில்  பணத்தைக்  கமுக்கமாய்ப்  புதைத்து  வைத்துவிட்டுஅது  திருட்டுப்  போய்விடுமோ  என்ற  நிரந்தர  அச்சத்தில்  நடுங்குபவர்.
லாஃளேஷ் ---  அவருடைய  மகனின்  வேலையாள்.

அங்கம்-1  -  காட்சி-3

அர்ப்பாகோன்--- சீக்கிரம்  போ   வெளியே!   பதில்  பேசக்  கூடாது.   என்  வீட்டிலிருந்து  ஓடிவிடு,    ஒண்ணாம்  நம்பர்  திருடா!

லாஃளேஷ்   ---  (தனக்குள்)   இந்த  மோசமான கிழவரைப்  போல  வேறு  யாரையும்    நான்  ஒருபோதும்   பார்த்ததில்லை;    பேய்தான்  இவர்.

அர்ப்பாகோன் --- என்ன   முணுமுணுக்கிறாய்?

லாஃளேஷ்   -- எதற்காக   என்னை   விரட்டுகிறீர்கள்?

அர்ப்பாகோன்--- என்னிடம்   காரணம்  கேட்க    நீ  யார்?   சீக்கிரம்  வெளியேறு,   உதை  வாங்குவதற்குமுன்.

லாஃளேஷ்   --- உங்களுக்கு  நான்    என்ன  செய்தேன்?

அர்ப்பாகோன் --- உன்னை   வெளியேற்றுவதற்குத்     தக்கதைச்    செய்தாய்.

லாஃளேஷ்   உங்கள்  மகன்என்  எஜமான்,   அவருக்காகக்  காத்திருக்கும்படி   எனக்கு  உத்தரவு  போட்டிருக்கிறார்.

அர்ப்பாகோன்---  வெளியில்  போய்க்  காத்திரு,   என்  வீட்டில்  இருக்காதே!    கம்பம்  மாதிரி  நின்றுகொண்டு,   இங்கே  நடக்கிறதைக்  கவனிக்கிறதும்   ஆதாயம்  தேடுவதும் .  என்  எதிரில்   நான்  நிரந்தரமாக  வைத்திருக்க  விரும்பவில்லை,    என்னுடைய செய்கைகளைப்  பார்க்கிற   ஓர்  உளவாளியை,    தன்  துஷ்டக்  கண்களால்   என்  எல்லா  வேலைகளையும்   நோக்குகிற,    நான்  வைத்திருப்பதை  நோட்டமிடுகிறஅபகரிக்க   எதுவாவது  கிடைக்குமா என்று    அக்கம்பக்கம்  துருவுகிற   ஒரு  துரோகியை.

லாஃளேஷ்   ---  வேடிக்கைதான்!   உங்களிடம்  திருடுவதா?  எல்லாவற்றையும்    மூடி  மறைத்துக்கொண்டு,    இரவும்  பகலும்   காவல்  காக்கிற   நீங்கள் திருடப்படக்கூடியவரா?


அர்ப்பாகோன் ---  எனக்கு  மதிப்பு  உடையதாய்த்  தோன்றுவதை   மறைத்து  வைக்கவும்    என்  இஷ்டப்படி   காவல்  காக்கவும்   நான்  விரும்புகிறேன்.    பிறர்  செய்வதைக்  கவனிக்கிற  காவல்  உளவாளியா  நீ?   ( தனக்குள்):   என்  பணத்தைப்  பற்றி  ஏதாவது  சந்தேகப்படுகிறானோ   என  நடுங்குகிறேன்.   (உரத்து):   நான்  பணத்தை  ஒளித்து  வைத்திருப்பதாக  ஊரெங்கும்  போய்    வதந்தி  பரப்பக்கூடிய  ஆளாக   நீ  இருக்கமாட்டாயா,    என்ன?

லாஃளேஷ்  ---  பணம்  ஒளித்து  வைத்திருக்கிறீர்களா?

அர்ப்பாகோன் --  இல்லைநான்  அப்படிச்  சொல்லவில்லை.  அந்த  மாதிரி  வதந்தியை விஷமத்தனமாய்ப்    பரப்பமாட்டாயா    என்றுதான்  கேட்கிறேன்.

லாஃளேஷ் ---  நீங்கள்   பணம்    வைத்திருந்தால்   என்ன,   இல்லாவிட்டால்  என்ன? எனக்கு    அது  முக்கியமா,   என்னைப்  பொருத்தவரை    இரண்டும்  ஒன்றுதான்  என்கிறபோது?

அர்ப்பாகோன் --  தர்க்கம்  செய்கிறாயா?   பதில்  கொடுப்பேன்கன்னத்தில் .    வெளியே  போ,    மறுபடியும்  சொல்கிறேன்.

லாஃளேஷ்  --  சரிபோகிறேன்.

அர்ப்பாகோன் ---நில்லு.    எதையும்    எடுத்துப்  போகவில்லையே?

லாஃளேஷ்  --  என்னத்தை  எடுத்துப்  போவேன்?

அர்ப்பாகோன் --  வா  இங்கே.  கையைக்  காட்டு.

லாஃளேஷ்  --  இதோ.

அர்ப்பாகோன் --  அந்தக்  கை?

லாஃளேஷ்  -- உம்.

அர்ப்பாகோன் --உள்ளே  ஏதாவது  வைத்திருக்கிறாயா?

லாஃளேஷ் -- நீங்களே  பாருங்கள்.

                (அர்ப்பாகோன்  தடவிப்  பார்க்கிறார்)

லாஃளேஷ்  --  (  (( ((((9 (((தாழ்  குரலில்)    ஆ!  இவரைப்  போன்ற  ஆள்கள்    பயப்படுவது  நடக்குமானால்   பொருத்தமாக  இருக்கும்;    இவரிடம்  திருடினால்    எவ்வளவு  மகிழ்ச்சி  ஏற்படும்!

அர்ப்பாகோன் --  என்னது?

லாஃளேஷ்  -- எது?
அர்ப்பாகோன்-- திருடுவது  பற்றி  என்ன  சொன்னாய்?

லாஃளேஷ்  --  நான்   திருடி  இருக்கிறேனா   என்று   எங்கும்    துருவிப்  பார்க்கிறீர்கள்  என்றேன்.

அர்ப்பாகோன் --  ஆமாம்அப்படித்தான்  செய்கிறேன் .

லாஃளேஷ் -- (தனக்குள்):  கருமித்தனத்தையும்     கருமிகளையும்      ப்ளேக்  நோய்  கொண்டு  போக!

அர்ப்பாகோன் -  என்ன  சொன்னாய்  கருமிகளைப்  பற்றி?

லாஃளேஷ்  --  கொள்ளை  நோய்   கொண்டுபோக   என்றேன்.

அர்ப்பாகோன் -- யாரைப்  பற்றி     அப்படிச்  சொன்னாய்?

லாஃளேஷ்   ---கருமிகளைப்  பற்றி.

அர்ப்பாகோன்  -- யார்  அந்தக்  கருமிகள்?

லாஃளேஷ்  -- கேடு  கெட்ட  மனிதர்கள்.

அர்ப்பாகோன் --யாரை  மனத்தில்  வைத்துப்  பேசினாய்?

லாஃளேஷ்  -- உங்களைப்  பற்றிச்  சொன்னதாய்    நினைக்கிறீர்களா?

அர்ப்பாகோன்-- சரிபோய்த்  தொலை.

                                                                      ( தொடரும்)
                     ++++++++++++++++++


4 comments:

 1. சுவாரஸ்யம்... தொடர்கிறேன் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. தொடர்ந்து வாசித்து என்னை ஊக்கப்படுத்துகிற உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி .

   Delete
 2. அர்ப்பாகோன் போன்ற ஆட்களிடம் வேலை செய்வதென்பது மிகவும் கடினமான காரியம். அதை அவருடைய பேச்சும் நடவடிக்கையுமே உணர்த்திவிடுகின்றன. அவருக்கு ஈடுகொடுக்கும் வகையிலான வேலையாளின் மறுமொழி ரசிக்கவைக்கிறது. நாடகாசிரியருக்கும் நேர்த்தியாய் மொழிபெயர்த்து நாங்களும் அறியத்தந்த தங்களுக்கும் நன்றியும் பாராட்டும். இந்த பிரெஞ்சு நாடகம் தமிழில் திரைப்படமாய் வந்தது என்பது புதிய செய்தி.

  ReplyDelete
 3. வழக்கம்போல் விமர்சித்துக் கருத்துரை வழங்கியதற்கும் என்னைப் பாராட்டியதற்கும் என் உள்ளமார்ந்த நன்றி .

  ReplyDelete